நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விதியை வென்ற விவேகி

1010 செளமிய ஆண்டு, தை மாதம், அஸ்த நட்சத்திரத்தில் கூரத்தாழ்வார்} பெருந்தேவி அம்மாளுக்கு "கூரம்' என்ற கிராமத்தில் ஸ்ரீவத்சாங்கர் திருவவதாரம் செய்தார். அரச போகங்களுடன், அதிகார மதிப்புகளுடன் கோலோச்சினார்

News image
Updated On :29 ஜனவரி 2021, 7:07 am

இரா. இரகுநாதன்

1010 செளமிய ஆண்டு, தை மாதம், அஸ்த நட்சத்திரத்தில் கூரத்தாழ்வார்} பெருந்தேவி அம்மாளுக்கு "கூரம்' என்ற கிராமத்தில் ஸ்ரீவத்சாங்கர் திருவவதாரம் செய்தார். அரச போகங்களுடன், அதிகார மதிப்புகளுடன் கோலோச்சினார். அரச வழக்கப்படி ஸ்ரீவத்சாங்கர் இரவில் நகர்வலம் வரும்போது ஒரு வீட்டில் வாக்குவாதமும், அழுகுரலும் கேட்க அருகே சென்று கவனித்தார்.   

"அந்த வீட்டுப் பெண்ணின் ஜாதகம் சரியில்லை; அந்தப் பெண்ணுக்குத்  திருமணம் ஆனவுடன் அவளுடைய கணவன் இறந்துவிடுவான் என்பது விதி!' என்று ஜோதிடர் கணித்திருந்ததால் குடும்பத்தினர் வேதனையடைந்திருந்தார்கள். ஸ்ரீவத்சாங்கர், விசாரித்து அறிந்த விவரங்களின் அடிப்படையில் அந்தக் குடும்பத்தினரை அழைத்து, ""நானே உங்கள் பெண்ணை மணந்து கொள்கிறேன்''  என்றார். பெண் வீட்டார் ஆறுதல் அடைந்து திருமணத்துக்குச் சம்மதித்தனர்.  

"திருமணம் என்பது தாம்பத்திய வாழ்வில் நிறைவடைகிறது. அந்த உறவை மேற்கொள்ளாவிட்டால், தனக்கு எந்த பாதிப்பும் நிகழாது' என்கிற ஜோதிட கணிப்பால் "அந்தப் பெண்ணின் விதியை மாற்ற முடியும்' என அவர் கருதினார். அவ்வாறு ஸ்ரீவத்சாங்கர் மணந்த அந்தப் பெண்ணின் பெயர் ஆண்டாள் என்பதாகும்.  ஸ்ரீராமாநுஜரின் மேல் கொண்ட பக்தியினால் ராமாநுஜரை அடிபணிய விரும்பி, மனைவியுடன் காட்டு வழியே திருவரங்கம் சென்றார். திருக்கச்சிநம்பிகளைக் கண்டு அவரை வணங்கினார். அவர் மூலம் ராமாநுஜரை சரணடைந்தார். தன்னைவிட 8 வயது குறைந்தவரான ராமாநுஜரையே குருவாய் ஏற்றார். அவருக்குச் சேவை செய்வதைத் தன் வாழ்வின் கோட்பாடாகக் கொண்டார்.

திருவரங்கத்தில் ராமாநுஜருக்கு உதவியாக இருந்தபோது நிறைய அனுபவங்களைச் சந்தித்திருக்கிறார். அவரின் குருபக்தி, வைராக்கியம், ஞானம், அனுஷ்டானம் ஆகியவற்றைக் கண்ட ராமாநுஜர், அவரை "ஆழ்வான்' என்று அழைக்க ஆரம்பித்தார். நாளடைவில், அவர் பிறந்த தலத்தையும் சேர்த்து "கூரத்து ஆழ்வான்' என்றழைத்தார். 

ஸ்ரீவத்சாங்கர், தன் தந்தை பெயர் "கூரத்தாழ்வார்' என்றார். அப்பொழுது ராமாநுஜர், "அவர் பெரியவர் கூரத்தாழ்வார்; நீ "கூரத்தாழ்வான்' என்று விளக்கம் அளித்தருளினார். அன்று முதல் அனைவராலும் "கூரத்தாழ்வான்' என்றே அழைக்கப்பட்டார். ஒருமுறை ராமாநுஜர், பாஷ்யம் எழுத காஷ்மீரம் சென்றபோது, கூரத்தாழ்வானையும் உடனழைத்துச் சென்றார். அங்கு அதிகாரிகள் சில கட்டளைகளை விதித்து, பழைய கிரந்தங்களை எழுதுமாறு ராமாநுஜரிடம் கொடுத்தனர்.  அப்போது, கூரத்தாழ்வான் அவற்றை  ஒருமுறை படித்தே நினைவில் இருத்திக்கொண்டார். மீண்டும் அந்த புத்தகங்கள் கிடைக்காதபோது, கூரத்தாழ்வான் தன் நினைவிலிருந்தே அவற்றை எடுத்துக் கொடுத்து, பாஷ்யம் எழுத பெரிதும் உதவி புரிந்தார். 

திருவரங்கத்தில் வாழுங்காலத்தில் யாசகம் பெற்று வாழ்ந்த கூரத்தாழ்வான், ஒருநாள் உணவேதும் கிடைக்காத நிலையில் வீடு திரும்பினார். கணவர் சற்றுக் களைப்பாய் இருப்பதைக் கண்ட மனைவி ஆண்டாள், தன் மனதிற்குள் அரங்கனிடம் "உன் பக்தன் பசியால் வாடியிருப்பது உமக்குத் தெரியவில்லையா?' என்று மனமுருகினாள். சிறிது நேரத்தில் கோயிலிலிருந்து பணியாளர்கள் சிலர் வந்து பல பிரசாதங்களைக்  கொடுத்து "அரங்கனின் ஆணைப்படி  தங்களுக்குக் கொடுக்கிறோம்' என்று சொல்லிச் சென்றார்கள்.  

அதைக் கேட்ட கூரத்தாழ்வான் நடந்ததை யூகித்து, மனைவியிடம் கோபமாக "நீ அரங்கனிடம் எனது பசியாற்ற வேண்டும் என மனதுக்குள் வேண்டிக் கொண்டாயா?  எதை, எப்போது, எப்படித் தரவேண்டும் என்பது அவனுக்குத் தெரியாதா? இவ்வளவு அற்பமாக நடந்துகொண்டு விட்டாயே?' என்று கடிந்து கொண்டார். விதியை வென்ற விவேகி: இறைத்தன்மை நிறைந்த ஆசார்யார்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்புகளைப் பெற்றதாலும், ராமாநுஜரின் மீது கொண்ட அளப்பரிய குருபக்தியாலும், ஞான வைராக்கியத்தாலும் கூரத்தாழ்வான் மகிமை பெற்றிருந்தார். அச்சமயம் ராமாநுஜர் அவரை அழைத்து, "நீ சிறிது காலம் காஞ்சிக்குச் சென்று, உன் ஞான வைராக்கியத்தை விடுத்து, குடும்பத்தில் ஈடுபடு!'' என்று அனுப்பிவைத்தார். 

காஞ்சியில் கூரத்தாழ்வானுக்கு அரங்கனின் அருளால் இரண்டு குமாரர்கள் அவதரித்தார்கள். அவர்களே "வேதவியாச பட்டர்' மற்றும் "பராசர பட்டர்' என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்டார்கள். 

ஒருசமயம், நாடாண்ட மன்னனால்  ராமாநுஜரின் உயிருக்கு  ஆபத்து ஏற்பட்டது. இதையறிந்த கூரத்தாழ்வான், ராமாநுஜருக்கு துறவிகளுக்கான துவராடைக்குப் பதிலாக வெள்ளாடை அணிவித்து கொங்குதேசம் வழியாக மேல் கோட்டைக்கு அனுப்பி விட்டார். அவரின்  காஷாயத்தையும், திரிதண்டத்தையும் தானே தரித்து மன்னன் முன்சென்றார். கூரத்தாழ்வானுடன், பெரிய நம்பிகளும் உடன் சென்று, ""நாராயணனே தெய்வம்'' என்று  மன்னனிடம் வாதிட்டனர்.  கூரத்தாழ்வானை, ராமாநுஜர் என நினைத்த மன்னன், அவரின் கண்களைப் பிடுங்கும்படி உத்தரவிட்டான். 

அப்பொழுது கூரத்தாழ்வான், ""உன்னைப் போன்ற பாவிகளைக் காணாமல் இருப்பதே மேல்'' என்று கூறி, தன் கண்களைத் தாமே பிடுங்கிக்கொண்டார். பிறகு திருமாலிருஞ்சோலையில் சென்று வசித்து வந்தார்.
சுமார் 12 ஆண்டுகள் கழித்து, ராமாநுஜரும், கூரத்தாழ்வானும் காஞ்சியில் சந்தித்துக் கொண்டார்கள். கூரத்தாழ்வானின் நிலையறிந்த ராமாநுஜர், வரதராஜப் பெருமாள் அருளால் கூரத்தாழ்வானுக்குக் கண்கள் கிடைக்கும்படி செய்தார். ஆழ்வானின் விருப்பப்படி அவருக்குப் பெருமாளும், ராமாநுஜரும் மட்டும் கண்களுக்குத் தெரியுமாறு அருளினார். 

திருமாலிருஞ்சோலையில் 12 ஆண்டுகள் கைங்கர்யம் செய்த கூரத்தாழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தவம், அதிமானுஷ ஸ்தவம், "வரதராஜ ஸ்தவம்', "ஸ்ரீஸ்தவம்' 
ஆகிய பனுவல்களை இயற்றினார்.  "கூரேச விஜயம்' என்னும் நூலையும் அருளியுள்ளார் .

அவதாரத் திருநாள்: காஞ்சியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கூரம் கிராமத்தில், ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயில்}கூரத்தாழ்வான் தேவஸ்தானத்தில் அவரின் 1011}ஆம் திருவவதார மகோற்சவம் ஜனவரி 22-இல் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கூரத்தாழ்வானின் அவதாரத் திருநாள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.