நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேறு தெய்வம் அறியேன்!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் , திருக்கோளூரில், முன்குடுமிச் சோழிய அந்தணர் மரபில், சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீவைனதேயர் என்னும் கருடாம்சமாக அவதரித்தவர்; ஆழ்வார்கள் வரிசையில் 5-ஆவது ஆழ்வார்

News image
Updated On :1 மே 2020, 1:36 pm

இரா. இரகுநாதன்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் , திருக்கோளூரில், முன்குடுமிச் சோழிய அந்தணர் மரபில், சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீவைனதேயர் என்னும் கருடாம்சமாக அவதரித்தவர்; ஆழ்வார்கள் வரிசையில் 5-ஆவது ஆழ்வார் மதுரகவி ஆழ்வார் ஆகும்.

இவர் தமிழ், வடமொழி புலமை பெற்றவர். திருமாலிடம் பேரன்பும் பக்தியும் பூண்டவர். தமிழில், திருமால் மீது பாடல்களைப் இயற்றி வந்தார். மதுரமான கவிதைகளைப் பாடிய காரணத்தால், இவரை "மதுரகவியார்' என்று அழைக்கத் துவங்கினர்.

குருவின் அழைப்பு

ஒரு நள்ளிரவில், திருக்கோளூர் வைத்த மாநிதிப் பெருமானை எண்ணி, தென்திசை நோக்கி வணங்கினார். அப்போது , தென்திசையில் வானுற வளர்ந்த ஒரு பேரொளியைக் கண்டார். அடுத்தடுத்த நாள்களில் அந்தத் திவ்விய ஒளி, முன்னினும் அதிக பிரகாசத்துடன் விளக்கியது. வியப்பு மேலிட தென் திசை நோக்கி, அந்த ஒளியையே குறியாகக் கொண்டு நடந்தார். இறுதியில் அவ்வொளி சொந்த ஊருக்கு அருகில் உள்ள திருக்குருகூரை அடைந்து பொலிந்து நின்ற பிரான் திருக்கோயிலுக்குள் புகுந்து மறைந்து விட்டது.

மதுரகவியார், ஊராரிடம் ""இங்கு ஏதேனும் சிறப்பு உண்டோ?'' என்று கேட்க, அவர்கள், நம்மாழ்வரது பிறப்பையும் கோயிலில் உள்ள புளிய மரப்பொந்தில் வாசத்தில் இருப்பதையும் கூறினார்கள். மதுரகவியார், திருக்கோயிலினுள் சென்று, நம்மாழ்வாரைத் தரிசித்தார். புளிப்பொந்தில் சின் முத்திரையோடு அமர்ந்து தவம் செய்து கொண்டு இருக்கும் இவருக்குக் பார்வை உண்டா, காது கேட்குமா என அறிய ஒரு சிறு கல்லைத் தூக்கி அருகில் போட்டார். மேலும் ""செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் அது எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?'' என்று வினவு குரல் கொடுத்தார் . ""அத்தைத் தின்று அங்கே கிடக்கும்'' என்று ஆழ்வார் அமர்ந்திருந்த பொந்திலிருந்து எதிர்க்குரல் வந்தது.

குருவைக் கண்டார்தனக்குத் தகுந்த விடை தந்த , நம்மாழ்வாரையே தன் குருவாக கொண்டார் மதுர கவி. குருவருளைப் பெற்று, நம்மாழ்வார் அருளிச்செயல்களைப் பட்டோலையில் பதியும் பணியை மேற்கொண்டார். மதுரகவியாழ்வாருக்கு நம்மாழ்வாரின் பாசுரங்களில் ஈடுபாடு ஏற்பட்டு, நம்மாழ்வாரைக் குறித்து "கண்ணிநுண்சிறுத்தாம்பு' எனத் தொடங்கிய பதினோரு பாசுரங்களால் பரவினார்.

குருவைக் கொண்டாடியவர்

நம்மாழ்வாருக்கு நித்திய நைமித்திக விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திரு விழாக்களில் வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார். திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார். அளவிலா ஞானத்து ஆசிரியர் வந்தார் என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார்.

சங்கப் பலகை ஏறிய பாசுரம்

இதனைக் கேள்வியுற்ற காழ்ப்புணர்வு கொண்ட மதுரைச்சங்க மாணாக்கர்கள் சிலர் வந்து, ""உங்கள் ஆழ்வார் பக்தர் தான். அவர் கடவுள் இல்லை. இவர் சங்கமேறிய புலவருமில்லை? இவரின் திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளுமில்லை. இவரை, வேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகவுடையதாக இல்லை?'' என்று பழித்து உரைத்தனர்.

மதுரகவிகள், ""இவர்களின் இழிச்சொல் பொருளற்றதாக அருள் செய்ய வேண்டும்'' என்று குருவைத் துதித்தார். நம்மாழ்வாரும் ஒரு கிழ அந்தணர் வடிவம் தாங்கி, திருவாய்மொழியில் உள்ள "கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே' என்ற பாசுரத்தின் முதலடியை மட்டும் ஒரு சிற்றேட்டில் எழுதி எடுத்துக் கொண்டு சென்று, சங்கப் பலகையின் மீது வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும் என்று கூறினார். அவ்வாறே, மதுரகவியும் நம்மாழ்வாரின் பாசுரம் எழுதிய ஏட்டை எடுத்துக்கொண்டு மதுரை சங்கப் பலகையில் ஒருபுறம் வைக்க, மறுபக்கம் சங்கப்புலவர்கள் ஏறி அமர்ந்தனர்.

சங்கப் பலகை புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக் கொண்டு மிதந்தது. நம்மாழ்வார் பாடலடியால் சங்கப்புலவர் செருக்கழிந்தனர். பிறகு மதுரகவியாழ்வாருடன் சேர்ந்து நம்மாழ்வாரின் விருது கூறல் முதலியவற்றை முன்னிலும் நன்கு நடத்த நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்பிறகு, மதுரகவிகள், ஆழ்வாரையும் பாசுரங்களையும் பரப்பி சில காலத்துக்குப் பின்பு, பெருமாள் மற்றும் ஆழ்வார் திருவடிகளை அடைந்தார்.

மதுரகவிகளை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்துக் கொள்வதற்கு முக்கியக் காரணம், அவர் நம்மாழ்வாரின் பிரதம சீடராக இருந்து திருவாய்மொழியை நெறிப்படுத்தினார் என்பதே ஆகும். மதுரகவிகளைக் காட்டிலும் நம்மாழ்வார் வயதில் சிறியவரானாலும் அறிவிலும் தமிழிலும் கவித்துவத்திலும் பெரியவராகத் திகழ்ந்ததால் நம்மாழ்வாரையே குருவாகக் கொண்டதால் பிற தெய்வங்கள் எதுவும் தேவைப்படாததால் வேறு எவரையும் பாடவில்லை. பிரபந்தத்தில் இவரது "குருகூர் சடகோபன்' புகழ்பாடும் பாசுரங்கள் 11 மட்டுமே .
இவரது, அவதாரத்தலமான திருக்கோளூரில் இதுவரை இவரது அவதாரத் திருநாளன்று ஆழ்வார்திருநகரியில் இருந்து நம்மாழ்வாருக்கும் பெருமாளுக்கும் சாற்றப்பட்ட சந்தனஅஸ்த பிரசாதம், மாலை-பரிவட்டம், மற்றும் அத்தாழதோசை ஆகியவற்றை நிவேதனம் செய்து பணியாளர் தலையிலேயே சுமந்து திருக்கோளூருக்கு சுமார் 5 கி.மீ. நடந்து செல்வார் .

அதற்குள் திருக்கோளூரில் மதுரகவிகளின் மூல-உற்சவ திருமேனிகளுக்கு அலங்காரத் திருமஞ்சனம் செய்து மாலை புஷ்பம் சார்த்தி வைக்கப்படும். திருக்குருகூரில் இருந்து பிரசாதம் வந்தபிறகு அவற்றையும் சார்த்தி, திருமண்காப்பிட்டு விஸ்வரூபத்தின் போது அத்தாழ தோசையும் விநியோகிக்கப்படும். பின்னர், உற்சவர் திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாள் சந்நிதிக்கு எழுந்தருளி மதுரகவிகளின் கண்ணிநுண் சிறுதாம்பு சாற்றுமுறை சேவையாகும் .

2020 -ஆம் ஆண்டில் மதுரகவியாழ்வாரின் அவதாரத் திருநாள் எதிர்வரும் மே 6 -ஆம் நாள் அமைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.