செல்வ செழிப்பு அருளும் "ஏழுசெம்பொன்' !
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள "ஏழுசெம்பொன்' கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஞானசுந்தரி அம்பாள் உடனாய தென்திருக்காளத்தீசுவரர் கோயில்..


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள "ஏழுசெம்பொன்' கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஞானசுந்தரி அம்பாள் உடனாய தென்திருக்காளத்தீசுவரர் கோயில் வழிபாடு சிறப்புடன்,வரலாற்றுச் சிறப்பு உடையதாகவும் திகழ்கிறது.
பெயர்க் காரணம்: ஒரு காலத்தில் ஏழு குடங்களில் பொன் நிரப்பப்பட்டு, புதையலாக இந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தது என்று மக்களால் செவிவழிச் செய்தியாகப் பேசப்படுகிறது. ஆனால், வரலாறு கூறும் தகவலே நம்பத் தகுந்தமையாக உள்ளது. அதன் பிரகாரம், நடுநாட்டில் சேந்தமங்கலத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்களில் குறிப்பிடத்தக்க மன்னனாக விளங்கியவர் "பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவன்' என்ற சிறப்புப்பெயர் பெற்ற கோப்பெருஞ்சிங்கன் ஆவார்.
ஏழிசை மோகன் காடவராயன், ஏழிசை மோகன் ஆளப் பிறந்தான், ஏழிசை மோகன் மணவாளப் பெருமாள் என்போர் அவனுக்கு முன் ஆட்சி செய்தவர்கள். கோப்பெருஞ்சிங்கனுக்கும் ஏழிசை மோகன், அழகிய சீயன் என்ற சிறப்புப்பெயர்கள் உண்டு. இவர்கள் அனைவரும் ஏழிசை மோகன் என்ற ஊரைச்சார்ந்தவர்களாவார்கள். ஏழிசை மோகன் என்பதே காலப்போக்கில் மருவி ஏழுசெம்பொன் என்றாயிற்று.
கல்வெட்டுகள் உணர்த்தும் கோயில்கள் சிறப்பு: இவ்வூரில் உள்ள சிறப்புமிகு இரண்டு கோயில்களில் தென்காளத்தி உடைய நாயனார் என்ற சிவன் கோயில் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனால் (கி.பி. 1316) கட்டப்பட்டதாகும். மற்றொரு பெருமாள் கோயில், தென் திருவேங்கட பெருமாள் கோயில் என அழைக்கப்படுவதாகும். இக்கோயில்களில் மாறவர்மன் விக்கிரம பாண்டியன், நரசிங்கராயர்(1471), கிருஷ்ண தேவராயர்(1518) போன்ற மன்னர்களின் கல்வெட்டுகளால் பனையூர் நாடான எண்ணாயிரம் தென்பிடாகை தனியூர் ஏழிசை மோகன் எனவும், அழகிய சீய நல்லூர் பற்று எனவும் குறிப்பிடப்படுவதைக் காணமுடிகிறது. இவ்வூர்க்கோயில்கள் குமாரஹம்வீரர் என்ற மன்னர்களால் தாக்கப்பட்டதால் பழுதுபட்ட கோயில்களை விஜயநகரமன்னன் சாளுவ நாசிங்கனின் அன்னமரசன் என்பவர் சீர் செய்தார் என்பதையும் அறிகிறோம்.
ஆலய அமைப்பு: சிவன் கோயில் கருவறை இரண்டு நிலை விமானத்துடன் பல புராண வரலாற்றை நினைவுபடுத்தும் அழகிய சிவன் வடிவங்கள் சுதை சிற்பங்களாகக் காட்சி தருகின்றன. மூலவர் கருவறை நிறைந்த திருமேனியாக லிங்க வடிவில் காட்சி தருவது சிறப்பு. தரிசிப்பவர்களுக்கும் மன நிறைவு கிட்டும்.
மேற்கு தேவக் கோட்டத்தில் லிங்கோத்பவ மூர்த்தி அழகிய வடிவில் காட்சி தருகிறார். திருச்சுற்றில் பெரிய சந்நிதியில் வலம்புரி விநாயகர், முருகர், சண்டிகேசுவரர், அம்பாள், பைரவர், நவகிரக சந்நிதிகள் அமைந்துள்ளன. கோயில் எதிரில் நுழைவு வாயிலில் பலிபீடம் } நந்திமண்டபம் அழகுற அமைந்துள்ளது. இறைவன் சந்நிதிக்கு முன் அமைந்துள்ள மகாமண்டபத்தின் கூரைப் பகுதியில் அழகிய சுதை வடிவங்கள் காட்சி தருகின்றன.
வழிபாட்டு பலன்:வழிபாடுகுன்றி ஆலயம் சிதிலமடைந்தபோதிலும், முக்கிய விழாக்களாக பிரதோஷம், அன்னாபிஷேகம், திருவாதிரைத் திரு நாள் போன்றவைகள் நடத்தப்படுகின்றன. வழிபடுபவர்களுக்கு செல்வச் செழிப்பு, உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சியான வாழ்க்கை அடையலாம் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.
திருக்குட நன்னீராட்டு விழா: நூறாண்டுகளுக்குப் பின்னர், 2009-ஆம் ஆண்டு பாலாலயம் நடத்தப்பட்டு திருப்பணி நடைபெறுகிறது. வரும் செப் 1}இல் தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு வைபவம் சிறப்புடன் நடைபெற உள்ளது.
கோயில் அமைவிடம்: விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் 15 கி.மீ. தொலைவில் சூரப்பட்டு என்ற ஊரிலிருந்து 6 கி.மீ. தூரத்திலும், விக்கிரவாண்டியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள கஞ்சனூர் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
தகவல்களுக்கு: 7708463779
-கி.ஸ்ரீதரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...