சுப வாழ்வருளும் சம்பா சஷ்டி யோக பைரவர்

திருக்கோயில்களில் திருவிழாக்கள் இறைவனுடைய திருநட்சத்திரம் அல்லது திதியை ஒட்டி கடைப்பிடிக்கப்படுகிறது. 
சுப வாழ்வருளும் சம்பா சஷ்டி யோக பைரவர்
Published on
Updated on
1 min read

திருக்கோயில்களில் திருவிழாக்கள் இறைவனுடைய திருநட்சத்திரம் அல்லது திதியை ஒட்டி கடைப்பிடிக்கப்படுகிறது. 
சித்ரா பெளர்ணமி, ஆனி உத்திரம், ஆடிக் கிருத்திகை, ஆவணி அவிட்டம், புரட்டாசி விஜயதசமி, ஐப்பசி கந்தசஷ்டி, கார்த்திகை சோம வார விரதம், திருக்கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் போன்றவையாகும். 
இவற்றில் சஷ்டி திதியில் வரும் ஐப்பசி கந்த சஷ்டி தவிர, கார்த்திகையில் பிரத்யேகமாக "சம்பா சஷ்டி விழா' பைரவருக்கு நடைபெறுகிறது. அவ்வரலாற்றைக் காண்போம்:
சம்பா சஷ்டி:  இரண்யாட்சன் என்ற அசுரனின் புதல்வர்கள் இருவர். அந்தகாசுரன் மற்றும் சம்பகாசுரன். சிவ பக்தர்களான அவர்கள் தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். இதுகுறித்து தேவர்கள் சிவபெருமானை வேண்டினர். ஈசன் பைரவரைத் தோற்றுவித்து சம்பகாசுரனை அழித்தார். அந்தகாசுரனை அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான திருக்கோவலூரில் வதம் செய்தார்.
பைரவர்கள் அஷ்ட பைரவர்களாகவும், அறுபத்து நால்வராகவும் உள்ளனர். சம்பகாசுரனை கார்த்திகை மாதம் வளர்பிறை சஷ்டியில் வதம் செய்ததால், அந்த சஷ்டி "சம்பா சஷ்டி' என்றழைக்கப்படுகிறது.  
பல மாநிலங்களில் இச்சஷ்டி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் ஆறு நாள்கள் விரதமிருந்து சஷ்டியன்று யோக பைரவரை வழிபட்டு விரதத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர். தமிழகத்தில் சில தலங்களில் மட்டும் சம்பா சஷ்டி கொண்டாடப்படுகிறது.  அவற்றில் ஒன்றான சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புத்தூர் அருள்மிகு திருத்தளிநாதர் திருக்கோயிலைப் பற்றிப் பார்க்கலாம். 
இறைவன் அருள்மிகு திருத்தளிநாதர்.  இறைவி அருள்மிகு சிவகாமி அம்பிகை. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலம்.
அருள்மிகு யோக பைரவர்:  இத்தலத்தின் சிறப்பு யோகாசன நிலையில் அமர்ந்த யோக பைரவரின் திருக்கோலம். இவரை வால்மீகி முனிவர் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. அர்த்தசாமத்தில் புனுகு சார்த்தப்பட்டு வடைமாலை, சம்பா நைவேத்யம் செய்யப்படுகிறது.  
சித்திரை மாத முதல் வெள்ளிக்கிழமை பைரவருக்கு தங்க அங்கி சார்த்தப்படுகிறது. அன்றிரவு குதிரை வாகனத்தில் பைரவர் திருவீதி உலா வருவது வேறு எங்கும் காணப்பெறாத சிறப்பாகும். இவரை இந்திரன் மகன் சயந்தன் வழிபட்டதால் அவன் உருவம் சந்நிதியின் வாயிலில் செதுக்கப்பட்டுள்ளது. 
பைரவர் சந்நிதியில் பிரதி தினம் ராகு காலத்தில் மிளகு தீபம் ஏற்றி, செவ்வரளிப் பூ சாற்றி, தங்கள் கோரிக்கைகள் நிறைவேறப் பிரார்த்தித்து, சுப பலன்களைப் பெறுகிறார்கள். இவ்வாண்டு சம்பா சஷ்டி விழா 20.12.2020 (மார்கழி 5-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

தகவல் தொடர்புக்கு: ரமேஷ் 9842656647; கருணாகரன் 79043 46247.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com