புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கீர்த்தி தரும் பஞ்ச மூர்த்திகள்!

"நாராயணன்' என்ற நாமம் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 245-ஆவது பெயராக அமைந்துள்ளது.   

News image
Updated On :24 செப்டம்பர் 2021, 1:07 pm

இரா. இரகுநாதன்

"நாராயணன்' என்ற நாமம் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 245-ஆவது பெயராக அமைந்துள்ளது.

நாகப்பட்டினத்திலிருந்து 5 கி.மீ. சுற்றளவிற்குள் உள்ள 5 நாராயணத் திருத்தலங்களைத்தரிசிக்கலாம்:

தாமோதர நாராயணப் பெருமாள்: கிருஷ்ண பகவான் குழந்தை கோபாலனாக வடிவம் கொண்டு வசிஷ்டர்க்கு காட்சி தந்த தலம் திருக்கண்ணங்குடி; கீவளூருக்கு அருகில் உள்ளது.

மூலவர் தாமோதர நாராயணப்பெருமாள். வசிஷ்டர் கண்ணனின் அன்பு என்னும் தாம்பால் கட்டுண்டதால் அவ்விடம் கண்ணங்குடியாயிற்று. ஆழ்வார்களும் அவ்வாறே மங்களா சாசனம் செய்த திவ்ய தேசமாகும். மூலவர் லோகநாதர் என்னும் திருநாமத்தோடு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்கிறார்.

உற்சவர்க்கு தாமோதர நாராயணன் என்ற திருநாமம். தனிக்கோயிலில் தாயார் அரவிந்த நாயகி. இத்தலத்தின் கல்லிலும், மண்ணிலும் கூட கிருஷ்ண சாந்நித்யம் நிரம்பியிருப்பதால் அவனிடம் கேட்டது கிடைக்கும் என்பார்கள். ஆழியூரிலிருந்தும், கீழ்வேளூர் ரயில் நிலயத்திலிருந்தும் கோயிலுக்குச் செல்லலாம். தொடர்புக்கு: 9943138591.

அனந்த நாராயணப் பெருமாள்: சிக்கல் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் ஆவராணி என்ற ஊர் உள்ளது. மண்ணும் விண்ணும் அளந்த விஸ்வரூபியான மகா விஷ்ணு, ஏழு தலைகளை உடைய ஆதிசேஷன் மீது அனந்த சயனம் கொண்டு, சர்வாபரணதாரியாகக் காட்சி தருகிறார். அதனால் அவரின் "ஆபரணதாரி' என்ற பெயர் ஊருக்கு உரியதாகி "ஆவராணி'யாக மருவியது.

மூன்று துவாரங்களின் வழியாகத்தான் பெருமாளை முழுமையாக தரிசிக்க முடியும். சந்நிதி வாயிலில் நேராகப் பார்த்தால், பெருமாளின் திருமேனியை மட்டுமே தரிசிக்கலாம். ஒரு சாளரத்தின் வழியாக திருவடி தரிசனமும், மற்றொரு சாளரத்தின் வழியாக பெருமாளின் திருமுகத்தையும் தரிசிக்கலாம். கோயிலுக்கு அருகிலுள்ள அனந்த புஷ்கரிணி நீரைத் தெளித்துக்கொண்டு பெருமாளை சேவித்தால், கேட்கும் வரங்கள் கிடைக்கும் என்பது முதியோர் வாக்கு.

தொடர்புக்கு: 6380774784.

யாதவ நாராயணப் பெருமாள்: கீழ்வேளூர் யாதவ நாராயணப் பெருமாள் திருக்கோயில் கீவளூரில் இருந்து கச்சனம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

நின்ற நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் யாதவ நாராயணப் பெருமாள் அருள்கிறார். இறைவி யாதவ வல்லி என்ற பெயரில் தனிச்சந்நிதியில் உள்ளார். வேங்கடாஜலபதியின் சந்நிதியும் இக்கோயிலில் உள்ளது.

சூரபத்மனை வதம் செய்த தோஷம் நீங்குவதற்காக முருகன், பெருமாளின் கூற்றுப்படி, அட்சய லிங்கேசுவரரை நோக்கித் தவமிருந்தார். தோஷம் நீங்கியதால் ஊர்மக்கள் மகிழ்ச்சியடைந்து பசுக்களின் பாலை திருமாலுக்கு அளித்ததாகவும், அதனை ஏற்றுக்கொள்வதற்காக பெருமாள் இங்கு யாதவக் கண்ணனாக நின்று அருளியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இவரை வணங்கினால் கஷ்டங்கள் எல்லாம் விலகும்; நல்லவை எல்லாம் கிடைக்கும் என்கின்றனர் பெரியோர். தொடர்புக்கு: 9842755732.

வரத நாராயணப் பெருமாள்: வசிஷ்டரும் மற்ற ரிஷிகளும் திருக்கண்ணங்குடியில் காட்சி தந்த பெருமாளிடம், எல்லோருக்கும், எல்லாமுமாய் விளங்கும் நீ, எங்களுக்கு வரம் அருளும் மூர்த்தியாகக் காட்சி தர வேண்டுமெனக் கேட்க அருகில் உள்ள பெரிய ஆலத்தூரில் உபய நாச்சியாருடன் நின்று அருளினார் என்பது வரலாறாகும். ஆலத்தூர், ஆவராணியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. தொடர்புக்கு: 9842755732.

தேவ நாராயணப் பெருமாள்: தீயவை வளர்ந்து நல்லவை அருகிக் கொண்டிருந்த நேரத்தில், தேவர்கள் அசுரர்களுக்கு பயந்து கொண்டிருந்தனர். ஈசனிடம் தங்கள் பயத்தைத் தெரிவிக்க, அவர் குறிப்பிட்ட இடத்தில் திருமாலை குறித்துத் தவமியற்றும்படி தேவர்களிடம் கூறினார். அதன்படி தேவர்கள் ஒரு வனத்திற்குச் சென்று ஈசன் அரணாக இருக்க, தவம் செய்யத் துவங்கினர்.

ஒருநாள் காலை திருமால் நாராயணனாகக் காட்சி தந்து, ஈசன் துணையோடு அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்தார். தேவர்களுக்கு சிவபெருமானும் திருமாலும் காட்சி தந்ததால் ஊரின் பெயர் தேவூர், தேவபுரி எனவும், பெருமாளின் பெயர் தேவ நாராயணப்பெருமாள் எனவும் வழங்கலாயிற்று. இவரை வணங்குவதால் தொலைந்த பொருள் கைக்கு வரும் என்கிறார்கள்.

தொடர்புக்கு: 9751222913.

இந்த பஞ்ச நாராயணத் தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால் வேண்டியது கிடைக்குமென்பது நம்பிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.