திருக்கயிலாய யாத்திரை! சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை ஆடி சுவாதி

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், கொடுங்கல்லூருக்கு அருகே உள்ள ஊர் "திருவஞ்சைக்களம்!'  இத்திருத்தலத்து நாதனை நாளும் வணங்குவதையே பிறவிப்பெரும் பயனாகக் கருதி வாழ்பவர்
திருக்கயிலாய யாத்திரை! சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை ஆடி சுவாதி

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், கொடுங்கல்லூருக்கு அருகே உள்ள ஊர் "திருவஞ்சைக்களம்!'  இத்திருத்தலத்து நாதனை நாளும் வணங்குவதையே பிறவிப்பெரும் பயனாகக் கருதி வாழ்பவர் சேரமான் பெருமாள் நாயனார். அவர் தன் தந்தைக்குப்பின் தன் சிவத்தொண்டுக்கு எந்தவித தடையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பெருமக்களுக்கு ஆணையிட்ட பின்னரே அரசப் பதவியை ஏற்றுக்கொண்டார்.

சேரமான் பெருமாள் தினமும் சிவபூஜையை நிறைவு செய்யும் நேரத்தில் தில்லை நடராஜப்பெருமானின் நாட்டியச் சிலம்பொலி கேட்கும். அதைக்கேட்டு சிவபெருமானே நேரில் வந்து தன் பூஜையை ஏற்றுக்கொண்டாரோ என்றெண்ணி சேரமான் பெருமாள் பேரூவுவகை அடைவார். இப்படியே பல நாள்கள் சென்றன.

ஒரு நாள் சிவபூஜை நடந்து முடிந்த பிறகும் சிலம்பொலி கேட்கவில்லை. மனம் கலங்கிய சேரமான்பெருமாள் " தான் செய்த சிவபூஜையில் தவறு ஏதும் நேர்ந்ததோ..'  என்று எண்ணி மனம் வருந்தினார். தன் உடைவாளை எடுத்துத் தன்னையே மாய்த்துக்கொள்ள முயன்றார். அச்சமயம் திடீரென்று சிலம்பொலி கேட்டது. இறைவன் வந்துவிட்டதை அறிந்த மன்னருக்கு ஒரே மகிழ்ச்சி. மறுபுறம், அவர் தாமதமாக வந்ததற்கான காரணம் புரியாத தவிப்பு. காரணம் கேட்க, இறைவன் புன்னகையுடன் " மன்னா, உன்னுடைய சிவபூஜையில் குறையொன்றும் இல்லை. நீ விரும்பும் வண்ணம் உரிய நேரத்திற்கு வர நினைத்தபோது அங்கு வந்த என் அடியவர் சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடல்களில் மயங்கி, நேரம் போவது தெரியாமல் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தோம். அதனால் சற்றுத் தாமதமாகிவிட்டது'' என்றார்.

அடுத்த கணமே, சுந்தரமூர்த்தி நாயனாரைப் பார்க்க வேண்டும்,  அவரது தெய்வீக தேவாரப் பாடல்களைக் கேட்டு மகிழ வேண்டும் என்ற பேராவல் சேரமான் பெருமாளைப் பற்றிக்கொண்டது. உடனே தில்லைக்குப் புறப்பட்டுச் சென்று சுந்தரரைச் சந்தித்து, அவருடன் நெருங்கிய நட்பு கொண்டு மகிழ்ந்தார். அவருடன் பல திருத்தலங்களுக்குச் சென்றார். இருவரும் பரமனைப் பாடித் தொழுதனர். 

ஒருநாள் சுந்தரருக்கு பூவுலக வாழ்க்கையின் மீது மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது. பூவுலக வாழ்க்கையை விட்டுக் கயிலாயம் செல்லத் தீர்மானித்தார். சுந்தரமூர்த்தி நாயனாரை திருக்கயிலாயத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வெள்ளை யானை ஐராவதத்தை சிவபெருமான் அனுப்பியிருந்தார்.  மிகுந்த ஆவலுடன் அந்த யானையின் மீதேறிக்கொண்டு கயிலாயம்  புறப்பட்டார் சுந்தரர்.

திருவஞ்சைகளத்தில் சேரமான் பெருமாள் நாயனாருக்கு இந்தச் செய்தி திவ்ய திருஷ்டியால் தெரிய வந்தது. சுந்தரரைப் பிரிய மனமில்லாமல் தவித்தார். அவரது பட்டத்துக் குதிரையான பஞ்சகல்யாணியின் மீது அமர்ந்து அதன் காதில் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினார். உடனே அந்த குதிரை விண்ணில் பறந்தது.  யானை மீதேறி சென்றுக்கொண்டிருந்த சுந்தரமூர்த்தி நாயனாரை நெருங்கி வலம் வந்து வணங்கி, சுந்தரருக்கு முன்பாகவே திருக்கயிலாய வாசலில் போய் நின்றது. சுந்தரரும் வந்து சேர்ந்தார். நண்பர்கள் இருவரும் இறைவன் சந்நிதிக்குச் சென்றனர். இருவரும் ஸ்தூல சரீரத்தோடு திருக்கயிலாயம் சென்றனர். 

அப்படி அவர்கள் இருவரும் சென்றது ஆடிமாதம் சுவாதித் திருநாளாகும்.

திருவஞ்சைக்களம் திருத்தலத்தில் ஆடி சுவாதி திருநாளில் இரு நாயன்மார்களுக்கும் மிகப் பெரிய உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுகின்றது. 

முதல்நாள் நாயன்மார்கள் இருவருக்கும் கொடுங்கல்லூர் பகவதியம்மன் அம்மன் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை வாகனத்திலும்; சேரமான்பெருமாள் நாயனார் வெள்ளைக் குதிரை வாகனத்திலும் எழுந்தருளுகிறார்கள். கேரள மாநிலத்திற்கே உரிய மேளதாள வாத்தியங்களுடன் திருவஞ்சைக்களத்தை அடைவர்.

அடுத்த நாளான ஆடி சுவாதியில் மூலவரான அஞ்சைக்களத்தப்பனுக்கும் இந்த இரு நாயன்மார்களுக்கும் மற்றும் திருக்கோயிலிலுள்ள சகல மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனைகள் மிகவும் சிறப்பாக நடைபெறும்.  இவ்வாலயத்தில்  ஒரே பீடத்தில் இரண்டடி உயரமுள்ள செப்புத் திருமேனிகளாக சுந்தர மூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் காட்சியளிக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் " ஆடி சுவாதி'  திருவிழா இங்கு சிறப்பாக நடைபெறுகின்றது.

கேரளாவில் உள்ள திருவஞ்சைக்களம் திருக்கோயில் சைவ சமயத்துக்கும் தமிழ்மொழிக்கும் சிறப்பைத் தேடித் தந்திருக்கிறது. கேரளத்திலேயே தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம் இது ஒன்றுதான்.
- டி.எம். இரத்தினவேல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com