சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தேவியின் திருத்தலங்கள் 67: காளஹஸ்தி ஸ்ரீ ஞானப்பிரசுனாம்பிகை!

ஞானம் என்பதன் பொருள் என்ன? தன்னை அறிதல். தான் வெறும் உடல் அல்ல என்ற அறிவை அடைய சாதனை அவசியம். தன்னைத் தான் அறிதல் என்பது மனித வாழ்வின் மிகப்பெரும் சாதனை.  

News image
Updated On :1 ஏப்ரல் 2022, 11:50 am

தினமணி

அதஸ்தே சீதாம்சோ அம்ருதலஹரீம் ஆம்லருசயா:

பிபந்தி ஸ்வச்சந்தம் நிசிநிசி ப்ருசம் காஞ்சிகதியா

- செளந்தர்ய லஹரி 

ஞானம் என்பதன் பொருள் என்ன? தன்னை அறிதல். தான் வெறும் உடல் அல்ல என்ற அறிவை அடைய சாதனை அவசியம். தன்னைத் தான் அறிதல் என்பது மனித வாழ்வின் மிகப்பெரும் சாதனை.  

தன்னை அறிதல் என்றால் தனக்குள் நிலை பெற்ற ஆத்மாவை, அதில் ஒளியாக நிறைந்திருக்கும் பரம்பொருளை அறிதல். எல்லையற்ற பரம்பொருளான ஒரு சக்தி ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஆத்ம வடிவாக உறைகிறது. அதுவே நான். நாமே அது என்று அறிவது ஞானம்.

எல்லாம் எந்தச் சக்தியின் செயல். நமதென்று எந்தக் காரியமும் இல்லை. இந்த மனப்பக்குவத்தை வைராக்கியம் என்பார்கள். அந்த வைராக்கியம் இடைவிடாத அம்பிகை தியானத்தால் கிடைக்கும். உடல் தூய்மை, நல்ல எண்ணங்கள், இவற்றுடன் சரணாகதி என்ற தத்துவத்தின் மூலம் அடையலாம்.

அவளே நான் என்ற உணர்வு வந்து விட்டால் வாழ்வே வரமாகி விடும். அந்த ஞானத்தைத் தருபவள் அன்னை ஞானப் பூங்கோதை என்னும் ஞானப் பிரசுனாம்பிகை. காளஹஸ்தியில் அருள் புரியும் அம்பிகை ஞான சுந்தரி என்றும் அறியப்படுகிறாள்.

ராகு கேது தோஷம் நீக்கும் காளஹஸ்தியில் ஸ்ரீ திருக்காளத்தீசுவரர் கோயிலில் அழகுற காட்சி அளிக்கிறாள் அம்பிகை. சொர்ணமுகி நதிக்கரையில் அமைந்த மிகப் பழமையான கோயில். வேடன் இறைவன் மேல் கொண்ட பக்தியால் தன் இரண்டு கண்களையும் அர்ப்பணித்து மோட்சம் பெற்ற தலம் இது.

உலக ஆரம்பத்தில் வாயு பகவான் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கற்பூர லிங்கத்தை ஏற்படுத்தி தவம் செய்து வந்தார். அதில் மகிழ்ந்த ஈசன் அவர் முன் தோன்றி மூன்று வரங்களை அளித்தார். அதன்படி வாயு "தான் உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு உயிரின் அந்தராத்மாவாக விளங்க வேண்டும், தான் வழி பட்ட கற்பூர லிங்கம் தன் பெயராலேயே வழங்கப் பட வேண்டும்' என்று வரங்கள் கேட்டு வாங்கினார்.

இதன் பிறகு காற்று இல்லாமல் உயிர்கள் இயங்க முடியாது என்ற நிலையம், ஈரேழு, பதினான்கு உலகங்களிலும் லிங்க வழிபாடும் தொடங்கியது. வாயுவுக்கு என்று தோன்றிய முதல் கோயில் இது. ஒருமுறை ஈசனின் கோபத்துக்கு ஆளாகி, அவரிடம் சாபம் பெற்ற அம்பிகை இங்கு வந்து லிங்கத்தைப் பூஜித்து ஞானம் பெற்றாள். எனவே அன்னை ஞானப் பிரசுனாம்பிகை என்று அழைக்கப்படுகிறார். இறைவனின் தலையில் இருக்கும் கங்கை இங்கு சொர்ணமுகி என்ற பெயரில் கோயிலைச் சுற்றி ஓடுகிறாள்.

யுகம், யுகமாக இருக்கும் மலை. ஒருமுறை வாயுவுக்கும், ஆதிசேஷனுக்கும் யார் பெரியவன் என்று சண்டை நேர்ந்தது. கைலாய மலையை ஆதிசேஷன் சுற்றி வளைத்தான். அவனிடமிருந்து மலையை விடுவிக்க வாயு நடத்திய போராட்டத்தில் கைலாய மலை எட்டு பாகங்களாகச் சிதறியது. அதில் இரண்டாவது சிதறல்தான் காளஹஸ்தி மலை. துர்க்கம்மா மலை, கண்ணப்பர் மலை என்ற இரு மலைகளுக்கு நடுவில் கோயில் அமைந்துள்ளது.

காளஹஸ்தி தென் கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. சதுர யுகத்தில் பிரம்மாவும், மகாபாரத காலத்தில் அர்ஜுனனும் வழிபட்ட தலம். கற்பூர லிங்கம் என்பதால் இந்த லிங்கத் திருமேனியை இதுவரை யாரும் தீண்டியதில்லை. இக்கோயிலில் குடி கொண்டுள்ள ஞான சுந்தரி செங்குந்தர் கைக்கோளார் குலத்தில் பிறந்து தவம் புரிந்து ஈசனை அடைந்தார். எனவே ஒவ்வொரு மகாசிவராத்திரி அன்று நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தின் போது இக்குலத்தைச் சேர்ந்தவர்கள் அம்மனுக்கு சீர் வரிசை அனுப்பும் வழக்கம் நிலவுகிறது.இதன் தல விருட்சம் மகிழ் மரம்.

ஈசனின் கருவறை அகழி வடிவில் அமைந்துள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியும் உள்ளது. கோயிலின் நுழைவு வாயிலில் கவசமிட்ட கொடி மரமும், அறுபது அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன கொடிமரமும் உள்ளது. இது ராகு கேது தலம் என்பதால் அம்மனின் இடுப்பில் உள்ள ஒட்டியாணத்தில் கேது உருவம் காணப்படுகிறது. அம்மனின் சக்தி பீடங்களில் இது ஞான பீடமாகத் திகழ்கிறது. இங்கு அம்பிகையை வேண்டி சரஸ்வதி தீர்த்தத்தைக் கொடுத்தால் இயற்கையில் பேச்சு வராத குழந்தைகளுக்கும் பேச்சு வரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

அம்பிகை நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறாள். அன்னையின் திருவடியில் ஸ்ரீ ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த அர்த்த மேரு உள்ளது. அம்பிகைக்கு நடக்கும் கல்யாண உற்சவத்தின்போது, பொது மக்களும் திரளாகக் கூடி தங்கள் திருமணத்தை நடத்திக் கொள்கிறார்கள். இங்குள்ள பொன்முகலி ஆறு உத்தர்வாகினி என்பதால் இதில் அஸ்தி கரைப்பது விசேஷம் என்று கூறுகிறார்கள். திருக்கண்ணப்பர் இந்தப் பொன் முகலி ஆற்று நீரை தன் வாயில் அடக்கி ஈசனுக்கு அபிஷேகம் செய்தார்.

அம்பாளின் கருவறையை வலம் வரும்போது ஒரு மூலையில் வட்டமாக தரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அந்த இடத்தில் மூன்று தலைகள் சேர்ந்திருப்பது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.  இங்கு சக்தி வாய்ந்த யந்த்ரம் இருப்பதால் இங்கு அமர்ந்து அம்பிகையின் நாமத்தைச் ஜபம் செய்தால் மிக விசேஷம் என்று கூறப்படுகிறது.
நின்றிருக்கும் அன்னை அழகுடன் காட்சி அளிக்கிறாள். கண்களில் ஒளி சிந்த புன்னகையுடன், மகனே வா. என்னிடம் வந்து விட்டாயல்லவா? நான் இருக்கிறேன் என்று சொல்வது போல் உதடுகளில் புன்னகை கசிய காட்சி அளிக்கிறாள்.

சர்வலங்கார ரூபிணியாய், இரண்டு மூக்குத்தி, புல்லாக்கு, காதுகளில் தடங்கம் அணித்து, அழகு கொஞ்ச நிற்கும் அம்பிகையைத் தரிசிக்க பலகோடி ஜென்மங்கள் தவம் செய்திருக்க வேண்டும். அவளின் திருவடி தரிசனம் ஒன்றே பல ஜென்ம வினைகளைத் தீர்க்கக் கூடியது.

"நவ வித்ரும பிம்பஸ்ரீ' என்கிறது சஹஸ்ரநாமம். "கொள்ளேன் மனதில் நின் கோலமில்லாமல்' என்று உருகுகிறார் அபிராமி பட்டர். ஈசனின்  மனதில் உறையும் பெருமிதம் அம்பாளின் முகத்தில் மந்தஹாசப் புன்னகையாக விரிகிறது. காமேச மானசா என்று அதே லலிதா சஹஸ்ரநாமம் அவளை தோத்திரம் செய்கிறது.

இந்த வாழ்வு அம்பிகையின் துணையாலேயே முழுமை பெறுகிறது. நாம் அவளின் அருட்கரம் வேண்டித்தான் அன்றாடம் கதறுகிறோம். நம் கூக்குரல் கேட்டு ஓடோடி வருகிறாள் அம்பிகை. அதற்காகவே அவள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறாள்.

திருக்காளஹஸ்தி பல விஷயங்களில் சிறப்பு வாய்ந்த தலம். சிலந்தி, யானை, பாம்பு மூன்றும் வழிபட்ட இடம். அகத்தியர் விநாயகரை வழிபடாமல் சென்றதால் பொன்முகலி ஆறு வற்றியது. வருந்திய அகத்தியர் பாதாளத்தில் விநாயகரை பிரதிஷ்டை செய்தார். தன் வெப்பு நோயிலிருந்து நக்கீரர் விடுபட்ட தலம்.  அட்டமாசித்திகள் அணைதரு காலத்தி என்று சிறப்பிக்கப் படுகிறது. ராகு கேது பரிகார ஸ்தலம் என்பதால் இங்கு அப்பிரதக்ஷண முறையே காணப்படுகிறது. இங்குள்ள இரண்டு கால் மண்டபம் சிறப்பானது. இரண்டு கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்து கட்டப்பட்ட சிறிய மண்டபம்.

சொக்கப்பானை எரித்து எறிந்த அக்கரியை சுவாமிக்குப் பொட்டாக இடுகிறார்கள். பிரதான கோபுரம் தக்ஷிண கோபுரம் எனப்படுகிறது. குலோத்துங்கனாலும், எழு நிலைகளுடன் கம்பீரமாகத் திகழும் காளி கோபுரம் ஸ்ரீகிருஷ்ண தேவராயராலும் கட்டப்பட்டது. மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் எப்போதும் காற்று மோதியதுபோல் அசைந்து கொண்டே இருக்கிறது. சந்நிதியில் திருநீறு தரும் வழக்கமில்லை. பச்சைக் கற்பூரம் ,  பன்னீரில் கரைத்து அதைச் சங்கு ஒன்றில் வைத்துத் தருகிறார்கள். காலை முதல் மாலை வரை கோயில் திறந்தே இருக்கிறது.

இங்கு ராகு}கேது பரிகார பூஜை செய்வது மிகச் சிறப்பானது. சக்தி வாய்ந்த இந்த பூஜைகளைச் செய்தால் ஜாதகத்தில் உள்ள எப்படிப்பட்ட தோஷங்களும் விலகும். மற்ற கோயில்களைப் போல் சந்திர, சூரிய கிரகண நேரத்தின் போது கோயில் சாற்றுவதில்லை. கிரக தோஷ தலம் என்பதால் இங்கு நவக்கிரக சன்னதி இல்லை. சனீஸ்வரர் மட்டுமே உள்ளார்.
இங்கு பிரம்மோற்சவம், ஆனித் திருமஞ்சனம், நவராத்திரி, கார்த்திகை தீபம், மகா சிவராத்திரி, போன்றவைமிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன. அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்வது மிகச் சிறப்பு. அம்பிகையிடம் வேண்டினால் அனைத்துப் பிரச்சினைகளும் தீரும்.

தங்கள் பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் அம்பிகை, ஈசனுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் சாற்றியும், தங்கள் நன்றியைத் தெரிவிக்கிறார்கள். கோயில் திருப்பணிகளுக்கும் பொருள் உதவி செய்கிறார்கள்.ஞானம் வழங்கும் அம்பிகை நலன்களும் அள்ளி வழங்குகிறாள். ஞானதா, ஞான விக்ரஹா, என்று துதிக்கப்படும் அவள் சர்வ லோக நாயகி, சர்வார்த்த சாதினியாகவும் திகழ்கிறாள்.  

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.