நாட்டுக்கு வரி; ஆலயத்துக்கு காணிக்கை!
By முனைவர் தே.பால் பிரேம்குமார் | Published On : 08th October 2021 12:50 PM | Last Updated : 19th November 2021 04:21 PM | அ+அ அ- |

நாட்டுக்கு வரி; ஆலயத்துக்கு காணிக்கை!
அரசுக்கும் ஆலயத்துக்கும் வரி கட்டுவோம்; வரி கட்டுதல் மக்களின் கடமை. அரசு செயல்பட வரிப்பணம் அவசியம்.
நாட்டைப் பாதுகாக்கவும், போர் படைகளைப் பராமரிக்கவும், பொதுப் பாதைகள் அமைக்கவும், தண்ணீர் வசதி செய்து கொடுக்கவும், நாட்டைத் தூய்மையாக வைக்கவும், நீதி, காவல் துறைகள் செயல்படவும் அரசுக்கு வரிப்பணம் தேவை.
குடிமக்களும் தம் கடமை என்றெண்ணி வரிப்பணம் செலுத்துதல் வேண்டும் என்று இயேசு கூறினார்.
ஒருமுறை இயேசு, கலிலேயாவில் கேப்பர் நவும் பகுதியைக் கடந்து வந்த போது, ஊர் எல்லையில் வரி வசூலிக்கும் சுங்கச் சாவடியை கடந்து வந்தார். அவ்வாறு வருவோரிடம் நாட்டுக்கு வரியும், ஆலயத்திற்கு காணிக்கை வரியும் வசூலிக்க வேண்டும் என்பது நியதி. ரோம அரசு, யூதர்களிடம் இந்த இருவகை வரிகளையும் வாங்கிக் கொண்டிருந்தது.
இந்த இரண்டு வரிகளையும் யூதர்கள் கட்டினால்தான் சுங்கச் சாவடியை கடந்து போகமுடியும்.
இயேசு தன் சீடர்களுடன் வந்திருந்தார். அப்பொழுது வரி வசூலிப்போர், சீடர் பேதுருவிடம் ""உங்கள் போதகர் வரி செலுத்துவது இல்லையா?'' (மத்தேயு 17: 24 -27) என்று வினவினர். பேதுரு, இயேசுவிடம் வரி செலுத்துதல் பற்றிக் கேட்டார். அதற்கு இயேசு பேதுருவிடம் ""ரோமர்கள் வரி வசூலிப்பது தம் மக்களிடமா? அந்நியர்களிடமா?'' என்று வினவினார்.
பேதுரு, ""அந்நியர், அடிமைப்பட்டோரிடத்தில் வரி வசூலிக்கின்றனர்!'' என்றார். பின்னர் இயேசு பேதுருவிடம் ""உடனே ஒரு மீன் பிடிக்கும் தூண்டிலை கடலில் போடு! ஒரு பெரிய மீன் மாட்டும். அம்மீனின் வாயைத் திறந்து பார். அதில் வழிசெலுத்தலுக்கு உரிய ஒரு வெள்ளிக்காசு தென்படும்! அதை எடுத்து வரி வசூலிப்பவரிடம் எனக்கும் உனக்கும் கொடுத்து வரி செலுத்து! அரசுக்குரிய அரசு வரியையும், ஆலய கடவுளுக்குரிய வரியையும் செலுத்த வேண்டும்!'' என்றார்.
அப்படியே பேதுரு கடலில் மீன்பிடி தூண்டிலைப் போட்டதும், ஒரு பெரிய மீன் மாட்டியது. அதன் வாயைத் திறந்த போது, அதில் ஒரு வெள்ளிக்காசு இருந்தது. அதை எடுத்து வரி வசூலிப்பவரிடம் செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த யூதர்கள் முணுமுணுக்காமல் வரி செலுத்தினார்கள். இறைவனாகிய இயேசுவே வரி செலுத்தி, குடிமக்களின் கடமையைச் செய்தார்.
வரி ஏய்ப்பு, வருமானம் மறைத்துக் காட்டல், ஆலயத்துக்கு காணிக்கை கொடுக்காமல் இருப்பது ஆகிய செயல்களைக் கடவுள் விரும்பமாட்டார். வரி செலுத்துவோம்; மகிழ்வுடன் வாழ்வோம்! என்றும் இறையருள் நம்மோடு!