ஆலய வழிபாடு செய்வதால் மனதுக்கு நிம்மதியும் உள்ளத்தில் ஆனந்தமும் கிட்டுகிறது. அவரவர் எண்ணப்படி இறைவனை வணங்குதலும், போற்றுதலும் நிகழ்வது போலவே தற்காலத்தில் ஆலய வழிபாடுகளும் மிகவும் மாறித்தான் உள்ளன. ஆலயத்துக்கு ஆலயம் முறைகளும் மாறிக்கொண்டு வருவதைக் காண்கிறோம்.
குருவின் தீட்சையையும், குறிப்பிட்ட விதிகளையும் அறிந்துக் கொள்ளாது பலரும் சிவாச்சாரியார் என்ற நிலைக்கு வந்து விட்டனர். பலருக்கு அனுசரணையான முறையில் பூஜைகளை செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.
ஆகம விதிகள்படி பூஜை செய்யப்படும் ஆலயங்கள் மிக்க வலிமையுடையதாகவும் மக்களின் ஆதங்கம் தீர்க்கப்படுவதாகவும் அமைந்துள்ளது கண்கூடு. ஆகமங்கள் என்பது கட்டடக் கலை, பூஜை விதிமுறைகள், ஆலயக் கிரியைகளுக்கான அடிப்படை விதிகள் அடங்கியது.
நித்தியபூஜை விதிகளின்படி பொதுவாக, ஆலயங்களில் ஆறுகால பூஜைகள் நிகழ்த்துதல் வேண்டும். "ஆறுகால பூஜை' என்னவென்று பார்ப்போம்:
உஷக்காலபூஜை (அதிகாலை பூஜை) : இந்த பூஜை, காலை சூரிய உதயத்திற்கு முன்பு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னர் நிகழ்த்தப்படும். அதாவது, சூரிய உதயம் காலை 6.00 மணி என்றால் இந்த பூஜையானது அதிகாலை 4.30 மணிக்குள் செய்தல் வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு இரண்டரை நாழிகையாகும்.
வெண்பட்டு வேட்டி தரித்து ஆலயக் கதவின் முன் நிற்கும் சிவாச்சாரியார் நமச்சிவாயம் என உச்சரித்த பின்னர், ஆலயத்திற்குள் நுழைவார். அங்கே உள்ள நீர் நிலையில் கால்களை அலம்பிக்கொண்டு வலது புறமாக ஆலயத்துள் சென்று நந்தி தேவரையும், துவார பாலகர்களையும் பிரார்த்தித்து அவர்கள் அனுமதியுடன் அர்த்த மண்டபம் புகுவார். புனித நீர் உருவாக்கி தன்மீதும் புறத்தே உள்ள பொருள்மீதும் தெளித்து தூய்மையாக்குவார். பின்னர் நேராக பைரவர் ஆலயம் சென்று முதல் நாள் இரவு வைக்கப்பட்ட திறவுகோலை பூஜை செய்து எடுத்துக் கொள்வார். இப்போது பைரவர் ஆலயத்தில் திறவுகோல் வைப்பதில்லை என்றாகிவிட்டாலும் பாவனையாக திறவுகோலை பெறுகின்றனர். அங்கிருந்து பள்ளியறை செல்வார். அப்போது மங்கள வாத்திய ஒலியும் திருப்பள்ளி எழுச்சியும் ஒலிக்கும்.
துவாரபூஜை முடித்து காலகாலனின் அனுமதி பெறுவதுடன், கதவின் நுழைவுத்துளையை பிந்து வடிவாக தியானித்து, அர்ச்சித்து, நாதவடிவான திறவுகோலைக்கொண்டு சிவசக்தி மந்திர உச்சாடனத்துடன் தாளினைத் திறந்து சிவாச்சாரியார் உள்ளே நுழைவார். இறைவனிடமிருந்து நிர்மால்யங்கள் அகற்றி, பாத்யம், அர்க்யம், ஆசமனீயம் அளித்து முடிப்பார். சக்தியை மட்டும் பள்ளியறையில் விடுத்து பெருமான் விக்ரஹத்தை சிவிகையில் வைத்து மேள வாத்யத்துடன் கோயில் பிரகாரத்தை வலமாக வந்து மூல லிங்கத்தின் முன் வந்து நிற்பார். முறையான முத்திரை காட்டி மலர்களால் மூல லிங்கத்தில் சேர்த்து கற்பூர ஹாரத்தி நிகழ்த்துவார். அதன்பின்னர் மூலவர் கருவறையில் பெருமானுக்கும், சக்திக்கும் ஸ்தான சுத்திகள் அபிஷேக ஆராதனைகளை செய்து மங்கள வாத்தியத்துடன் உஷக்கால பூஜையை முடிப்பார்.
காலை சந்தி: சூரியன் உதித்த நேரத்திலிருந்து ஏழரை நாழிகைக்குள் இப்பூஜை செய்வது அவசியம். அதாவது சூரியன் 6.00 மணிக்கு உதிப்பதாக வைத்துக்கொண்டால் 9.00 மணிக்குள் இந்த காலை சந்தி பூஜையை முடித்தல் வேண்டும். பூஜையின் ஆரம்பத்தில் சூரியனாருக்கு பூஜை செய்து, பிறகு கணேச பூஜை, துவார பூஜை நிகழ்த்துவார். அதன் பின்னர் மூலலிங்கத்திற்கும், பரிவார தெய்வங்களுக்கும் விரிவாக ஆவாகனம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அர்ச்சனை, தோத்திரம், நிருத்தியம் என்னும் வேதங்களில் ஒன்றான பஞ்சக்ருத்யம் கூறி மகாதீபம் காட்டுவார். பூஜையின்போது நித்யாக்னி கார்யமும் நித்ய பலியும் நடைபெறும்.
உச்சிகால பூஜை: இப்பூஜையானது நண்பகலில் நடத்தப்படும் பூஜையாகும். இந்த உச்சிகால பூஜை, உயிரோட்டமானதொரு நிகழ்வு என்பதால் இறைவனாரின் அதீத சக்தியின் வெளிப்பாடு இப்பூஜையால் அவ்வாலயத்தின்கண் உருவாகி அருள்மிகும் என்பது திண்ணம். சிவாச்சாரியார் தனது மற்ற கடமைகளை முடித்தவராய் விக்னேசுவர பூஜை, புண்ணியாகம், பூத சுக்தி, அந்தர்யஜனம், தியானம் ஆகியவற்றை முறையாக செய்தபின்னர், விசேஷ அர்க்யங்கள், திரவிய, மந்திர சிவோகத்தின் பாவனையையும், பூர்வாங்க கிரியைகளும், ஸ்நபன பூஜையும் முடித்து, துவாரபாலகரை வணங்கி, உத்தரவு பெற்று கருவறை புகுந்து, ஆதார சக்தி முதலாக மானசாபிஷேகம்வரை முறையாக பூஜித்து பின்னர், அலங்காரம், ஆவரண பூஜை, தூப, தீப, நைவேத்ய ஆராதனைகள் செய்வார். நடராஜர் மற்றும் சக்தி ஆலயத்துள்ளும் இப்பூஜை தொடர்ந்து நிகழ்த்தி முடிப்பர். பின்னர் இறைவனிடமிருந்து அகற்றப்பட்டு வைத்துள்ள நிர்மால்யங்களை சண்டேசரிடம் சேர்ப்பித்து உச்சிகால பூஜையை நிறைவு செய்வார். பின்னர் நடை சாற்றப்படும்.
சாயரûக்ஷ பூஜை: நிகண்டின்படி, இந்த சாயரûக்ஷ வேளையானது இரவின் துவக்கம். சிவாச்சார்யர்கள் இந்த சாயரட்சை பூஜைக்கான நடை திறப்பின்போது நீராடி, தோய்த்து உலர்த்திய ஆடைகள் அணிந்து உள்நுழைந்து விநாயகர் பூஜையுடன் பூஜையைத் துவக்குவார். சூரியன் மறைவுக்குமுன்னர் மூன்றேமுக்கால் நாழிகைக்குள் இந்த பூஜை முடிக்கப்பட வேண்டும் என்பதால் மாலை 4.30 மணிக்கு முன்னர் இப்பூஜையை நடத்தி முடிப்பார்கள். இந்த கால பூஜையிலும் முறையான ஆவாகனம், அபிஷேகம், அலங்காரம், தூப தீப நைவேத்தியங்கள் உண்டு.
இரண்டாங்கால பூஜை: இந்த பூஜையானது சாயங்கால பூஜைக்குப்பின்னர் 1.30 மணி நேரம் கழித்து இரவின் துவக்கத்தில் நிகழ்த்தும் பூஜையாகும். சிவாச்சாரியார் இந்த கால பூஜையின்போதும், முறையாக ஐந்து ஆவரணங்களுடன் பூஜித்து திரவிய அபிஷேகங்களும் செய்வித்து தூப தீப ஆராதனைகள் நிகழ்த்துவார். பின்னர் தேவி, பரிவார தெய்வங்கள் பூஜையும் முடிப்பார். இச்சமயத்தில் நித்யாக்னி கார்யம், நித்யோத்சவ பலி முதலியவற்றை நிகழ்த்தி சண்டேசுவர பூஜையுடன் நிறைவு செய்வார்.
அர்த்தசாம பூஜை: இரண்டாம் கால பூஜை முடிந்த பின்னர், ஒன்றரை மணி நேரம் கடந்ததும் இந்த அர்த்த சாமபூஜையைச் செய்வார்கள். அபிஷேகத்தின்போது வாசனைத் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்வார். பஞ்சாவர்ணபூஜை முடிந்ததும் போக சக்தியைப் பூசித்து பள்ளியறை எழுந்தருளும் இறைவடிவை சிவிகையில் உள்ள ஊஞ்சலில் வைத்து, தூப தீபங்கள் காட்டி நிவேதித்து, ஆலய வலமாகச் சென்று பள்ளியறை அடைவர். பள்ளியறையானது மிக்க அலங்காரம் கொண்டதாய் பட்டாலான மெத்தை விரிக்கப்பட்ட கலையம்சத்துடன் கூடிய கட்டிலில் தேவியின் வலப்புறத்தில் இறைவனை எழுந்தருளச் செய்வார்கள். நறுமண மலர்களால் அலங்கரித்து நிவேதித்து, ஏலம், இலவங்கம், வெற்றிலை பாக்கு, பழங்களுடன் தட்டினை சமர்ப்பித்து திரையிட்டு பின்னர் சிவாச்சாரியார் பள்ளியறை விட்டு வெளியேறுவார்.
பள்ளியறையானது தாழிட்ட பின்னர் சண்டேசர் பூஜை செய்து, வழக்கம்போல பைரவர் சந்நிதி அடைவர். அங்கே முறையான பூஜைகளுக்குப்பின் திறவுகோலை பைரவர்முன் வைத்து வணங்கி ஒப்புவிப்பர். இவ்வாறு தினமும் நடத்தப்பெறும் ஆறுகால பூஜை நிகழ்வுகள் விசேஷ நாள்களிலும் உற்சவ காலங்களிலும் மாறுபடும்.
- ஈச நேசன் மகஸ்ரீ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



