தீபாவளித் திருநாளில் அதிகாலையில் கங்கையில் நீராடுவது (கங்கா ஸ்நானம்) என்பது எவ்வளவு உயர்ந்ததோ அதைப்போல யமுனை நதியிலும் நீராடுவது அவ்வளவு உயர்ந்தது. ஸ்ரீ கிருஷ்ணன் யமுனை நதிக்கரையிலேதான் குழலூதி பக்தர்களைப் பரவசப்படுத்தி பல நாள்கள் வாழ்ந்த நதிக்கரையாகும்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்திரகாசி மாவட்டத்தில் இமயமலைப் பிரதேசத்தில் பல ஆயிரம் அடி உயரத்தில் “யமுனோத்ரி’ என்ற மலைமீது உற்பத்தியாகி, மத்தியப் பிரதேசத்திலுள்ள சாம்பல் பள்ளத்தாக்கை ஒட்டியும் ஒட்டாமலும் ஓடி, கடைசியில் கங்கை நதியில் சங்கமமாகி, கடலில் கலந்து விடுகிறது இந்த யமுனை நதி. வடக்கு நோக்கிப் பாயும் நதி என்பதுதான் யமுனோத்ரி.
பல நூறு கி.மீ. ஓடும் இந்த யமுனை நதிக்கரையில் எத்தனையோ ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. பெரும்பாலும் இதில் சிவன் ஆலயங்களே நிறைந்திருக்கும். அந்த நதிக்கரையில் “பட்டேஸ்வரர்’ என்ற சிவாலயம் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த பட்டேஸ்வரர் யமுனை நதிக்கரை ஓரங்களில் ஆங்காங்கு எழுந்தருளியிருக்கிறார்.
பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பட்டேஸ்வரர் ஆலயம் மட்டும்தான் பெரிய அளவில் கட்டப்பட்டது. இந்த சிவாலயத்தில் பரமேஸ்வரன் பெரிய மீசையுடன் கம்பீரமாக கற்சிலை வடிவில் லிங்கரூபத்தில் காட்சி தருகிறார்.
தீபாவளித் திருநாளன்று பக்தர்கள் அதிகாலையில் நதிக்கரைக்கு வந்து எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து பட்டேஸ்வரரை தரிசிக்க சிவபூஜைக்குரிய பொருள்களுடன் வரிசையில் நிற்பார்கள். விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் காவி உடை அணிந்த தலைமை சாது ஒருவர் கோயில் கதவைத் திறந்து, விளக்கேற்றி, சம்பிரதாய பூஜைகளை செய்வார். பட்டேஸ்வரருக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் அடுத்தடுத்து செய்வார். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்குவார்.
தீபாவளித்திருநாளில் ஸ்ரீ கிருஷ்ணனும் ராதையும் வந்து கலந்து கொண்டு பக்தர்களை ஆசீர்வதிப்பதாக ஓர் ஐதீகம் உண்டு! அதாவது கிருஷ்ணனின் மூதாதையர்கள் இந்த நதிக்கரையில் வாழ்ந்து வந்ததாகக் கருதி பக்தர்கள் அவர்களுக்காக, அவர்களை நினைவு கூர்ந்து நோன்பிருந்து, படையல் வைத்து அவர்களை வழிபாடு செய்து வணங்குவார்கள்.
இமயமலையின் மேல்பகுதியில், பல ஆயிரம் அடி உயரத்தில் யமுனோத்ரி அம்மன் ஆலயம் உள்ளது. ஆபத்துகள் நிறைந்த இந்த மலைப்பாதையில் ஏறி மேலே சென்றுதான் யமுனோத்ரி ஆலயத்தை அடையமுடியும். கருவறையில் வெள்ளிக்காப்புடன் இரண்டடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் யமுனோத்ரி காணப்படுகிறார். இந்த கோயில் பல ஆண்டுகளுக்குப்பிறகு பிரதாப்ஷா என்ற ஓர் அரசனாலும் அவனுக்குப்பிறகு ஜெய்ப்பூர் மகாராணி குவாரியா என்பவரும் இக்கோயிலை சீரமைத்தனர்.
தீபாவளிக்கு (அமாவாசைக்கு) இரண்டாம் நாள் யம துவிதியை என்ற ஓர் அற்புதமான பண்டிகையை இங்கு பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இந்த பண்டிகையானது மகளைத் தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள். கடுமையான குளிர்காலத்தில் ஆறுமாத காலம் யமுனோத்ரியை அந்த குளிரில் வாடவிடாமலிருக்க, மகளை தாய்வீட்டுக்கு அனுப்பி வைப்பதாக அருகில் உள்ள கர்சாலி என்ற ஒரு சிறு மலைக்கிராமத்திற்குக் கொண்டு சென்று அங்குள்ள கோயில் ஒன்றில் வைத்து இந்த ஆறு மாத காலமும் அங்குள்ள உனியால் என்ற வம்சத்தினர் யமுனோத்ரியை வழிபடுவார்கள்.
யமுனோத்ரி கோயிலுக்கு அருகில் சூரியகுண்டம் என்ற குளம் ஒன்று உள்ளது. இக்குளத்தில் உள்ள தண்ணீர் சூடாக எப்போதும் கொதித்துக் கொண்டே இருக்கும். இதில் அரிசியையும் உருளைக்கிழங்கையும் ஒரு துணியில் கட்டி இந்த கொதிக்கும் நீருக்குள் விட்டு, சிறிது நேரத்தில் வெளியே எடுத்தால், அதில் அரிசி சோறும் வெந்த உருளைக்கிழங்கும் இருக்கும். யமுனோத்ரி தேவிக்கு இந்த அரிசி சோறு மற்றும் உருளைக்கிழங்கை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு கொடுப்பார்கள். இதை பக்தர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்வார்கள்.
தீபாவளியை ஒட்டி நடக்கும் இந்த மூன்று நாள் விழாவில் பக்தர்கள் பெருவாரியாகக் கலந்து கொள்வார்கள். முதல் நாள்- தீபாவளிப்பண்டிகை, இரண்டாம் நாள்- யம துவிதியை, மூன்றாம் நாள்- தேவியைத் தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி, என்று மூன்று நாளும் தீபாவளித் திருநாளாக யமுனை நதிக்கரையில் அமர்க்களப்படும். நாம் தீபாவளியன்று மானசீகமாய் யமுனோத்ரி தேவியை வழிபட்டு தேவியின் பேரருளைப் பெறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மெட்ரோ ரயில் நிலைய மின்தூக்கி கண்ணாடியை உடைத்தவா் கைது

வளைகாப்பு நிகழ்ச்சிக்கு மது வாங்கிய விவகாரம்: காவல் நிலையத்தில் கணவருடன் கா்ப்பிணி தா்னா

கபில தீா்த்தத்தில் வருடாந்திர புஷ்ப யாகம்

மாடியில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


