
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. இவ்வூர், நகரத்தார் என்று சொல்லக்கூடிய நாட்டுக்கோட்டை செட்டியார்கள் அதிகமாக வாழ்கின்ற ஊர்.
இவ்வூரில் உள்ள சிவன் கோயிலில் நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக அருள்பாலிப்பது இவ்வூரில் மட்டுமே. அதனால் இவ்வூர் தமிழகத்து ஊர்களில் தனிச் சிறப்பிடம் பெறுகிறது. இவ்வூருக்குள் நுழைந்தவுடன் பேருந்தை விட்டு இறங்கியதும் நம் கண்ணுக்குத் தெரிவது நெய் நந்தீஸ்வரர் கோயில்தான். இவ்வூரைச் சேர்ந்த நகரத்தார்கள் பெருமுயற்சி செய்து, பொருள் சேகரித்து இக்கோயிலைக் கட்டியுள்ளனர். நிர்வாகப் பொறுப்பையும் கவனித்து வருகின்றனர். நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் எட்டுமுறை கும்பாபிஷேகம் கண்டுள்ளது.
சிவபெருமானும் உமாதேவியும் மீனாட்சி -சொக்கலிங்கேசுவரர் என்னும் பெயரில் இக்கோயிலின் மூலவர்களாக அருள்பாலிக்கின்றனர். இவர்களைத் தவிர விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவகிரகங்கள் போன்ற கடவுளர்களும் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர். இது சிவன் கோயிலாக இருந்த போதிலும் "நெய் நந்தி கோயில்' என்றே அழைக்கப்படுகிறது.
நெய் மணம்: ஊரின் நடுவே அழகுற அமைந்துள்ளது கோயில். உள்ளே நுழைந்ததும் நெய்மணம் கமழ்கிறது. சிவனாரின் சந்நிதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கிறார் நெய் நந்தீஸ்வரர். இவரின் மேனி முழுவதிலும் நெய் அப்படியே உறைந்து போயிருக்கிறது. எவ்வளவு நெய் பூசினாலும் இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லை. மிக சக்தி வாய்ந்த கடவுள் இவர்.
இவரைப் பற்றி கேள்விப்பட்டு, இவரைப் பார்க்க வந்தவர்கள் இன்றும் நல்ல நிலையில் வாழ்கிறார்கள். கவிஞர் கண்ணதாசன் இவரைப் போற்றிப் பாடியுள்ளார்.
வேந்தன்பட்டியிலும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் பசுமாடு வைத்திருப்பவர்கள் பால் கறந்து, காய்ச்சி நெய் எடுத்து, நெய் நத்தீஸ்வரருக்கு காணிக்கையாகச் செலுத்திய பிறகுதான் பாலை விற்கவோ, சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளவோ செய்கின்றனர்.
நந்தி எம்பெருமானுக்கு "தனப் பிரியன்' என்ற ஒரு பெயர் உண்டு. அதனால்தானோ என்னவோ இவ்வூர் மக்கள் நெய் நந்தீஸ்வரரின் நெற்றியில் காசுகளை பொட்டுகளாக வைப்பதையும், ரூபாய் நோட்டுகளை கயிற்றில் கட்டி, நெய் நந்தீஸ்வரரின் கழுத்தில்மாலையாகப் போடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
வருடந்தோறும் தை மாதத்தில், மாட்டுப்பொங்கலன்று அதிகாலை 4 மணிக்கு நெய் நந்தீஸ்வரருக்கு நந்தி விழா நடத்தி வருகிறார்கள். நந்தி விழா தினத்தன்று நெய் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேங்கள் செய்து 30 வகையான மாலைகளால் அலங்கரித்து தீப ஆராதனைகள் காட்டி வழிபடுகின்றனர். இதுபோன்ற விழா தமிழகத்தில் திருவண்ணாமலையிலும், வேந்தன்பட்டியிலும்தான் நடைபெறுகிறது.
நெய் நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கு நடுவே "சக்கரம்' ஒன்று உள்ளது. இது இயற்கையாகவே அமைந்தது. நெய் நந்தீஸ்வரருக்கு பசு நெய்தான் காணிக்கைப் பொருள். எனவே, நெய் நந்தீஸ்வரரைப் பார்க்க வரும்போது, சுத்தமான பசு நெய் கொண்டு வரவேண்டும்.
பிரதோஷ வழிபாடு: பிரதோஷ நாளன்று நந்தியை பசு நெய்யினால் அபிஷேகம் செய்வர். அபிஷேகம் செய்த நெய், நந்தீஸ்வரரின் தோற்றம் முழுவதிலும் நிறைந்து தரையில் வழிந்து, தேங்கி நிற்கிறது. மறுநாள், அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நந்தவனத்தில் உள்ள நெய் கிணற்றில் கொட்டுகிறார்கள். நெய் கிணற்றின் உள்ளே பல ஆண்டுகளாக நெய் உறைந்து போயிருக்கிறது. இதன் உள்ளே உறைந்திருக்கும் நெய்யில் கூட ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் மொய்ப்பதில்லையாம்.
நெய் நந்தீஸ்வரருக்கு மணி சார்த்துதல்: இப்படி ஒரு வேண்டுதலை நெய் நந்தீஸ்வரருக்கு இவ்வூர் மக்கள் நடத்தி வருகிறார்கள். பக்தர்களில் பெரும்பாலோர் தங்களின் உடலில் நோய்கள் தோன்றினாலோ, சொந்த வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்பட்டாலோ நந்தீஸ்வரருக்கு மணி சார்த்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள். அதன்படி, நோய்களோ, பிரச்னைகளோ தீர்ந்த பிறகு வெண்கல மணி ஒன்றும், பட்டுத் துண்டு, மாலை ஒன்றும் நந்தீஸ்வரருக்கு சார்த்தி, தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
பேருந்து வசதி: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு நேரடி பேருந்துகள் உள்ளன. பொன்னமராவதியிலிருந்து வேந்தன்பட்டி வருவதற்கு நகரப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் உள்ளன.
தொடர்புக்கு: 99940 36198.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.