துன்பங்களைப் போக்கும் கங்கையம்மன்!

எதை விதைக்கிறோமோ அதை அறுவடை செய்கிறோம் என்பதுபோல, அவரவர் கர்மபலன்களின் அடிப்படையிலேயே வாழ்க்கை அமைகிறது.
துன்பங்களைப் போக்கும் கங்கையம்மன்!
Updated on
2 min read


எதை விதைக்கிறோமோ அதை அறுவடை செய்கிறோம் என்பதுபோல, அவரவர் கர்மபலன்களின் அடிப்படையிலேயே வாழ்க்கை அமைகிறது. பாவங்களைத் துடைக்க புண்ணியங்கள் செய்யவேண்டும். யுக யுகங்களாக அறிந்தோ அறியாமலோ மனிதர்கள் செய்துவரும் பாவங்களை நிவர்த்தி செய்து மனிதனைப் புனிதப்படுத்தும் சக்தி படைத்தவள்தான் மகா சக்தி தாய் ஸ்ரீகங்கையம்மன் என்பது உலகறிந்த உண்மை.

ஜாதி, மதம், ஆண், பெண், ஏழை, பணக்காரன், பெரியவர், சிறியவர் எந்த பேதபாவங்களும் இல்லாமல் ஸ்ரீகங்கையம்மனை பூஜை செய்து வழிபடலாம். நம்பிக்கை, பரிபூரண பக்தியுடன் கங்கையம்மனை வழிபட்டால் பாப விமோசனம் கிடைக்கும்.

சுரலோகம், மத்யலோகம், பாதாளலோகம் இப்படி மூன்று லோகங்களிலும் கங்கை ஓடுவதால் "திரிபதகாமினி' என்று அழைக்கிறார்கள். பரிசுத்தமான ஸ்ரீகங்கையம்மன், உடல், மனம், வார்த்தைகளையெல்லாம் பரிசுத்தம் செய்யும் பரிவுள்ள தாய் தசபாவங்களையும் சுத்தம் செய்யும் அம்மனுக்கு "தசஹரே' என்ற பெயரும் உண்டு.

ஸ்ரீகங்கையம்மனை யுக யுகங்களாக மாமுனிவர்களும், தவசீலர்களும், பக்தர்களும் வணங்கி வருகிறார்கள்.

இவ்வுலகில் ஸ்ரீகங்கையம்மன் வடிவங்கொண்டு நிலைபெற்ற கோயில்கள் மிகவும் அரிது. அப்படிப்பட்ட அரிய, அழகிய திருக்கோயில் ஒன்று பெங்களூருவில் உள்ளது. பெங்களூருவின் மையப்பகுதியான மல்லேஸ்வரம் 2-ஆவது கோயில் தெருவில் ஸ்ரீகங்கையம்மன், "ஸ்ரீகங்கம்மா தேவி'யாக எழுந்தருளியுள்ளாள்.

அடிபணிந்தேன் என்று வருபவர்களுகு அருள்மழையைப் பொழிந்துவருகிறாள் ஸ்ரீகங்கம்மா தேவி.

முன்னர் இப்பகுதியை "தண்ணீர் தொட்டி கிராமம்' என்று அழைத்தனர். இங்கு வாழ்ந்த மக்களுக்காக ஒரு கோயில் இல்லாததால், 1928-இல் டாடா இன்ஸ்டிடியூட் சதுக்கத்தில் கண்ணப்பநாயக்கரும், அவரது சகோதரர் செங்கல்வராய நாயக்கரும் ஸ்ரீகங்கம்மா மற்றும் மாரியம்மாவுக்கு கோயில் எழுப்பினர்.

1946-இல் தண்ணீர் தொட்டி கிராம குடியிருப்புப் பகுதி கோதண்டராமபுரம் கிராமத்திற்கு இடம் மாற்றப்பட்டது. குடியிருப்பு இடம் பெயர்ந்தாலும், ஸ்ரீகங்கம்மா மற்றும் மாரியம்மா கோயிலில் வழக்கம்போல பூஜை, வழிபாடு நடந்த வண்ணம் இருந்தது. அக்கோயிலை புதுப்பிக்க கிராம மக்கள் விரும்பினர். ஆனால் பல ஆண்டுகள் கடந்தபோதிலும் கோயில் புதுப்பிக்கும் பணி நடைபெறவில்லை.

வயாலிகாவல் சாலையில் உள்ள ஸ்ரீமுனீஸ்வரன் மற்றும் ஸ்ரீகணபதி கோயிலை அமைத்த பக்தர் நரசய்யா, 1966-ஆம் ஆண்டு ஸ்ரீகங்கம்மாமற்றும் மாரியம்மா கோயிலை புதுப்பிக்கும் பணியை தனக்கு அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதன்படியே மாரியம்மா கோயிலை நரசய்யா புதுப்பித்துக் கட்டினார். எழில் மிகுந்த ராஜகோபுரத்துடன் கண்ணைக் கவரும்வகையில் மாரியம்மா கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர்.

கண்ணப்பநாயக்கரின் மகன் க.நடராசன், கங்கம்மா தேவியின் பஞ்சலோகத்தாலான உற்சவ மூர்த்தியை கோயிலில் வைத்து பூஜித்து வந்தார். கங்கம்மாதேவிக்கு நிலையான கோயில் கட்ட விரும்பி, கர்நாடக அரசிடம் பேசி, மல்லேஸ்வரம் 2-ஆவது தெருவில் நிலமொன்றை பெற்றார். அவரின் இடைவிடாத முயற்சியால், முன்னாள் எம்பி பி.கே.ஹரிபிரசாத், முன்னாள் துணை முதல்வர் எம்.பி.பிரகாஷ் ஆகியோரைக் கொண்டு ஸ்ரீகங்கம்மாதேவி கோயில் அமைக்க அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, 74 அடி உயரமுள்ள ராஜகோபுரமும், 27 அடி உயரமுள்ள கோபுர விமானமும், 64 அடி உயரம் 2 அடி அகலமுள்ள வெண்கலக் கவசமுடைய உயர்ந்த கொடிக்கம்பமும், ஐந்தரை அடி உயரமுடைய புன்னகை ததும்பும் ஸ்ரீகங்கம்மாதேவியின் விக்கிரகம், நவகிரகங்கள், கணபதி, சுப்பிரமணியசுவாமி விக்கிரகங்கள், பலிபீடம் ஆகியவை கொண்ட பிரமாண்டமான கோயில் எழுப்பப்பட்டு, 2007-ஆம் ஆண்டு பிப். 8-ஆம் தேதியன்று வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீஸ்ரீரவிசங்கர் குருஜியால் குடமுழுக்கு செய்யப்பட்டது. அன்றிலிருந்து இக்கோயிலில் ஆண்டுதோறும் சண்டிகா ஹோமம், பாலாபிஷேகம், பிரம்மதேரோட்டம் போன்ற இறைப்பணிகள் தங்கு தடையில்லாமல் நடந்து வருகின்றன.

கர்நாடகம் மட்டுமல்லாது, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரம் போன்ற பிறமாநிலங்களில் இருந்தும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை அன்று கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கோயிலில் தேங்காய் உருட்டுசேவை செய்வதோடு, ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தால் விளக்கேற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.

சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-ஆவது வாரத்தில் துவாதசியிலும், திரயோதசியிலும் சதுர்த்தசியிலும் 3 நாள்கள் கங்கம்மாதேவியின் ஆண்டுவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.

பாலாபிஷேகம், கும்பபூஜை, கூழ் ஊற்றுதல், பூக்கரகம், சுமங்கலிபூஜை, அன்னதானம், தேர்த்திருவிழா, பேட்டை கரகம் ஆகியவை திருவிழாவில் ஆட்டம் பாட்டத்துடன் நடக்கும். இதில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். நாமும் பங்கேற்று கங்கம்மாதேவியின் அருள் பெறுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com