/

காசி ஷேத்திரம்

காசியை குறித்துச் செல்லும் கால்களே கால்களாகும்காசியை வாழ்த்தும் நாவே நாவெனக் கூறலாகும்காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகளாகும்

News image
Updated On :7 ஆகஸ்ட் 2020, 12:30 am

"காசியை குறித்துச் செல்லும் கால்களே கால்களாகும்
காசியை வாழ்த்தும் நாவே நாவெனக் கூறலாகும்
காசியின் கதைகள் கேட்கும் செவிகளே செவிகளாகும்
காசியை இனிது காணும் கண்களே கண்களாகும்'

என்று கூறுகிறது கந்த புராணத்தில் "காசி காண்டம்' என்னும் பகுதியில் உள்ள ஒரு பாடல்.

அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகாபுரி, துவாரகா ஆகியவற்றை மோட்ச புரி தலங்கள் என்று குறிப்பிட்டுச் சொல்வார்கள். மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகாபுரி, துவாரகா அயோத்யா, சைவ சப்த மோக்ஷ தாயகம் என்பது ஸ்லோகம்.

ராமஜன்ம பூமியான அயோத்யா கிருஷ்ண பரமாத்மா பிறந்த பூமியான மதுரா, கங்கை விண்ணிலிருந்து பூமிக்குப் பிரவேசம் செய்யும் தலமாகிய மாயா எனப்படும் ஹரித்துவார், காசி என்ற புண்ணிய úக்ஷத்திரம், "நகரேஷு காஞ்சி' எனப் புகழப்படும் காஞ்சி மாநகர், அவந்திகா எனும் உஜ்ஜயினி மற்றும் கிருஷ்ண பரமாத்மா ஆண்டருளிய துவாரகா ஆகிய ஏழும் மோட்சபுரிகள் என்று குறிப்பிடப் பெறுகின்றன. இத்தலங்கள் பிறப்பது, வாழ்வது, (நிலைப்பது), இறப்பது என்ற மனித வாழ்க்கையின் ஆதி, நடு, அந்தம் என்ற மூன்று நிலைகளுக்கும் தலையாய இடங்கள் என்று கூறுகிறது புராணம்.

சேஷத்ரம், என்றால் நெல் விளையும் இடம் என்று பொருள். எவ்வாறு தூவப்படும் ஒரு நெல், பத்து நூறாகி, ஆயிரம் லட்சமாகி செழிக்கின்றதோ அவ்வாறு இத்தலங்களில் செய்யும் நற்காரியங்களும் ஒன்று பத்தாகி, நூறு ஆயிரமாகி, லட்சம் கோடியாகிப் பெருகி வாழ்வுக்கு நற்பயனை அளிக்கின்றன.

காசியைப் பற்றி பொதுவான செய்திகளை முதலில் பார்ப்போம் . காசி மாநகரம் வட இந்தியாவில் அலகாபாத்திலிருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ளது. காசி என்னும் சொல்லுக்கு "ஒளிமயமானது' என்று பொருள். இவ்வூருக்கு "வாரணாசி' என்று மற்றொரு பெயரும் உள்ளது. காசி நகருக்கு வடக்கே வாராணா என்ற நதியும் தெற்கே அசி எனும் நதியும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்த நகரமாதலால் "வாரணாசி' என்று பெயர் அமைந்தது. இதனைப் "பூலோகக் கைலாசம்' என்றும் அழைப்பர்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று விசேஷங்களும் ஒருங்கே அமையப் பெற்றது காசி என்னும் புண்ணிய úக்ஷத்ரம். மூர்த்தி விசேஷம் பற்றி முதலில் காண்போம்.

மூர்த்தி: பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் முதலாவதாகக் கூறுவது காசி விஸ்வேஸ்வரர் எனும் விஸ்வநாதர் ஆகும். ஆதி சங்கரர் நடைப் பயணமாக காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரையில் பயணித்து, பன்னிரு ஜோதிர்லிங்க சேஷத்திரங்களை நிறுவினார். இதில் தலையாயது காசி விஸ்வநாதர். காசி விஸ்வநாதரை யாராக இருந்தாலும் அருகில் சென்று கைகளால் ஸ்பரிசித்து வணங்கும் பேற்றினைப் பெறலாம்.

விஸ்வநாதர் எளிமையின் வடிவம் . அவரது செüலப்யம் சிறப்புமிகு குணம் ஆகும். காசியில் உள்ள விஸ்வநாதரைத் தொடும் உரிமை அனைவருக்கும் உண்டு என்பதாலோ என்னவோ "காசியில் வாழும் மனிதர்களைத் தொட்டாலே பிறவித் துன்பம் கிடையாது' என்று கூறுகிறது காசிக் காண்டம். ஜோதிர்லிங்கமான காசி விஸ்வநாதருக்கு மூன்று வேளையும் பூஜைப் பொருள்களை வழங்கி பூஜை செய்யும் பேற்றினைப் பெற்றவர்கள் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர்.

காசி நகரத்தார் சத்திரம் விஸ்வேசர் கோயிலுக்கு அருகேயுள்ள குடோலியா சந்நிதியை அடுத்து அமைந்த கட்டடமாகும். கடந்த 200 ஆண்டுகளாகச் செயல்படும் இந்நிறுவனம் பசு மடம், நந்தவனம் உண்டாக்கி விஸ்வநாதருக்கு பாலும் மலர்களும் வழங்குகிறது. உஷத் காலத்தில் "பத்தாஸ் மிட்டாய்' எனப்படும் இனிப்புப் பண்டம், உச்சிக் காலத்தில் பருப்புப் பொங்கல், அர்த்த சாமத்தில் சர்க்கரைப் பொங்கலும் நகரத்தார் சத்திரத்தில் இருந்து அனுப்பப்படும் பொருள்களைக் கொண்டு கோயில் மடப்பள்ளியில் செய்து, நைவேத்யம் செய்யப்படுகிறது.

தினமும் மூன்று முறை விஸ்வேஸ்வரருக்கான பூஜை, அபிஷேக, அலங்காரப் பொருள்களை நகரத்தார் சத்திரத்திலிருந்து எடுத்துச் செல்லும் போது, மேளம் தாளம் ஒலிக்க, "சம்போ சம்போ சங்கர மகாதேவா' என்று கோஷமிட்டுச் செல்வதைத் தெருக்களில் இருப்பவர்களும், கடைகளில் உள்ளவர்களும், கட்டடங்களில் வசிப்பவர்களும் மரியாதையுடன் சென்று, பார்த்து தலை வணங்குவர்.

ஊரடங்குச் சட்டம் அமலில் இருந்த போதும்கூட "சம்போ' நேரப்படி தவறாமல் நடைபெறும் என்றும் பஞ்சாப் மெயில் தாமதமானாலும் கூட நகரத்தார் சம்போ நேரப்படி வந்து விடும் என்பதும் காசியில் பழமொழியாகவே வழங்கப்படுகிறது.

குளிர் காலத்தில் ஐப்பசி மாதம் வஸந்த பஞ்சமியிலிருந்து மாசி மாதம் சிவராத்திரி வரை குளிர்கால சட்டை (மக்மல் பட்டால் ஆனது) காசி விஸ்வநாதருக்கு அணிவிக்க காசி நகரத்தார் கட்டளை உண்டு என்பதும் சிறப்பாகும்.

(அடுத்த இதழில்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.