ஆத்தி மரத்தடியில் அமர்ந்த பரமன்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருவாருர் - திருமருகல் சாலையில் திருமருகலிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ளது திருச்செங்காட்டங்குடி. இத்திருத்தலத்தில் உள்ளது
ஆத்தி மரத்தடியில் அமர்ந்த பரமன்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில், திருவாருர் - திருமருகல் சாலையில் திருமருகலிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ளது திருச்செங்காட்டங்குடி. இத்திருத்தலத்தில் உள்ளது அருள்மிகு உத்தராபதீஸ்வரர் திருக்கோயில். விநாயகப் பெருமான் கயமுகாசுரனைக் கொன்ற போது இப்பகுதி ரத்தத்தால் செங்காடாக ஆனமையால் செங்காட்டங்குடி என்றழைக்கப்படுகிறது.

மூலவர் ஸ்ரீ கணபதீச்சரமுடையார். இறைவி ஸ்ரீ சூளிகாம்பாள். பிரமன் வழிபட்ட லிங்கம், விநாயகர், துர்க்கை, வீரட்டலிங்கம், கஜசம்ஹாரர், கங்காளர், திரிபுராரி, பைரவர் முதலிய அருமையான வேலைப்பாடுடைய திருமேனிகள் அமையப்பெற்ற அஷ்ட மூர்த்தி மண்டபம் கண்டு தொழத்தக்கது.

உற்சவர் ஸ்ரீ உத்தராபதீஸ்வரர். சிறுத்தொண்ட நாயனாருக்கு அருள்புரிய வந்த வைரவக் கோலத்துடன் அருள்பாலிப்பவர். இவருக்கு தினசரி பச்சைக் கற்பூரமும், குங்குமப் பூவும் சார்த்தி ஆறு கால பூஜையும் நடைபெறுகிறது. இவருக்கு ஆனி உத்திரத்தன்றும், மார்கழித் திருவாதிரையிலும், பங்குனி பரணியிலும் அபிஷேகம் நடைபெறுகிறது. உற்சவ காலங்களில் இவரே திருவீதி உலாக் காணுவார். இச்சந்நிதியில் ஒரு மரகத லிங்கம் உள்ளது. தல மரம் ஆத்தி. இந்த மரத்தின் கீழ் உத்தராபதீஸ்வரர் திருவுருவம் உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்களும், அருணகிரிநாதரின் திருப்புகழும் உண்டு.அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் சிறுத்தொண்டர். இவருடைய இயற் பெயர் பரஞ்ஜோதியார். பல்லவ மன்னனின் தளபதியாக பணிபுரிந்து, வாதாபி யுத்தத்தில் சாளுக்கியரைப் போரில் வென்று, திரும்பும்போது உடன் ஒரு விநாயகரைக் கொண்டு வந்து, வாதாபி கணபதி என்ற நாமத்துடன் இங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்.

படைத்தளபதி சிவபெருமானின் திருத்தொண்டர் என்பதை அறிந்த மன்னன் வருத்தமுற்று, அவரை சிவத்தொண்டு செய்யுமாறு அனுப்பி வைத்தான்.

இவருடைய மனைவி திருவெண்காட்டு நங்கை, மகன் சீராளன், சந்தன நங்கை என்ற வேலைக்காரியும் இவரிடம் பணி செய்து வந்தார். அடியார்களுக்கு அமுது படைத்து வந்தார். அடியார்கள் முன்பு தம்மை மிகவும் சிறிய தொண்டராய்க் கருதியதால் சிறுத்தொண்டர் எனப் பெயர் பெற்றார்.

சிவபெருமான் கயிலாயத்திலிருந்து புறப்பட்டு, சுருண்டு நீண்ட சடை, திருநீறு, சங்குக் குழை, கபாலம், சூலம், எலும்பு மாலை, யானைத்தோலாலான ஆடை, அரைஞாண், காலணி அணிந்து, வைரவ சந்நியாசி வடிவம் கொண்டு, தமருகம் ஒலிக்க, அறிவு விளக்கம் செய்யும் வளமையுடைய தமிழ் நாட்டிலுள்ள திருச்செங்காட்டங்குடியை அடைந்தார்.

அவர் வந்த சமயம் சிவனடியாரைத் தேடி, சிறுத்தொண்டர் வெளியே சென்றிருந்தார். "அவர் வீட்டிற்கு வரும்வரை ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருப்போம்,' என்று கூறிய வண்ணம் திருக்கோயிலில் ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருந்தார்.

இல்லம் திரும்பிய தொண்டரிடம், சிவனடியார் வந்த தகவலையும், கோயிலில் இருப்பதையும் மனைவியார் சொல்ல, அங்கு சென்று அவரைக் கண்டு வணங்கி லரவேற்றார். தாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை குறையில்லாத ஐந்து வயதுள்ள ஆண் குழந்தையை, பெற்றோர் அரிந்து சமைத்த கறியை உண்போம் என்று சிவனடியார் பதிலுரைத்தார். சிறுத்தொண்டரும் மகிழ்ச்சியுடன் இல்லம் சென்று மனைவியுடன் சேர்ந்து தனது மகனைச் சமைத்து அடியாரை அமுதுண்ண அழைத்தார்.

அவரும் உணவு உண்ண அமர்ந்தபோது மகனையும் உண்ண அழைக்குமாறு கூற, வெளியில் சென்று, "சீராளா...' என்றழைக்க, மகன் ஓடி வந்தான். வியப்புடன் வீட்டினுள் சென்றபோது, சந்நியாசியைக் காணவில்லை!.

இலையில் வைத்திருந்த பதார்த்தத்தையும் காணவில்லை! அவரைத் தேடி வெளியே வர, மறைந்தருளிய அவ்வயிரவர் உமையம்மையாருடனும், முருகப்பெருமானுடனும் சேர்ந்து, பூதகணங்கள், முனிவர்கள், தேவர்கள், வித்தியாதரர்கள் துதி செய்ய, நீண்ட வானவெளியில் காளையின் மீது வெளிப்பட்டு எழுந்தருளினார்.

சிறுத்தொண்டர் குடும்பத்துடன் கீழே விழுந்து வணங்கினர். துதித்து நின்ற அனைவரையும் நித்தியமாய் என்றும் தம்மை வணங்கியிருக்கும்படி, தம் சிவலோகத்துள் தம்முடன் அழைத்துச் சென்றார். சிறுத்தொண்டர், மனைவி திருவெண்காட்டு நங்கை, மகன் சீராளன், வேலைக்காரி சந்தன நங்கை முதலியோரின் மூலத் திருமேனிகள் இங்கு உள்ளன.

ஆண்டுதோறும் சித்திரைப் பரணியில் உத்தராபதீஸ்வரர் அமுது செய்த ஐதீக விழா இத்தலத்தில் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு, இந்நாள் ஏப்ரல் 24 -இல் அமைகிறது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com