திருமாலுக்கே திருஷ்டி நீக்கிய ஆழ்வார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கலி 47-இல் உருத்ரோதன வருடம் ஆனி மாதம் சுக்ல பக்ஷம் ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்குல தம்பதி முகுந்தாசார்யாருக்கும் பதுமையாருக்கும் கருடனின்அம்சமாகத் தோன்ற


ஸ்ரீவில்லிபுத்தூரில் கலி 47-இல் உருத்ரோதன வருடம் ஆனி மாதம் சுக்ல பக்ஷம் ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் வேதியர்குல தம்பதி முகுந்தாசார்யாருக்கும் பதுமையாருக்கும் கருடனின்அம்சமாகத் தோன்றினார் "பெரியாழ்வார்' எனப் பின்னாளில் அழைக்கப்பட்ட விஷ்ணுசித்தர். வடபெருங்கோயிலுடையானிடம் பக்தி மிக்கவர். நந்தவனம் அமைத்து மாலைகட்டி பெருமாளுக்கு சார்த்தி மகிழ்ந்தவர் .
மதுரை பாண்டியன் ஸ்ரீவல்லபதேவன் இரவு நகர்வலத்தில் ஒரு திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த புதியவனைக் கண்டு விசாரிக்க... ""ஐயா! நானொரு அந்தணன். கங்கையில் தீர்த்தமாடி வருகிறேன்'' என்றான்.
மன்னன் அவனிடம் ""உலகில் நீ உணர்ந்த நீதி ஏதும் உண்டென்றால் சொல்'' என்று கேட்டான். அவனும் ""மழைக்காலத்துக்காக மற்ற எட்டு மாதங்களிலும், இரவுக்காகப் பகலிலும், கிழப் பருவத்திற்காக வாலிபத்திலும், மறுமைக்காக இம்மையிலும் செயலாற்ற வேண்டும்'' என்ற சுலோகத்தைச் சொன்னார்.
மன்னன் தன் குலகுருவான செல்வநம்பியிடம் நடந்ததைச் சொல்லி ""மறுமைக்காக நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் என்ன?'' என்று கேட்டான். பதிலறியா செல்வநம்பி ""நாட்டின் சான்றோர்களில் தக்க விளக்கம் தருவோருக்கு பரிசாக பொற்கிழி அளிப்போம்'' என்றான். மன்னனும் பொற்கிழியை ஒரு தோரணத்தில் கட்டி சான்றோர்களிடம் தகவல் தர ஆணையிட்டான்.
ஸ்ரீவில்லிப்புத்தூரிலே பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய எம்பெருமான் "பொற்கிழியை அறுத்து வா'வென்றார். "அது பரத்தைத் தெளிந்தவர்களுக்கானது. நானோ ஏதும் அறியாதவன்' என்றார். பரமன் ஏற்க மறுத்தான். மறுநாள் "இது இறைவன் ஆணை' என மதுரைக்குப் புறப்பட்டார்.
மதுரையில் மன்னனும் செல்வநம்பியும் வரவேற்றனர். அறிஞர்கள் சிலர் "வேதங்களின் சாரம் அறியாதவரை வேந்தன் வரவேற்பதா?' என முணுமுணுத்தனர். அபிமான துங்கனான செல்வநம்பி மறுமைக்குத் தேவையான மார்க்கம் காட்ட ஆழ்வாரை வேண்டினான். ஆழ்வாரும் "ஸ்ரீமன் நாராயணனே பரமேட்டி' என்றும் "சரணடைவதே வழி'யென்று பல ஆன்மிக, இதிகாச, புராண மேற்கோள்களால் விளக்கினார்.
பொற்கிழிகட்டிய தோரணமானது தானேயிறங்கி கிழியை அறுக்க ஏதுவாக நின்றது. ஆழ்வாரும் வேந்தரும் மாந்தரும் வியக்க விரைந்து பொற்கிழியறுத்தார்.
மன்னனும் மற்றோறும் அவரைப் பணிந்தனர். மன்னன் இவருக்கு "பட்டர்பிரான்' என்ற பட்டம் கட்டி யானை மேலேற்றி "வேதப்பயன் கொள்ள வல்ல மெய் நாவன் வந்தான்' என்ற விருது ஓதச்செய்து தானும் பரிவாரங்களுடன் நகர்வலம் வந்தான்.
தன் பக்தனின் சீர்மிகு இக்கோலத்தைக் காண ஸ்ரீமன் நாராயணன் பிராட்டியுடன் கருடன் மீதமர்ந்து வந்து தன்னாயுதங்கள், பிரம்மா, ருத்ரன் மற்றும் இந்திரன் முதலான தேவர்கள் துதிக்கக் காட்சி தந்தார்.
ஆழ்வார்க்கு மகிழ்ச்சியானாலும் தன் குழந்தையான எம்பெருமானுக்குக் "கண்ணேறு' (திருஷ்டி) ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி, உள்ளம் துடித்தார். உடனே மக்களின் கவனத்தைத் திருப்பும் வகையில் தன் யானையின் கழுத்து மணியைத் தாளமாகக் கொண்டு, வாழ்த்தி "திருப்பல்லாண்டு' பாசுரங்களைப்
பாடியருளினார்.
""பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல்கோடி நூறாயிரம்
மல்லாண்டதிண்தோள் மணிவண்ணா! - உன் செவ்வடி செவ்வித்திருக் காப்பு
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!''
என மாலவனின் கோலத்தைப் பாடினார். மன்னன் மற்றுள்ள பக்தர்களும் ஜதி சேர்ந்தனர். "வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்த பட்டர்பிரான் வந்தார்' என்ற வாழ்த்தொலிகள் முழங்க, விஷ்ணுசித்தர் வீதிகள்தோறும் உலா வந்த தமிழ்விழா சிறப்பாக நடைபெற்றது. அப்போதிருந்து பரமனைப் போற்றும் போற்றிகளைத் திருவீதிகளில் பாடிச் செல்லும் உலா (பஜனை) துவங்கியது.
சாற்றுமுறை எனும் வைணவ தினசரி வழிப்பாட்டின் தொடக்கம்-முடிவு, வைணவக் கோயில்களின் திருவிழாக்களில் புறப்பாடு முடிந்து திரும்பும்போதும் இன்றளவும் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடப்பட்ட பின்னரே பெருமாளை திருக்கோயிலுக்குள் எழுந்தருள்விப்பர்.
பரிசிலோடு ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பி, வட பெருங் கோயிலுடையானிடம் சமர்ப்பித்து எப்போதும் போல் மாலை கட்டி சாத்தும் தொண்டைத் தொடர்ந்தார்.
மனத்துக்கினிய கண்ண பிரானின் பேரருட் குணங்களை "பெரியாழ்வார் திருமொழி' எனும் திவ்ய பிரபந்தமாக உலகுய்யப் பாடி அருளினார்.
ஆண்டாளைப் போற்றி வளர்த்து "ஒரு மகள் தன்னையுடையேன். உலகம் நிறைந்த திருமகள் போல வளர்த்தேன். செங்கண்மால்தான் புகழால் கொண்டு போனான்' என்ற பெரியாழ்வாரின் கூற்றுக்கேற்ப அரங்கனுக்கு தாரை வார்த்துக் கொடுத்த மாமனும் ஆவார்.
இவரது இயற்பெயர் ராம ஆண்டான். மாலை மனதில் கொண்டதால் "விஷ்ணுசித்தர்' எனப்பெற்றார். இறைவனுக்கே திருஷ்டி கழித்ததால் இவரை ஆழ்வார்களில் பெரியவர் எனும் பொருள்பட "பெரியாழ்வார்' என அரங்கன் அழைக்க, அப்பெயரே வெளியுலகத்துக்கு என்றானது. இவரது வம்சத்தவர் "வேதபிரான் பட்டர்கள்' என்ற திருநாமத்துடன் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்து வருகிறார்கள்.
108 திருப்பதிகளில் பெரியாழ்வார் 20 திவ்யதேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். நாலாயிரத்தில் 473 பாசுரம் கொண்ட பெரியாழ்வார் திருமொழி இவருடையது.
பெரியாழ்வார் கிழியை அறுத்த நிகழ்வு இன்றும் மதுரையில் கொண்டாடப்படுகிறது. தமிழ் போற்றும் உற்சவமான அத்யயன உற்சவத்தின் பகல்பத்தின் முதல்நாளன்று யானை வாகனத்தில் பெரியாழ்வார் பரிவாரங்களுடன் புறப்பாடாகி வீதிகளில் வலம் வர, பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி காட்சி தர, அவருக்கு கண்ணேறு படக்கூடாது எனும் நிகழ்வு மதுரையில் உள்ள மெய்காட்டும் பொட்டல்(ஜான்சிராணி பூங்கா) என்ற இடத்தில் நடைபெறுகிறது. இத்தனை சிறப்புடைய பெரியாழ்வாரின் திருநட்சத்திரம் (சுவாதி) இவ்வாண்டு ஜூன் 30-ஆம் தேதி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...