சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சதா

நவகிரகங்களில் ஒருவரான சுக்ரனின் தலம் கஞ்சனூர் ஆகும். இது கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்திலும்; ஆடுதுறையிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்திலும்

News image
Updated On :26 ஜூன் 2020, 9:39 am

நவகிரகங்களில் ஒருவரான சுக்ரனின் தலம் கஞ்சனூர் ஆகும். இது கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறையிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்திலும்; ஆடுதுறையிலிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்திலும் உள்ளது. மதுரை திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனத்தின் நிர்வாகத்தில் இக்கோயில் உள்ளது. இவ்வூருக்கு கம்சபுரம், அக்னிபுரம், பராசரபுரம், பிரம்மபுரி ஆகிய பெயர்களும் உண்டு. பிருகு முனிவரின் புதல்வனான சுக்ரன் தன் சாப நிவர்த்திக்காக இச்சிவனாரை வணங்கி தரிசித்து அருள்பெற்ற தலம். சுக்ரனுக்கு கஞ்சன், பார்கவன் என்ற பெயரும் உண்டு.
 பராசர மகரிஷியின் பித்துப்பிடித்த நிலையை போக்கி அவருக்கு தனியாக "முக்தி தாண்டவம்' ஆடி சிவனார் காட்சி கொடுத்ததாக இத்தலபுராணம் கூறுகிறது. இங்குள்ள சிவனார் சுயம்பு (தான் தோன்றி) ஆவார். இக்கோயில் சோழப் பேரரசர் விக்ரமனால் கட்டப்பட்டு, பின் ராஜகேசரி, குலோத்துங்கன், வீரராஜேந்திரன் மற்றும் விஜயநகரப்பேரரசின் கிருஷ்ணராய மஹாராயரால் பராமரிக்கப்பட்டது. காவிரியின் வடகரையில் தஞ்சைப்பகுதியிலுள்ள 276 சிவத்தலங்களில் இது தேவாரப்பாடல் பெற்ற 36 -ஆவது தலம்.
 இவ்வளவு பெருமைகளை தன்னகத்தே கொண்ட கஞ்சனூர் திருக்கோயிலிலுள்ள அக்னீஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவனாரை; பிறப்பால் வைணவரான சுதர்சனர் என்பவர் பெரும் பக்தியோடு வழிபட்டார். அவர் தன் குழந்தைப்பருவம் முதல் சதா"சிவ' சிந்தனையுடன் திருநீறு மற்றும் ருத்திராட்சம் முதலிய சிவச்சின்னங்களை தரித்து வந்தார். அவரது குடும்பத்தார் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர்களின் சொல்லை அவர் ஏற்கவில்லை. இவ்வூரிலுள்ள மற்றவர்கள் இவரது பக்தியை நம்பாமல் கேலி செய்து "உன் சிவபக்தி உண்மையென்றால் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் ஆன ஆசனத்தில் அமர்ந்து நிரூபி' என அவரைச் சீண்டினர். சுதர்சனரும் "சிவனாரே நம் அண்ட சராசரத்தை இயக்குபவர், அவர் எம்மை காப்பார்" "சிவமே பரம்பொருள்" என்று கூறி திருஐந்தெழுத்து மந்திரமான "நமசிவாய"வை கண்ணை மூடி ஜெபிக்க ஆரம்பித்தார். பேரொளியுடன், நெருப்பின் தாக்கம் ஏதுமின்றி, எந்த வடுவும் இல்லாமல் அனைவருக்கும் சுதர்சனர் சிவனடியாராய் காட்சி தந்தார். இந்த நிகழ்வு இவ்வூரிலுள்ள வரதராஜப்பெருமாள் கோயில் வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், அவ்வூர் மக்கள் அனைவரும் தன் தவறை உணர்ந்து சைவத்தின் மேன்மை அறிந்து அவரை போற்றலாயினர்.
 சுதர்சனர் அனுதினமும் கஞ்சனூரையும் சேர்த்து அவ்வூரைச் சுற்றியுள்ள ஊர்களான திருக்கோடிக்கா, திருவாலங்காடு, திருவாடுதுறை, தென் குரங்காடுதுறை, திருமங்கலக்குடி மற்றும் திருமாந்துறை ஆகிய ஏழு சிவத்தலங்களை தரிசித்த பின்னரே மதிய உணவு உண்பதை ஒரு வழக்கமாகச் செய்து வந்தார். ஒரு நாள் குரங்காடுதுறை சிவனாரை தரிசித்துவிட்டு வெளிவர நினைத்தபோது கருமேகம் சூழ்ந்து, பெரும் மழைப்பிடித்துக் கொண்டுவிட்டது. எதிரிலுள்ள சாலை கூடத் தெரியவில்லை. அப்போது ஒரு பிராமணர் அவர் எதிரில் வந்து இப்படி மழையில் நனைகிறீர்களே என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்று தன் வீட்டில் அறுசுவை உணவினை சுதர்சனருக்கு அளித்தார். வந்தவர் தட்சிணாமூர்த்தியே என்பதை உணர்ந்த சுதர்சனர், அவர் பாதம் பணிந்து தன்னை மாணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டினார். அவரது கோரிக்கையை ஏற்று "சிவஞானத்தை' உபதேசித்த சிவனார், இன்றிலிருந்து "ஹரதத்த சிவாச்சாரியார்" என அழைக்கப்படுவாய் என ஆசிர்வதித்ததாக கஞ்சனூர் புராணம் கூறுகிறது.

 தனக்கு ஏற்பட்ட இறை ஆற்றலை நல்ல முறையில் பக்தர்களின் நலனுக்காகவே வெளிப்படுத்தினார். கஞ்சனூர் ஆலயத்தில் உள்ள கல் நந்தியை "புல்' சாப்பிடச் செய்தது, அரசர் தனக்கு அளித்த பட்டாடையை ஹோமத்தில் போட்டு அதே பட்டு வஸ்திரத்தை அங்குள்ள சிவனாரில் மேல் தென்படச் செய்தது என பல அதிசயங்களை அவர் நிகழ்த்தினார். சிவ தத்துவத்தை தன்னுடைய நூல்களின் மூலம் அனைவருக்கும் அறிய செய்துள்ளார். ஹரதத்தருக்கு தனிக்கோயில் இவ்வூருக்கு வெளியே சிவனாரை இவர் வணங்குவது போன்ற நிலையில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் தைத்திங்களில் "ஹரதத்தருக்கு' காட்சி தந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது.
 பொதுவாக, சுரைக்காயை இறைவனுக்குப் படைப்பதில்லை. கஞ்சனூரில் உள்ள ஓர் ஏழை விவசாயி பெரும் சிவபக்தர். அவரது பக்தியை மெச்சி சிவனார் ஒரு சாது வடிவில் வந்து தனக்கு உணவு அளிக்குமாறு கேட்க, அந்த சிவபக்தர் தயங்கி தயங்கி சுரைக்காயைத்தவிர தன்னிடம் எதுவுமே இல்லையே எனக்கூற; சிவனடியார் உருவத்தில் வந்த இமயோன் "ஒரு பாதி விதைக்கும் ஒரு பாதி கறிக்கும் (பொறியல்)' வைத்துக்கொள் எனக்கூற; அதன்படியே அந்த உழவுத் தொழில் செய்த சிவபக்தன் சுரைக்காயை சமையல் செய்து வந்தவருக்கு தந்தார். அதனை உண்டு மகிழ்ந்தார் அங்கு வந்தவரான சிவனார். அதுமுதல் அந்த விவசாயி "சுரைக்காய் பக்தர்' என அழைக்கலானார்.
 இவ்வாண்டு, ஜனவரி 29 -ஆம் தேதி, புதன்கிழமை, வசந்த பஞ்சமி அன்று "ஹரத்தர் ஆராதனை' அமைகின்றது.
 - எஸ். எஸ். சீதாராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.