ஏழ்மையும் எளிமையும்

ஏழ்மையும் எளிமையும்

அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
Published on


அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
ஒருமுறை நபியவர்களின் வீட்டில் நான் நோட்டமிட்டேன்.  அங்கு பதனிடப்படாத மூன்று தோல்கள் இருந்தன.  ஒரு மூலையில் ஒரு கைப்பிடி அளவு கோதுமை கிடந்தது.  நான் இங்குமங்கும் திரும்பிப்பார்த்தேன்.  அவற்றைத் தவிர வேறெதுவும் காணப்படவில்லை.  வீட்டிலிருந்த மொத்த சாமான்கள் அவை மட்டும்தான்.  இதனைப் பார்த்த நான் அழுதேன்.  "ஏன் அழுகிறீர்?' என நபி
(ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.
அதற்கு நான், "யாரஸதிலல்லல்லாஹ்! இந்த ஈச்சம்பாயின் அடையாளங்கள் தங்களுடைய புனிதமேனியில் பதிந்துள்ளன.  வீட்டிலுள்ள சாமான்கள் முழுவதுமே நான் பார்க்கக்கூடிய இவைதாம்.  இதனைப் பார்த்து நான் அழாமல் எவ்வாறு இருக்க முடியும்?' என்றேன்.  அப்போது நாயகம் (ஸல்) அவர்கள், "உமரே, மறுமை வாழ்வு இவ்வுலக வாழ்வைவிட சிறந்ததாகும்' என்றார்கள்.
ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் கடுமையான பசியின் காரணமாக நேராக நிற்க இயலாததால் இரண்டு கற்களை தங்கள் வயிற்றில் கட்டியிருந்தார்கள்.  உலகத்துக்கு வழிகாட்டிய நபி (ஸல்) அவர்கள் எளிய வாழ்க்கையே வாழ்ந்து காட்டினார்கள்.
நபித்தோழர் அலீ (ரலி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் நெருங்கிய நபித் தோழரும், நபியவர்களின் மருமகனும் ஆவார்கள்.  இதோ ஹழ்ரத் அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
""நான் பனிக்காலத்தில் ஒருநாள் வீட்டை விட்டுப் புறப்பட்டேன்.  கடுமையான பசியில் இருந்ததால் உண்ணுவதற்காக உணவு தேடினேன்.
அப்போது நான் ஒரு யூதரின் தோட்டத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தேன்.  அந்த யூதர் தன் தோட்டத்திற்கு வாளியினால் நீர் இறைத்து ஊற்றிக் கொண்டிருந்தார். அவரைச் சுவரிலுள்ள துளையின் வழியாக எட்டிப்பார்த்தேன்.
அப்போது அவர், "அரபியே! உனக்கு என்னவேண்டும்?  ஒரு வாளிக்கு ஒரு பேரீச்சம்பழம் வீதம் தண்ணீர் இறைத்து ஊற்றுகிறீரா?' என்று வினவினார்.  நானும் "சரி!' என்று கூறினேன்.
உடனே அவர் என்னிடம் ஒரு வாளியைத் தந்தார்.  பின்னர், நான் ஒரு வாளித் தண்ணீர் இறைத்ததும், ஒரு பேரீச்சம்பழம் எனக்குத் தந்தார்.  இவ்விதமாக ஒரு கைப்பிடி நிறைய பேரீச்சம்பழங்கள் கிடைக்கும்வரை தண்ணீர் இறைத்துவிட்டு, அவருடைய வாளியை அவரிடம் கொடுத்துவிட்டு, "எனக்கு இவை போதுமானவை' என்று கூறி, அவற்றை உண்டு, தண்ணீரும் குடித்துவிட்டுப் பின்னர் பள்ளிவாசலுக்குச் சென்றேன்.
இச்சம்பவத்தின் மூலம் எத்தனையோ படிப்பினைகள் பெறலாம்.  நபி(ஸல்) அவர்களின் தோழமையில் இருந்து, ஹழ்ரத் அலீ (ரலி) அவர்களின் ஏழ்மையில், நேர்மையான சம்பாத்தியத்திற்காக தண்ணீர் இறைத்து ஊற்றி, கூலியாகப் பெற்றுக்கொண்ட பணிவு, அவர்களின் பசியின்போது ஏற்பட்ட பொறுமை இவைகளெல்லாம் நிகழ்ந்தது மாபெரும் நபித்தோழரின் வாழ்க்கையில்தான். இதனை உணர்வதின் மூலம் நாமும் நல்ல தன்மைகளைப் பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com