நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆண்டவனிடம் விளக்கம் பெற்ற அற்புதர்!

புஷ்பபுரி என அழைக்கப்படுகிற பூவிருந்தவல்லியில் கோயில் கொண்டிருக்கிறவர் அருள்மிகு வரதராஜப்பெருமாள்.

News image
Updated On :4 மார்ச் 2022, 9:40 am

இரா. இரகுநாதன்


புஷ்பபுரி என அழைக்கப்படுகிற பூவிருந்தவல்லியில் கோயில் கொண்டிருக்கிறவர் அருள்மிகு வரதராஜப்பெருமாள்.

இத்தலத்திலிருந்து புஷ்பம் விளைவித்து தினமும் காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு கொண்டு சமர்ப்பித்து, ஆலவட்டக் கைங்கர்யம் செய்தவர் திருக்கச்சி நம்பிகள். இவர், ஸ்ரீமத் ராமாநுஜரின் ஆச்சாரியர்கள் 5 பேரில் ஒருவராவார்.

திருக்கச்சி நம்பிகள் 1009}ஆம் ஆண்டு மாசி மாத, மிருகசீரிஷ நட்சத்திர நன்னாளில் பூவிருந்தவல்லியில் வைஸ்ய குலத்தில் அவதரித்தவர். தினமும் காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டம் கைங்கர்யம் செய்யும்போதே நேரடியாக தேவப்பெருமாள் மற்றும் பெருந்தேவித் தாயாருடன் உரையாடவும் செய்வார். 

ஆதலால் பலரும் தங்கள் செய்கைகளுக்கு இவர் மூலமாக விளக்கம் கேட்டுப் பெறுவது வழக்கத்திலிருந்தது.  காஞ்சி திரும்பிய இளையாழ்வார் தன் தாயாரின் அறிவுரையின்படி ஆளவந்தாரின் சீடரும் காஞ்சி தேவப்பெருமாளின் அந்தரங்க தொண்டரான திருக்கச்சி நம்பிகளைத் தன்னுடைய வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார்.

இளையாழ்வார் திருக்கச்சி நம்பிகளை அணுகி, தன்னுடைய சந்தேகங்களுக்கான விடைகளை தேவப்பெருமாளிடமிருந்து பேசும்போது பெற்றுத்தருமாறு வேண்டினார். அன்றைய தினம் இரவு தேவப்பெருமாள் கீழ்க்கண்ட "ஆறு வார்த்தைகள்' என்று பிரபலமாக அழைக்கப்படும் (ஆறு கட்டளைகளை) நம்பிகள் வாயிலாக தெய்வத்தின் குரலாக தெரிவித்தருளினார்

தேவப்பெருமாள் இளையாழ்வாருக்கு அருளிய ஆறு வாக்கியங்கள்

1. நானே எல்லாவற்றுக்கும் மேலான மெய்ப்பொருள்.

2.ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறுபட்டவை.

3.என் ஒருவனையே தஞ்சமாகப் பற்றுவாய்.

4. மரணத் தறுவாயில் இருக்கும் சரணாகதர்களுக்கு, நானே அவர்களைப் ப்பற்றிய சிந்தனையை ஏற்பதால் என்னைப்பற்றிய சிந்தனை கட்டாயமில்லை.

5.சரணாகதர்கள் தங்களுடைய இந்த உடலின் முடிவிலேயே முடிவில்லாத பரமாத்மாவிற்கு கைங்கர்யம் செய்வதற்கான பரமபதத்தை அடைவர். அதனால் அவர்களுக்கு எவ்வித உபாதைகளும் ஏற்படாது.

6.மஹாபூர்ணரை (பெரிய நம்பிகளை) ஆச்சார்யனாக ஏற்றுக்கொள்ளச் சொல் என்ற பகவானின் இந்த ஆறு வழிகாட்டும் நெறிமுறைகளைத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இளையாழ்வாரும் பெரிய நம்பிகளை ஆசார்யனாக ஏற்று மதுராந்தகத்தில் பஞ்ச சம்ஸ்காரம் செய்துகொண்டு ஸ்ரீராமாநுஜர் என்ற திருநாமத்தை ஏற்றார்.

இந்த 6 வாக்கியங்களின் விரிவு மற்றும் விளக்கமாகவே பிற்காலத்தில் விஷிஷ்டாத்வைத சித்தாந்தக் கொள்கைகளை ராமாநுஜர் வகுக்க உதவியது.
திருக்கச்சி நம்பிக்கு கஜேந்திரதாசர் என்னும் திருநாமம் பெருமாளால் சூட்டப்பட்டதாகும். திருக்கச்சி நம்பிகள் தேவப்பெருமாளிடம் எம்பெருமான் உகந்த திருநாமம் ஒன்றை தனக்கு சூட்டுமாறு வேண்டினார். கஜேந்திரன் காஞ்சியில் தேவபெருமாளை வழிபட்டதால், அப்பெயர் தேவப்பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. எம்பெருமானும் கஜேந்திரதாசர் என்ற திருநாமத்தை திருக்கச்சி நம்பிகளுக்கு சூட்டி மகிழ்ந்தார்.

பூவிருந்தவல்லியில் அவதரித்த திருக்கச்சி நம்பிகள், வரதராஜப்பெருமாள் கோயிலில் தனி சந்நிதியில் கையில் திரு ஆலவட்டம் வைத்துக் கொண்டு அமர்ந்த கோலத்திலும் உற்சவர் நின்ற கோலத்திலும் அருள்கிறார். ஒவ்வொரு மாத மிருகசீரிஷ நட்சத்திர நாளிலும் இவரையும் பெருமாளையும் வழிபடுவோருக்கு செல்வம் பெருகி, பூரணபொலிவும் பெறுவர் எனப்படுகிறது. 
இந்த ஆண்டு மாசி மாத 10 நாள் உற்சவம் முழுவதும் திருக்கச்சிநம்பி மட்டுமே எழுந்தருள்வார். மார்ச் 2}ஆம் தேதி துவங்கி 12}ஆம் தேதி வரை திருவிழா நடைபெறும். தினமும் இரவு 8 மணிக்கு சிம்மம், யாளி, சந்திர பிரபை, சேஷ வாகனம், அம்ச வாகனம், குதிரை வாகனம், தங்கமுலாம், மங்களகிரி, யானை என நாளொரு வாகனத்தில் திருக்கச்சி நம்பிகள் எழுந்தருள்வார். மார்ச் 10}ஆம் தேதி காலை திருத்தேர் உற்சவமும், மாலை புஷ்பப்பல்லக்கும் நடக்கும். 11}ஆம் நாள் காலை நம்பிகளின் திருநட்சத்திர தினத்தன்று, சாற்றுமுறை உற்சவமும் நடைபெறும். 

இந்த உற்சவங்களில் கலந்துகொண்டு பெருமாளையும் நம்பிகளையும் ஒருநாளாவது சேவித்து தீர்த்தம் பெற்றுக் கொள்ள, பிரச்னைகள் தீர்ந்து செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை. இவ்வுற்சவத்தில் சாற்றுமுறையன்று திருக்கச்சிநம்பிக்கு பெருமாளின் தலைக்குப் பின்புறம் ஒளிவட்ட சூரியபாகையுடன் காட்சி தருவார். ஆதலால் இது சூரியத் தலமாகக் கருதப்படுகிறது. அன்று இங்கு வந்து வேண்டிக்கொள்ள எவ்வகை குறைபாடு இருந்தாலும் நீங்கி ஆரோக்கியம் மேம்படும் என்பதும் ஐதீகம். பூவிருந்தவல்லியை நம்பிச் சென்று நம்பியருள் பெறுவீர்! 

தொடர்புக்கு:  044 26272066 / 98415 08090 / 98848 08708. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.