"அராலை: ஸ்வாபாவ்யா - தலிகலப - ஸஸ்ரீபி: ரலகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ - ருசிம்'
-செளந்தர்ய லஹரி
ஒவ்வொரு நாளும் புதிய நாளாகவே பிறக்கிறது. புதிய சிந்தனைகள், நோக்கங்கள், லட்சியங்கள், குறிக்கோள்கள் என்று வாழ்க்கை புதிதாகத் திறக்கிறது.
அந்தச் சிந்தனைகளும், செயல்களும் புதிய அறிவுடனும், உற்சாகத்துடனும் அமைய நம்மைச் சுற்றி உள்ள பிரபஞ்ச சக்தியே காரணம். அதன் சக்தியால் நம் துவக்கம் ஒவ்வொன்றும் புதிய வெளிச்சத்துடன் பிரகாசிக்கிறது.
சக்தியின் அருளே அனைத்திற்கும் காரணம் என்ற நம்பிக்கையும், அந்தச் சக்தியே அனைத்தும் நடத்துகிறது என்று நம் கடமைகளைச் செய்வதே நம்மை வலிமைப் படுத்துகிறது.
அம்பிகை இப்பிரபஞ்சம் முழுக்க சக்தியாய் பரவி இருக்கிறாள். நம்மைக் குழப்பும் எண்ணங்களிலிருந்து விடுபட அவள் மீதான நம்பிக்கை முக்கியம். அவள் பாதங்களில் நம் முழு மனதையும் திருப்பி, கடமைகளில் ஈடு
படும்போது மனஉறுதியும், தன்னம்பிக்கையும் வளர்கிறது.
நம்மைக் காக்கவே அம்பிகை வெவ்வேறு வடிவம் எடுக்கிறாள். மழைபோல் கருணையைப் பொழிவதால் அவள் பல இடங்களில் கெüமாரி என்று அழைக்கப்படுகிறாள். அவள் வளங்களை மட்டுமல்ல வரங்களையும் தரக் கூடியவள்.
பழைய பாண்டிய நாட்டின் ஒரு பகுதிதான் இன்றைய வீரபாண்டி. பாண்டிய மன்னன் ராஜேந்திர பாண்டியன், தன் தம்பியான இராச சிங்கபாண்டியனுக்கு மலைவளம் கொண்ட இந்த ஆற்றுப் பகுதியைக் கொடுத்து, ஆட்சி செய்யச் சொன்னான்.
வைகை நதியின் கரையோரம் இருந்த கோயில்களையெல்லாம் அவன் சீர்படுத்தினான். இவர்களின் மூதாதையர்களில் ஒருவரான வீரபாண்டியன் முன் ஜென்ம வினையால் பார்வை இழந்தான். இறைவனை நோக்கி கடுமையான விரதம் இருக்க, இறைவன் அவன்முன் தோன்றி ""வீரபாண்டிக்கு சென்று கெüமாரியை வணங்கு!'' எனச் சொல்ல, மன்னன் இங்கு வந்து அன்னையை வேண்ட ஒரு கண் பார்வை கிடைத்தது. அதைத்தொடர்ந்து, கண்ணீஸ்வரரை வேண்டிக்கொள்ள மற்றொரு கண் பார்வையும் கிடைத்தது.
இம்மன்னனே ஈசனுக்கும், கெüமாரிக்கும் கற்கோயில் அமைத்து, மக்கள் வழிபாடுகள் செய்வதற்கு ஏற்பாடு செய்தான். இந்த மன்னனின் பெயரால் இத்தலம் "வீரபாண்டி' என்றும், இங்கு அருள்பாலிக்கும் ஈசன் "திருக்கண்ணீஸ்வரர்' என்றும், அம்பிகைக்கு "கெüமாரி' என்ற பெயரும் வழங்கலாயிற்று.
பார்வதிதேவி அசுரன் ஒருவனைக் கொல்வதற்காக இங்கு கெüமாரி என்ற பெயரில் ஈசனை நோக்கித் தவம் இயற்றினாள்.
அப்போது இங்கு வந்து தொல்லை கொடுத்த அசுரனை, அருகம்புல்லையே முப்படையாக ஏவி, அழித்தாள். அப்போது ஈஸ்வரன் தோன்றி அவளுக்குக் காட்சி கொடுக்க, அன்னை இங்கு கன்னித் தெய்வமாக கோயில் கொண்டாள்.
கண் நோய், தீராத நோய்கள், அம்மை கண்டவர்கள் இங்கு தீர்த்தம் பெற்று வேண்ட அனைத்தும் தீரும். நோய் மட்டுமின்றி தீராத துன்பங்களையும் தீர்ப்பாள் அன்னை.
இங்கு கருப்பண்ண சாமி காவல் தெய்வமாக இருக்கிறார். முதலில் இவரை வேண்டி திருநீறு பூசிய பின்பே அன்னையைத் தரிசிக்கச் செல்ல வேண்டும்.
இங்கு சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பு. அப்போது இங்கே கம்பம் நடுவார்கள். முல்லையாற்றில் இருந்து கலயத்தில் நீரெடுத்து மஞ்சள், வேப்பிலை, கதம்பம் இட்டு பிரார்த்தனை செய்து கொண்டு வந்து ஊற்றுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இருபத்தி இரண்டு நாள்கள் விழா நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகிறார்கள்.
முன் மண்டபம் தாண்டிச் சென்றால் அன்னை சுயம்புவாகக் காட்சி அளிக்கிறாள். காணக் காணத் தெவிட்டாத அழகு. கருணை வழிய பக்தர்களை அன்புடன் அழைக்கும் தோற்றம். அவளைப் பார்த்துக் கொண்டே நிற்கலாம். பிரகாரத்தைச் சுற்றி வரும்போது கணபதியும், நவகிரகங்களும் காட்சி அளிக்கின்றனர்.
வேம்பு இங்கு தல விருட்சம்; திருக்கோயிலின் முன்புள்ள கிணற்று நீரே இங்கு தீர்த்தம். பக்தர்கள் இத்தீர்த்தத்தைக் கொண்டுபோய் வீட்டில் வைத்து பூஜிக்கிறார்கள். சித்திரைத் திருவிழாவில் மாவிளக்கு பூஜை, பூப்பல்லக்கு பவனி, தேரோட்டம் ஆகியவை நடைபெறுகின்றன. அக்கினிச் சட்டி, ஆயிரம் கண் பானை சுமந்து வருதல் என்று பக்தர்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்துகிறார்கள்.
கெüமாரி அன்னையைத் தரிசித்தாலே மனக் கவலைகள் பறந்தோடி விடும். "அன்னையின் கூந்தலழகு அலை அலையாகப் பரவி வருகையில் அவள் நெற்றி வகிடு அதற்குக் கரை போல் அமைகிறது!' என்பார் ஸ்ரீஆதி
சங்கரர். கற்பனை வளம் பொங்க சங்கரர் பாடிய பாடல் அம்மனின் அழகை விவரிக்கிறது.
"எப்படியாகினும் சூரியனை வெற்றி கொள்ள வேண்டும் என்று விரும்பிய இருள், அம்பிகையின் கூந்தலில் போய் ஒட்டிக் கொண்டது! அதன் நல்வினைப் பயனே காரணம்!' என்கிறார் சங்கரர்.
அன்னையின் நெற்றி வகிட்டையும், குங்குமத்தையும் "ஸிந்தூர திலகாஞ்சிதா, நிஜாருண பிரபா பூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா' என்று ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் வர்ணிக்கிறது. ஈசனின் பிராணனாக இருக்கிறாள் அம்பிகை என்பதையே "காமேஸ்வர பிராணநாடி, சதாசிவ பதிவ்ரதா, காமேச பத்த மாங்கல்ய சூத்ர சோபிதகந்தரா!' என்று பலவாறு போற்றுகிறது.
"அம்பிகை நம் பாபங்களைத் தீர்க்க வல்லவள். பாபச் சேற்றை அகற்றி, தீயவை என்னும் முட்கூட்டம் எளிதில் அணுகாமல் காப்பவள். வேறு எவற்றின் உதவியுமின்றி தானே மலரும் இயல்புடைய தாமரையைப் போல் தேவியின் பாதங்கள் மின்னுகின்றன!' என்கிறார் மூசு கவி.
நம் நல்வினையின் காரணமாகவே அம்பிகையை வணங்க முடியும். அவளின் அழகிய முகத்தில் நம் மனதைச் செலுத்தி, அவளையே தியானித்தால் தன் அடியவர்களின் நலனை அவளே பார்த்துக் கொள்வாள்.
அமைவிடம்: தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வீரபாண்டி கௌமாரியம்மன் திருத்தலம்.
(தொடரும்)