சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்!

தேவலோகத்துப் பசுவான காமதேனு தன் சாபம் நீங்க, வசிஷ்டரின் ஆசிரமம் அமைந்திருந்த

தேவலோகத்துப் பசுவான காமதேனு தன் சாபம் நீங்க, வசிஷ்டரின் ஆசிரமம் அமைந்திருந்த மல்லிகை வனம் என்னும் சிக்கல் தலத்திற்கு வந்து, மேற்குப் பக்கம் உள்ள தீர்த்தத்தில் தன் பாவம் தீர வேண்டுமென நினைத்து நீராடியது. காமதேனு முழுகி எழுந்த போது அதனுள் இருந்த ஆத்ம சக்தி பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அந்த குளமே இன்று "தேனு தீர்த்தம்' எனவும் வழங்கப்படுகிறது அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து

வெண்ணெயைத் திரட்டி எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை மாற்று இடத்தில் சேர்க்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது எடுக்க இயலாமல் அந்த வெண்ணெய் லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்றும் காமதேனு நீராடிய தீர்த்தம் பாற்குளம் என்றும் விளங்குகிறது. இறைவன் வெண்ணெய்யப்பர், நவநீதேஸ்வரர் எனவும் வழங்கப்பெறுகிறார்.

அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தை அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும். சம்பந்தர்

இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது மகாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி மண் தானமாகப் பெற திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இத்தலம் வந்து நவநீதேஸ்வரரை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது.

இதனால் இத்தலப் பெருமாள் "கோல வாமனப்பெருமாள்' என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருளுகின்றார்.

ஆலயத்தின் முன்பாக கம்பீரமான 7 நிலைகளையும் உடைய ராஜகோபுரத்தைக் காணலாம். அதன் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காண்பது கார்த்திகை மண்டபம். வெளி பிரகாரத்தில் சனீஸ்வரர்,

தட்சிணாமூர்த்தி, மஹாலஷ்மி, துர்க்கை, சண்டீஸ்வரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் உள்ளன. கோயிலின் நடுவில் படிகள் கொண்ட யானை ஏறாத கட்டுமலை உள்ளது. கருவறையில் வசிஷ்ட முனிவரால் நிறுவப்பட்ட மூலவர் நவநீத நாதர் லிங்க வடிவில் காட்சி நல்குகிறார்.

பிரசித்தி பெற்ற சிக்கல் ஆலயத்தில் முருகப்பெருமான் சிக்கல் சிங்காரவேலராக வள்ளி, தெய்வானையுடன் தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அளிக்கிறார்.

அம்பாளுக்கு நெடுங்கண்ணி என்பது பெயராகும். அம்பாளுக்கு வேல் நெடுங்கண்ணி என பெயர் மாறியதற்கு ஒரு வரலாறு உண்டு:

பிரம்மனின் மகன் காசிபன் சிவனிடம் இருந்து பலமான சக்தி பெற்றான். அவனுக்கும் மாயை என்னும் பெண்ணுக்கும் சூரபத்மன், சிங்காசுரன், தாரகாசுரன், அசமுகி ஆகிய அசுரர்கள் பிறந்தனர். சூரபத்மன்

சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து, பல யுகங்கள் உயிர் வாழவும், பல அண்டங்களை அரசாளும் வரத்தையும் பெற்று சிவனுடைய சக்தி தவிர வேறு எந்த சக்தியும் தன்னை அழிக்கக் கூடாது என்னும்

வரத்தைப் பெற்றான். மேலும் இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களைச் சித்திரவதை செய்தான். தேவர்கள் சிவனிடம் தங்களைக் காக்க முறையிட்டனர்.

சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களை அழிக்க, அதிக சக்தி கொண்ட ஆறுமுகனை அவதரிக்க செய்தார் இறைவன். முக்கண்ணனாம் சிவபெருமானின் கண்ணிலிருந்து தெரித்த நெருப்புப் பொறிகள்

சரவணப் பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகளாகி கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரால் வளர்க்கப் பட்டனர்.

முருகப்பெருமான் சூரனை அழிக்க திருச்செந்தூரில் பாடி வீட்டிலேயே பஞ்ச லிங்கங்களை நிறுவி, அர்ச்சனை செய்து சிரத்தையுடன் வழிபட்டார். சிவபெருமான் நேரில் தோன்றி, "போரில் வெற்றி உனக்கே

சித்திக்கும்' என வரம் தந்ததோடு, "உன் அன்னை நீ வெற்றி பெற வேண்டுமென மல்லிகை வனத்தில் தவம் இருக்கிறார். ஆதலால் அங்கு சென்று வேண்டி நீ சக்தியைப் பெற்றுச் செல்' என ஆசி வழங்கினார்.

அதன்படி, முருகப்பெருமான் மல்லிகை வனம் சென்று தாயான சக்தி தேவியிடம் சூரனை வதம் செய்வதற்காக அனுமதி கேட்டார். சக்தியும் தன் தவ வலிமையால் வேல் ஒன்று உருவாக்கி அதனை

இத்தலத்தில் சிங்காரவேலவருக்கு வழங்கினார். அந்த வேலைக் கொண்டு சூரனை வதைத்து அவனை மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆக்கிக் கொண்டார் செந்தூர் குமரன். குமரனுக்கு வேல் வழங்கியதால் இங்கு எழுந்தருளியுள்ள அம்மன் "வேல்நெடுங்கண்ணி அம்மன்' என்னும் திருநாமம் பெற்றார்.

திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நிகழ்ந்தாலும் அது நடக்க வித்தாக உருவானது சிக்கலில் தான். மேலும் "சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்' என்ற சொல் வழக்கும் உண்டு.

இத்தலத்தில் நடைபெறும் சஷ்டித் திருவிழாவின்போது, வேல்வாங்கும் விழாவில் தாயிடம் வேல் வாங்கிக் கொண்டு முருகப் பெருமான் தன் சந்நிதியில் வந்து அமர்வார்.

பின்னர், சக்தி வேலின் வீரியத்தின் காரணமாக, சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய்ப் பெருகும் காட்சியை இன்றளவும் காணலாம். பட்டுத் துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை பெருக்கெடுக்கும் அற்புதக்காட்சி, காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

சிக்கலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மற்றும் சக்திவேல் வாங்குதல், சிங்காரவேலவருக்கு வியர்வை சிந்தும் தரிசனம் ஆகியவை நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும்.

நவம்பர் 17 ஆம் தேதி சண்முகார்ச்சனை, சூரசம்ஹாரமும், 18 ஆம் தேதி, தெய்வானை திருக்கல்யாணம், 19 ஆம் தேதி வள்ளித் திருக்கல்யாணம் ஆகிய சிறப்பு மிக்க நிகழ்வுகள் நடைபெறும். நவம்பர் 20 ஆம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறும்.

கந்தன் அவதரிப்பதற்கு முன்பே உருவான தலம் சிக்கலாகும். கந்தன் பிறந்தது பழனி, வளர்ந்தது கார்த்திகைப் பெண்களிடம்! அவனது சக்தி வெளிப்பட்டது திருச்செந்தூரில் என்றால் அந்த வெற்றிக்கும் புகழுக்கும் அடித்தளம் சிக்கல் திருத்தலம் ஆகும்.

இத்தகைய சிறப்புகள் உடைய சிக்கல் திருத்தலம், திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பாதையில் கீழ்வேளூருக்கு அடுத்து அமைந்துள்ளது.

- இரா. இரகுநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com