வேதாளத்தை அழித்த விலாசன்! 

மும்மூர்த்திகளில் முதலாமவரான சிவபெருமானுக்கு இந்தியா முழுவதும் பல்வேறு கோயில்கள் இருந்தாலும், 12 ஜோதிர்லிங்கங்கள் உள்ள கோயில்கள் பிரசித்தி பெற்றவை:
வேதாளத்தை அழித்த விலாசன்! 
வேதாளத்தை அழித்த விலாசன்! 

மும்மூர்த்திகளில் முதலாமவரான சிவபெருமானுக்கு இந்தியா முழுவதும் பல்வேறு கோயில்கள் இருந்தாலும், 12 ஜோதிர்லிங்கங்கள் உள்ள கோயில்கள் பிரசித்தி பெற்றவை:

குஜராத்தில் சோமநாதர், ஆந்திரம் ஸ்ரீசைலத்தில் மல்லிகார்ஜுனர், உஜ்ஜைனி மகா காளேஸ்வரர், ஓம்காரேஸ்வரர், கேதாரநாதர், மகாராஷ்டிரம் பீமா சங்கர், திரியம்பகேஷ்வரர், வைத்தியநாதர், கிரிஷ்நேஷ்வர், காசி விஸ்வநாதர்,  குஜராத் நாகேஷ்வர், தமிழகம் ராமேசுவரத்தில் ராமநாதர் உள்ளிட்டவை 12 ஜோதிர்லிங்கங்கள் ஆகும்.

உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர்: மத்திய பிரதேச மாநிலத்தின் பழைமையான உஜ்ஜைனி நகரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார் மகாகாளேஸ்வரர். 

புனிதமான சிப்ரா ஆற்றங்கரையில் உள்ள இக்கோயில் மூன்றடுக்குகள் கொண்டதாகும். தேவாரத்திலும் இத்தலம் பாடப்பட்டுள்ளது.  வழக்கமாக கோயில்களில் சிலைகளுக்கு சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும். ஆனால் இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ள மகா காளேஸ்வரர் சுயமாகவே சக்தியை உருவாக்கிக் கொள்பவராக உள்ளார்.

தல வரலாறு: சிவபுராணங்களின்படி, மகா விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் படைப்பில் யார் உயர்ந்தவர் என்பது குறித்த வாக்குவாதம் எழுந்தது. 

இதை சோதிப்பதற்காக சிவபெருமான் மூன்று உலகங்களையும் முடிவில்லாத ஒளியின் தூண் போன்ற ஜோதிர்லிங்கமாகத் துளைத்தார். ஒளி லிங்கத்தின் அடிப்பகுதியைக் கண்டறியுமாறு சிவன் கூறினார். இதையடுத்து விஷ்ணு கீழ்நோக்கியும், பிரம்மன் மேல்நோக்கியும் பயணிக்கின்றனர். 

ஆனால் அடிப்பகுதியை தான் கண்டு பிடித்ததாக பிரம்மன் பொய் கூறினார். அதேநேரம், விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். 

பிரம்மனின் பொய்யால் கடும் கோபமடைந்த சிவபெருமான் யாரும் பிரம்மாவை வழிபட மாட்டார்கள் என சாபமிட்டார். அதே நேரம் பூவுலகம் நிலைக்கும் வரை விஷ்ணு வழிபடப்படுவார் எனக் கூறினார். மும்மூர்த்திகளில் சிவனே முதன்மையானவர் என்பது உறுதி செய்யப்பட்டது.

வேதாளத்தை அழித்த மகா காளர்: உஜ்ஜைனி நகரம் பண்டைய காலத்தில் அவந்திகா என அழைக்கப்பட்டது. அருகே இருந்த வனப்பகுதியில் சாபத்தின் காரணமாக வேதாளமாக மாறிய தூசனன் என்பவன் அங்கே இருந்தான். 

மக்களைத் துன்புறுத்தி, சூறையாடி வந்தான். இதனால் அவந்திகா நகர மக்கள், "விலாசன்' என்ற அந்தணரை அணுகி, தங்களைக் காப்பாற்றுமாறு கோரினர். 

இதையடுத்து, அவர் வேதவிற்பன்னர்களையும், முனிவர்களையும் அழைத்து சிவபெருமானை நோக்கி வேள்வி நடத்தினார். முடிவில் வேள்வி குண்டம் வெடித்து அதில் இருந்து லிங்கம் தோன்றியது. லிங்கத்தைப் பிளந்து கொண்டு ஆவேசமாக வந்த மகா காளேஸ்வரர், வேதாளத்தை அழித்தார். பின்னர் மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கேயே ஜோதிர்லிங்கமானார்.

இக்கோயிலின் கர்ப்பக்கிரகம் மூன்று அடுக்குகளால் ஆனது. மகாகாளர் வட்டவடிவிலான கருவறையில் காட்சி தருகிறார். அடுத்த கருவறையில் ஓம்காரேஸ்வரர் உள்ளார். மூன்றாம்  அடுக்கில் உள்ள நாக சந்திரேஸ்வரர் சிலை, நாகபஞ்சமி தினத்தன்று மட்டுமே பார்வையாளர்களுக்கு திறந்து விடப்படும். அப்பர் இத்தலத்தின் புகழைப் பாடியுள்ளார்.

மகா சக்தி பீடமாகவும்  உஜ்ஜைனி:
உஜ்ஜைனி மகாகாளேஸ்வரர் கோயில் சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இங்குள்ள தேவி, "சக்தி மகா காளி' என அழைக்கப்படுகிறார்.

உற்சவங்கள்: மகா சிவராத்திரி உற்சவம் இங்கு பிரசித்தி பெற்றது. விஜயதசமி மற்றும் வைகுண்ட ஏகாதசியன்று மகாகாளர் ஊர்வலமாகச் சென்று, இரவில் விஷ்ணுவை சந்திக்கும் வைபவம் நடைபெறும். 

அருகில் உள்ள கோயில்கள்: காலபைரவர், உஜ்ஜைனி மகா காளி, சாந்திபனி முனிவர் ஆசிரமம், சிந்தாமணி விநாயகர், திரிவேணி நவகிரகக் கோயில், மங்கள்நாத் கோயில், சித்தர் கோயில்கள் ஆகியவை அருகே உள்ளன.

தரிசன நேரம்: காலை 7 முதல் இரவு 11 மணி வரை.

போக்குவரத்து: உஜ்ஜைனிக்கு மிகவும் அருகே உள்ள விமான நிலையம் இந்தூர் ஆகும் (53 கி.மீ). முக்கிய நகரங்களில் இருந்து உஜ்ஜைனிக்கு ரயில் வசதி உள்ளது. மேலும் போபால், இந்தூர், குவாலியர், ரட்லம், கோட்டா போன்ற ஊர்களில் இருந்து பேருந்து வசதி உள்ளது.
தொடர்புக்கு: 0734-2550563.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com