கருணை தெய்வம் கற்கோடியம்மன்!
அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் என்பவை அஷ்ட நாகங்கள் எனப் படும். இவை இந்த உலகை காத்து ரக்ஷித்து வருகின்றன என்பது வரலாறு. நேரடியாக காப்பாற்ற முடியாத


அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் என்பவை அஷ்ட நாகங்கள் எனப் படும். இவை இந்த உலகை காத்து ரக்ஷித்து வருகின்றன என்பது வரலாறு. நேரடியாக காப்பாற்ற முடியாத நேரத்தில் தெய்வத்தின் துணையோடு உலக உயிர்களை காப்பது இவற்றின் பணி அப்பணியை சரிவர செய்வதால் உலகம் இயங்குகிறது.
இன்றைக்கு விரிந்து பரந்து பட்டு கிடக்கின்ற சென்னை மாநகரம் அன்றைக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாக சின்ன சின்ன கிராமங்களாகவே இருந்தன. ஒவ்வொரு கிராமத்திலும் இருந்த அந்த கிராமத்தின் காவல் தெய்வத்துக்கும் கிராம தேவதைக்கும் ஊர் கட்டுப்பட்டு நடந்து வந்தது.
சென்னை சேத்துப்பட்டில் ஓடும் கூவம் ஆற்றுக்கும் அண்ணா சாலை ஜெமினி மேம்பாலத்திற்கும் இடைப்பட்ட பகுதி நுங்கம்பாக்கம் என கிராம அளவில் பரவி இருந்தது . கிராமத்திற்கான சிவன், பெருமாள், எல்லைக் காவல் தெய்வங்கள் இவர்களுக்கு மேலாக கிராம மக்களின் நோய் நொடிகளை நீக்கி ஆதரவு நல்கும் கிராம தேவதையாக ஏரிக்கரையின் ஒரு கோடியில் முதலில் புற்றுருவாயும் பின்னர் கல்லுருவாய் இருந்து. ஒரு தெய்வம் அருளிக் கொண்டிருந்தது.
ஏரிக்கரையின் கோடியில் இருந்ததால் அந்த தெய்வத் திருவுரு கோடியம்மன் எனவும் அழைக்கப்பட்டது. அந்த தெய்வம் உருகாத கல் மனத்தையும் உருக்கி அருள் செய்ய வைக்கும் அருளுடை தெய்வமாக இருந்து வந்தது . காலம் காலமாக சிறிய இடத்தில் குடிகொண்டு பூசாரிகளால் பூஜை செய்யப்பட்டு மக்களின் குறை நீங்க காக்கும் தெய்வமாக இருந்து காத்து வந்தாள். வேண்டிக் கொண்ட பக்தர்களின் எதிரியின் கல் மனதைச் கூட கரைத்து இருவரையும் ஒன்றாக்கி வைத்ததனால் கல் நெஞ்சு கரைத்து அனுக்கிரகிக்கும் அம்மன் என்ற பெயரில் கல் (நெஞ்சை)கோள் (கொள்)அம்மன் என்ற பெயர் நாளடைவில் கல்கோடி அம்மன் என மக்கள் வழக்கில் வழங்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
அஷ்ட நாகங்களும் அவளுக்கு கட்டுப்பட்டவை. சப்த நாகங்களில் முதன்மையாக திகழ்வது கார்கோடகன் எனப்படும் ராஜ நாகமாகும். கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க வேண்டியபோது உமையின் பரிந்துரையில் சிவபெருமான் சாபம் நீங்க அருளியதுடன் , "நீ சக்தி தேவியுடன் வாசம் செய்யும் போது நவக்கிரகங்கள் என்னுள் அடக்கம் ஆதலால் ராகு கேதுவால் ஏற்படும் தோஷங்களும் நீங்கும்' என அருளினார்.
சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையின் பல பகுதிகளில் காலரா, வாந்தி பேதி, மலேரியா மற்றும் விஷக்கிருமிகளால் ஏற்படும் நோய்கள் பறவைகள் காய்ச்சல் போன்றவை ஒவ்வொரு குடும்பத்தையும் சின்னாபின்னமாக்கி கொண்டு இருந்தது. பக்தர்கள் அழுது தொழுது புலம்பினர். கவலை நீங்க கார்க்கோடகன் என்னும் கொடிய விஷம் படைத்த நாகத்துடன் இரவிலே உலா சென்று யார் யாருக்கு என்ன என்ன நோய்கள் இருக்கின்றதோ அவற்றையெல்லாம் தீர்த்து வரும் தன்மை பெற்றவளாக அமைந்த அம்மன் கார்கோடகன் உடன் இருந்ததால் கார்கோடக அம்மன் என்று பெயர் பெற்று கற்கோடி அம்மன் என அழைக்கப்பட்டாள்.
பல பூச்சிகள் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் விஷத்தை இறக்குவதாகவும் மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் நோய் தீர்க்கும் காவல் தெய்வமாகவும் கோடியம்மன் காவல் கொண்டு விளங்கி வந்தாள்.
தங்களுக்கு அருள் செய்து அம்மனுக்கு சின்னதாக ஒரு கருவறையை சென்ற நூற்றாண்டிலேயே அமைத்ததாகவும் அது விரிவு செய்யப்பட்டு தற்போது விரிவாக்கப்பட்டு உள்ள நிலையை இத்திருக்கோயில் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் வழியில் நோய்நொடி நீங்கும் காவல் தெய்வமாக கோடியம்மன் அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
திருக்கோயிலில் நுழைந்தவுடன் ஒரு மண்டபமும் அடுத்தது மூலவர் கர்ப்பக்கிரகம் மற்றும் மகா மண்டபம் உள்ளது. மூலவர் சந்நிதிக்கு பின்புறம் தீப்பாஞ்சம்மன் சந்நிதியும் மண்டபத்தின் இடது புறம் தல விருட்சம் வேம்பும் அமைந்துள்ளது.
இதைத்தவிர தீப்பாஞ்சம்மன் என்ற சந்நிதியும் ஸ்ரீ விநாயகர் சுப்பிரமணியர் சப்தகன்னிகள் சிவபெருமான் மற்றும் அரச மர புற்றுமாரியம்மன் ஆகியவை உள்ளன. இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடி திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழாவாக நடைபெறுகிறது.
கண்ணேறு எனப்படும் திருஷ்டி தோஷம் இருந்தாலும் இக்கோயிலில் அம்மனை வணங்கினால் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகளவில் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்லும் திருக்கோயிலாக இருக்கிறது அமாவாசை நாள்களில் அதிகமான மக்களை ஈர்த்து அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இத்திருக்கோயிலைப் பொருத்தவரை ஆடி மாதம் பெரிய திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் அனைத்து நாள்களிலும் மக்கள் அதிக அளவில் வந்தாலும் ஆடி மாதத்தில் நான்காவது ஞாயிற்றுக்கிழமை திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது பிற கோயில்களில் வெள்ளிக்கிழமை காப்புகட்டி ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடக்கும் ஆனால் இங்கு வியாழன் காப்பு கட்டப்படுகிறது ஞாயிற்றுக்கிழமை கூழ் ஊற்றும் பழக்கம் கிடையாது. அனைவரும் வீட்டில் கூழ் காய்ச்சி வைத்திருக்க அம்மன் திருவீதி உலா சென்று கூழ் மூலம் அனுகிரகம் செய்வதாகவும் பின்னர் மறுநாள் காலை திங்களன்று கும்பம் போடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தீப்பாய்ந்த அம்மனுக்கு நவராத்திரி ஒன்பது நாள்களும் அலங்காரம் செய்து அவரிடம் அருள் பெறும் வகையில் அமைந்துள்ளது.
தினமும் காலை ஆறு முப்பது மணி முதல் 11 மணி வரையும் மாலை ஐந்து முப்பது மணி முதல் 9 மணி வரை மக்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். தன்னை நம்பி வரும் மக்களுக்கு நம்பிக்கையின் அடிப்படையில் வேப்பிலை மூலம் மந்திரித்து விடும் செயலும் சிறு சிறு நோய்கள் தீர்ப்பதோடு ராகு - கேது, சர்ப்ப தோஷங்கள் என்று அனைத்து விதமான தோஷங்களும் விலகி திருமணம் கைகூடும். பிரிந்திருக்கும் கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும் மக்களின் துயர் போக்கும் கருணை தெய்வம் என்பது பக்தர்களின் அனுபவக்கருத்து.
ஆடி மாதத்தில் செல்ல முடியாவிட்டாலும் கூட ஏதாவது ஒரு நாளில் சென்று கார்கோடகன் துணையால் விஷ ஜந்துக்களின் நோய்களையும் சரும நோய்களையும் வேப்பிலை வீச்சால் நீக்கும் திருக்கோயிலுக்கு சென்று தரிசித்து வாருங்கள்.
மேலும் விவரங்களுக்கு 9884011521
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...