தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மஹா சரஸ்வதி! 

பரம பரிபூரணத்திற்குக் குறைந்ததெதுவும் அவளுக்கு திருப்தியளிக்காது. தன் படைப்பின் முழு நிறைவிற்கு அனந்தக் காலமும் வேலை செய்ய வேண்டுமென்றாலும் அவள் அதற்கு ஆயத்தமாயிருக்கிறாள்.

News image

சரஸ்வதி பூஜை

Updated On :19 நவம்பர் 2021, 10:51 am

ஹேமமாலினி சங்கரன்

பரம பரிபூரணத்திற்குக் குறைந்ததெதுவும் அவளுக்கு திருப்தியளிக்காது. தன் படைப்பின் முழு நிறைவிற்கு அனந்தக் காலமும் வேலை செய்ய வேண்டுமென்றாலும் அவள் அதற்கு ஆயத்தமாயிருக்கிறாள்.

ஆதலால் அன்னையின் சக்திகள் அனைவருள்ளும் இவளே மனிதனுடனும், அவனது ஆயிரம் குறைகளுடனும் நீண்ட நாள் பாடுபடுகிறவள்.

நாம் நமது லட்சிய உறுதியில் ஒருமுகப்பட்டவர்களாய், கபடமற்றவர்களாய், நேர்மையுள்ளவர்களாய் இருப்பின் அவள் பட்சமுடன், புன்னகை பொழிய, நெருங்கித் துணை நின்று - எளிதில் விலகிச் சென்றுவிடாமல், சோர்ந்துவிடாமல், தோல்வி மேல் தோல்வி ஏற்படினும் பிடிவாதமாக நின்று - ஒவ்வொரு அடியிலும் நம்மைத் தன் திருக்கரங்களில் தாங்குகிறாள். ஆனால் இரண்டு பட்ட மனதை, சஞ்சல புத்தியை அவள் சகிப்பதில்லை. கபட நாடகம், நடிப்பு, தன்னைத்தான் ஏமாற்றிக் கொள்ளுதல், பாசாங்கு இவற்றை இரக்கமின்றி நகைப்புக்குரியவையாக வெளிப்படுத்தி விடுவாள்.

நமது தேவைகளை அளிப்பதில் தாயாய், நமது கஷ்டங்களில் நண்பனாய், விடாமுயற்சியுடைய, நிதானமான ஆலோசகனும் ஆசானுமாய், தனது ஒளிரும் புன்முறுவலால் மந்தம், சிடுசிடுப்பு, சோர்வு ஆகிய மேகங்களை விரட்டியடித்து, எப்பொழுதும் நீங்காதிருக்கும் தனது உதவியை நினைவூட்டி, என்றுமுள ஞாயிறின் ஒளியைச் சுட்டிக் காட்டுகிறாள்.

அவள் நம்மீது பரிந்து, சிறு நுட்பங்களிலும் கவனம் செலுத்தி, சிறு பிசகையும், விட்டுப்போனதையும், கோணலையும், அரைகுறைகளையும் கண்டுபிடித்து, தொட்டுச் சீராக்குகிறாள். "ஆனவை, ஆகவேண்டியவை' இரண்டையும் சரியாகச் சீர்தூக்கிப் பார்க்கிறாள்.

எவ்வளவுதான் கண்ணிற்கு எட்டாததாயும், மாறுவேடம் பூண்டும், புதைந்து மறைந்தும் இருந்தாலும் அவள் பார்வையிலிருந்து எதுவும் தப்ப முடியாது.

கவனமின்மை, அசட்டை, பதற்றம், அலங்கோலம், தாறுமாறு, அலட்சியம், ஈடுபாடின்மை, குறி தவறல், கருவிகளையும் திறமைகளையும் தவறாகப் பயன்படுத்துதல், செய்ய வேண்டியதைச் செய்யாமலிருத்தல் அல்லது பாதியில் விடுதல் இவை எல்லாம் அவள் இயல்பிற்குப் புறம்பானவை. அவளுக்குப் பிடிக்காதவை!

அவள் வேலை முடிவுறும் போது, எதுவும் மறக்கப்பட்டிராது; எப்பகுதியும் விடப்பட்டோ, இடந்தவறியோ, பழுதான நிலையிலோ இராது; எல்லாம் திடமாயும், சரியாயும், பூரணமாயும், வியக்கத்தக்கதாயும் இருக்கும்!

ஸ்ரீஅன்னை ஸ்ரீ அரவிந்தர் எழுத்துக்களிலிருந்து...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.