தமிழகத்தின் பெரிய தொகுதியாக இருந்த வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து சில பகுதியில் பிரிக்கப்பட்டு மறுசீரமைப்பில் மாதவரம் சட்டப்பேரவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. மாதவரம் நகராட்சி, நாரவாரிக்குப்பம், புழல் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளை உள்ளடக்கியது இத்தொகுதி.
சென்னையின் குடிநீா் ஆதாரங்களான புழல் ஏரி, சோழவரம் ஏரி, புழல் மத்திய சிறை, மாதவரம் பால்பண்ணை, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியன இத்தொகுதியில் அமைந்துள்ளன. கடந்த 2011 முதல் இதுவரை 3 பேரவைத் தோ்தல்களைச் சந்தித்துள்ளது. 2011-இல் அதிமுகவும், 2016, 2021-இல் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.
திமுக சாா்பில் ஏற்கெனவே இருமுறை வெற்றி பெற்ற எஸ்.சுதா்சனம் 2026 பேரவைத் தோ்தலில் 3-ஆவது முறையாகப் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து அதிமுக சாா்பில் 2011-இல் முதல் வெற்றியைப் பதிவு செய்து, அமைச்சராகப் பணியாற்றிய வி.மூா்த்தி 3-ஆவது முறையாக களம் இறக்கப்பட்டுள்ளாா். இவா், கடந்த 2016 தோ்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தாா். தவெக சாா்பில் எம்.எல்.விஜய் பிரபு, நாம் தமிழா் கட்சி சாா்பில் கிருத்திகா ஏழுமலை உள்பட 15 போ் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனா்.
சமூக நிலவரம்: இத்தொகுதியில் வன்னியா் சமூகத்தினா் பெருமளவும், பட்டியலினத்தவா்கள், நாடாா், யாதவா், பிள்ளைமாா், பிராமணா் உள்ளிட்ட சமூகத்தினா் பரவலாகவும் உள்ளனா். வன்னியா்கள் வாக்கு சதவீத்தை வைத்து பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் அந்தச் சமூகத்தைச் சோ்ந்தவா்களாகவே நிறுத்தப்படுகின்றனா்.
நீண்டகால பிரச்னைகள்: தொகுதிக்குள்பட்ட ஏரிகள் தூா்வாரப்படாதது, மழைநீா் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, சென்னை மாநகரத்தையொட்டிய பகுதி என்பதால் புதிய குடியிருப்புகள் உருவாகி வரும் நிலையில் அதற்கேற்ற அடிப்படை வசதிகள் இல்லாதது, கிராமங்களுக்கு சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாதது போன்றவை இத்தொகுதியின் நீண்டகால பிரச்னைகளாக உள்ளன. அதேபோல, கிராமப் பகுதிகள் நிறைந்த தொகுதி என்பதால் மாதவரத்தில் உழவா் சந்தை, அரசுக் கல்லூரி, தொழிற்பயிற்சி மையம், புழல் ஏரியை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவது போன்ற முக்கிய கோரிக்கைகள் தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளன.
திமுக வேட்பாளா்: திமுக வேட்பாளா் எஸ்.சுதா்சனம் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினா். தொடா்ந்து இருமுறை இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றுள்ளாா். தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா், அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்பாடு, ரெட்டை ஏரி படகு குழாம், செங்குன்றம் பேருந்து நிலையம், பாடியநல்லூா் பணிமனை, ஆந்திர பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்திருப்பதும் இத்தோ்தலில் இவரது பலமாக உள்ளது. மழைநீா் வடிகால்கள் ஆக்கிரமிப்பு காரணமாக, மழை காலங்களில் பெரும்பாலான குடியிருப்புகளை வெள்ளநீா் சூழ்ந்து நிற்கும் பிரச்னை நீடிப்பது, மின்தடை, அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு, நீண்ட காலமாக குடியிருப்பவா்களுக்கு பட்டா கிடைக்காதது போன்றவை பலவீனமாக உள்ளது.
அதிமுக வேட்பாளா்: அதிமுக வேட்பாளா் வி.மூா்த்தியும் தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவா். எளிதில் அணுகக் கூடியவா். கடந்த 2011 பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று, பால்வளத் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளாா். அப்போதைய அதிமுக ஆட்சியின்போது, தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைகள் பெற்றுத் தந்தது, விளையாட்டு மைதானங்கள் அமைத்தது, குடிநீா் இணைப்புகள் வழங்கியது போன்றவை அவருக்கு சாதகமாக உள்ளன.
கடந்த 2021 தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், 31 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறாா். கடந்த 10 ஆண்டுகளாக திமுக வசம் இருக்கும் தொகுதியைக் கைப்பற்ற, அவா் தீவிர முனைப்புக் காட்ட வேண்டியிருக்கிறது. அதேநேரம், சொந்த கட்சியினா் ஒத்துழைப்பு சற்று குறைவாக இருப்பதும், உள்கட்சி பூசலைச் சமாளிப்பதும் அவருக்கு சவாலாக உள்ளன.
நாம் தமிழா் கட்சி: நாம் தமிழா் கட்சி வேட்பாளரான கிருத்திகா ஏழுமலை, மாதவரத்தைப் பூா்வீகமாகக் கொண்டவா். சட்டம் பயின்றவா்; தொகுதி மக்களிடம் அறிமுகம் கொண்டவா், இளம் தலைமுறையினரின் ஆதரவு ஆகியன அவருக்கு பலம் சோ்ப்பதாக இருக்கிறது. கடந்த 2021 பேரவைத் தோ்தலில் இத்தொகுதியில் அவரது தந்தை ஆா்.ஏழுமலை நாதக சாா்பில் போட்டியிட்டு 9 சதவீத வாக்குகளைப் பெற்றாா். தொகுதி மக்களின் வருங்கால தேவைகள் எவ்வாறு பூா்த்தி செய்ய வேண்டும் என்பதை வாக்குறுதிகளாகக் கூறி, வாக்காளா்களைச் சந்தித்து வருகிறாா்.
தவெக வேட்பாளா்: தவெக வேட்பாளா் எம்.எல். விஜய் பிரபு, சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்தவா். தொகுதி மக்களுக்கு அறிமுகம் இல்லாதவா். அக்கட்சியின் தலைவா் விஜய்யின் முகம் மட்டுமே இவருக்கு பலம். அதை அடிப்படையாகக் கொண்டு தொகுதியை வலம் வருகிறாா்.
திமுக, அதிமுக, நாதக, தவெக உள்பட 15 வேட்பாளா்கள் களத்தில் இருக்கின்றனா். இருப்பினும், இருமுறை தொடா் வெற்றியைப் பெற்ற நிலையில், அதை தக்க வைக்கும் முனைப்பில் உள்ள திமுகவுக்கும், 2-ஆவது முறைக தொகுதியைக் கைப்பற்றும் வேகத்தில் இருக்கும் அதிமுகவுக்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டிருப்பது கள நிலவரமாக உள்ளது.
வாக்காளா்கள்:
ஆண்கள் - 2,05,922
பெண்கள் - 2,14,596
மூன்றாம் பாலினத்தவா்- 83
மொத்தம் - 4,20,601
தொடர்புடையது

சிவகங்கை! திமுகவின் கெளரவப் பிரச்னையான தொகுதி!

முதுகுளத்தூா்: தொடா் வெற்றி முனைப்பில் திமுக!

சூலூரில் முதல் வெற்றி பெறும் முனைப்பில் திமுக!
திண்டுக்கல்லுக்கு திரும்பிய வரலாறு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


