ஜடாமுடியே ராஜ மகுடம்!
மூர்த்தி நாயனார், 63 நாயன்மார்களில் 15-ஆம் நிலையில் உள்ளவர் என்று சேக்கிழார் புராணம் கூறுகிறது. வைசிய குலத்தில் அவதரித்த இவர் பலசரக்கு வியாபாரம் செய்து வந்தார்.


மூர்த்தி நாயனார், 63 நாயன்மார்களில் 15-ஆம் நிலையில் உள்ளவர் என்று சேக்கிழார் புராணம் கூறுகிறது. வைசிய குலத்தில் அவதரித்த இவர் பலசரக்கு வியாபாரம் செய்து வந்தார். மூர்த்தி நாயனார், பாண்டிய மன்னனைப்போல் சொக்கநாதரிடம் அதீத பக்தி கொண்டவர். தினமும் சுந்தரேஸ்வரரை சென்று தரிசித்தால் மட்டுமே அன்றைய தினம் புனிதம் அடைந்ததாக நினைப்பார்.
சிவனார் எப்போதும் சந்தன மணத்துடன் இருக்கவேண்டுமென ஒரு பெரிய சந்தனக் கட்டையை எடுத்துச் சென்று அக்கோயிலிலேயே சந்தனம் அரைக்கும் கல்லில் கட்டையை நன்றாகத் தேய்த்து, மையாக வரும் சந்தனத்தை இறையனாருக்கு தினசரி தந்து பரவசமடைவார்.
அந்தக் காலத்தில் கர்நாடகத்தை ஆண்ட வடுக மன்னனின் திடீர் படையெடுப்பால் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கொல்லப்பட்டு, மதுரை வடுக மன்னனின் வசமானது. அம்மன்னன் சமண மதத்தைப் பின்பற்றுபவராதலால், அனைவரும் சமணராக மாற வேண்டும். மறுத்தால் சிரச்சேதம்; கொடுமைகள் தலைவிரித்தாடின.
மூர்த்தி நாயனாரின் சிவத் தொண்டினை கேள்வியுற்ற வடுக மன்னன், "இவர் சந்தனக்கட்டை வாங்கும் இடங்களில் யாரும் அவருக்கு சந்தனக் கட்டை கொடுக்கக் கூடாது' என ஆணையிட்டான்.
மூர்த்தி நாயனார் "சொக்கா உனக்கு இன்று சந்தனம் கொடுக்க இயலவில்லையே' என மனம் நொந்தார். பின்னர், மனதைத் தேற்றிக்கொண்டு, எப்போதும்போல் சந்தன மேடைக்குச் சென்றார். ஈசனை மனதில் நிறுத்தி, சந்தனக் கட்டைக்குப் பதில் தன் இரு கைகளையும் சந்தனக் கட்டையாக நினைத்து அந்த கருங்கல் மேடையில் தேய்க்க ஆரம்பித்தார்.
கை தேய்ந்தது, ஒரே ரத்தமும் சதையும் பீறிட்டு வெளிவந்தது கூடத் தெரியாமல் திருஐந்தெழுத்து மந்திரத்தைக் கூறிக்கொண்டிருந்தார்.
இதனைக் காணச் சகியாத முக்கண்ணன் சுந்தரேஸ்வரன் - "நில்லடா மூர்த்தி... உன் பக்தி என்னைப் பதைக்கச் செய்கிறது. உன் பிரேம பக்தியை மெச்சி, உன்னை இந்தப் பாண்டிய நாட்டின் மன்னனாக ஆக்குகிறேன்' என அசரீரி வாக்கு அருளினார்.
அன்றிரவு, வடுக மன்னனுக்குத் தீராத நோய் வந்து உடனே இறந்துவிட்டான். மறுநாள் அவனது ஈமக்கிரியைகள் முடிந்தபின், வாரிசு இல்லாத அம்மன்னனுக்கு பதில் என்ன செய்யலாமென மந்திரிமார்கள் ஒன்றுகூடி விவாதித்தனர். அரசக் கொள்கையின்படி பட்டத்து யானையின் கண்களைக் கட்டி அதன் தும்பிக்கையில் மலர்மாலையைக் கொடுத்து அனுப்பினர்.
அம்மாலை யார் கழுத்தில் விழுகிறதோ அவரையே இந்த பாண்டிய நாட்டின் மன்னராக ஏற்போமென விவாதித்து, அப்படியே செய்தனர்.
சுந்தரேஸ்வரர் கோயில் வாயிலில் நின்றிருந்த மூர்த்தி நாயனாரின் கழுத்தில் அந்த மாலை விழுந்தது. அதனை ஏற்ற நாயனார், "நான் ராஜ மகுடம் தரியேன்; என் ஜடாமுடியே ராஜ மகுடமாய் இருக்கும்; காவித்துணி அணிந்து என்னை சிவ பக்தனாய் தொடரச் செய்தால் ஆட்சிப் பொறுப்பினை ஏற்கிறேன்' என்றார்.
அனைவரும் ஏற்றுக் கொண்டதால் அரச பதவியை ஏற்று நல்லாட்சி செய்து, பின் இறையனாரின் திருக்கைலாய பதவியடைந்தார். மூர்த்தி நாயனாரின் திருநட்சத்திரம் (ஆகஸ்ட் 12) ஆடிக்கிருத்திகையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...