தமிழ்த்தலைவன் காட்டும் திருமால்

நாராயணனை நாவால் பாடி மனதால் துதித்து, கண்டு ஆழங்கால்பட்டவர்கள் ஆழ்வார்கள்.
தமிழ்த்தலைவன் காட்டும் திருமால்
Updated on
2 min read

நாராயணனை நாவால் பாடி மனதால் துதித்து, கண்டு ஆழங்கால்பட்டவர்கள் ஆழ்வார்கள்.  அவர்களில் பொய்கை பேய் பூதம் என்ற அடைகளைக் கொண்டு ஆழ்ந்த பக்தியோடு விளங்கியவர்களை முதலாழ்வார்கள் என்பர்.

காஞ்சி திருவெஃகாயதோதகாரி பெருமாள் கோயிலின் அருகில் உள்ள புஷ்கரணியில் பொய்கை ஆழ்வார் ஐப்பசி திருவோணத்தில் பெருமாளின் பஞ்சாயுதங்களில் பாஞ்சசன்யம் என்னும் திருச்சங்கின் அம்சமாக அவதரித்தார். இவரின் வேறு  பெயர்கள் "காஸôர யோகி', "ஸரோ முனீந்திரர்'.
திருக்கடல்மல்லை ஸ்தலசயனப் பெருமாள் கோயிலின் அருகிலுள்ள குளத்தில் ஐப்பசி அவிட்டத்தில் பஞ்சாயுதங்களில் ஒன்றான கெüமோதகி என்னும் திருக்கதையின் அம்சமாக  பூதத்தாழ்வார் அவதரித்தார். இவரின் மறு பெயர்கள் "பூதஹ்வயர்', "மல்லாபுரவராதீசர்'.

திருமயிலை மாதவப்பெருமாள் கோயிலின் அருகில் உள்ள அருண்டேல் தெரு கிணற்றில் நந்தகம் என்னும் குறுவாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார். இவருக்கு  "மஹதாஹ்வயர்', "மயிலாபுராதிபர்' என்ற வேறு பெயர்களும் உண்டு, இவர்கள் துவாபரயுக முடிவுக்கும் கலியுக ஆரம்பத்துக்கும் இடையிலான யுக சந்நிதியில் மூவரும் முறையே அடுத்தடுத்த மூன்று நாள்களில் தாயின் கருவிலிருந்து பிறவாத அயோனிஜர்களாக எம்பெருமானின் தெய்வீகக்  கருணையால் பூவில் அவதரித்தனர் என வரலாறுகள் சொல்கின்றன.  இவர்கள் பிறந்ததிலிருந்தே திருமால் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். தமிழ்ப்  பாசுரங்களைக் கொண்டு உய்வித்ததால் இவர்களுக்கு முதலாழ்வார்கள் என்ற சிறப்புப்பெயர் ஏற்பட்டது. 

எம்பெருமான்  இவர்களை ஒரு சேரக் கண்டு தமிழைஅனுபவிக்கத் திருவுள்ளம் கொண்டான். மூவரையும் ஆயனார் என்ற பெயரோடு அருள்புரியும் திருக்கோவிலூருக்கு ஓர் இரவுப் பொழுதில் வரவழைத்தான். அன்று இரவு அடைமழை பெய்தது. மூவரும்  ஒருவர் பின்னர் ஒருவராக மிருகண்டு மகரிஷியின் ஆஸ்ரம  இடைக்கழி (பிரதான கட்டடத்துக்கும் வாயிலுக்கும் இடையே அமைந்த பகுதி) வந்தடைந்தனர். அந்த இடத்தில் மூவர் நிற்கலாம்.  இருவர் அமரலாம்.  ஒருவர் கிடக்கலாம். முதலில் பொய்கையாழ்வார் வந்தார். பின்னர் பூதத்தாழ்வார் வர இருவரும் உள் நுழைந்து அமர்ந்து கொண்டனர். பின்னர் பேயாழ்வார் வர,  மழையின் செயலால் முவரும் நிற்க மட்டுமே முடிந்தது.

நின்றவாறே மூவரும் ஒருவரையொருவர் அறியாமல் தங்கள் இறை அனுபவத்தைக் குறித்து பேசிக் கொண்டிருந்தனர்.  திடீரென்று எம்பெருமான் இருட்டு மிகுந்த இடைகழியில் மூவரும் நிற்பதைக் கண்டு  அவர்களுடன் தானும் சேர்ந்து நிற்க ஆவல் கொண்டு, பிராட்டி ஸ்ரீமஹாலட்சுமியுடன்   சேர்ந்து அங்கே சூட்சும  நிலையில் (கண்களுக்குப் புலப்படாமல் தோன்றி எழுந்தருளினார். 

பொய்கை ஆழ்வார் வெளிச்சத்துக்காக,  இவ்வையத்தை (உலகத்தை) தகளியாக (விளக்கு), வார்கடலை நெய்யாக,  வெய்யகதிரவனை விளக்கொளியாகக் கொண்டு  தமிழ் முதல் பாசுரத்தை இயற்றினார். பூதத்தாழ்வார் வெளிச்சத்துக்காகத் தன் அன்பையே தகளியாக, ஆர்வமே நெய்யாக, தன் இன்புறும் சிந்தையை இடுதிரியாகக் கொண்டு ஞானச்சுடர் விளக்கு இரண்டாம் பாசுரத்தின் மூலம்  ஏற்றினார். அந்தத் தீபங்களின் ஒளியில் திருமாமகளோடு கூடிய சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையுடன் திருமாலின் திருக்கண்டு, பொன்மேனிகண்டு நாலாயிரத்தில் உள்ள மூன்றாவது பாசுரம் பொய்கையாழ்வாரால்  இயற்றப்பட்டு  மங்களாசாசனம் செய்யப்பட்டது.  அவர் கண்டுகந்த அழகை கண்டதோடு மட்டுமல்லாமல்  மற்ற இரு ஆழ்வார்களுக்கு காட்டியும் மகிழ்ந்தார்.

இவ்வாறு நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் மூன்று பாசுரங்களும் இயற்றப்பட்டன. இதனை "கண்டமை காட்டும் தமிழ்த் தலைவன்' என்று பேயாழ்வாரைப் பற்றிய திருவரங்கத்தமுதனாரின் இராமானுச நூற்றந்தாதி குறிப்பிடுகின்றது.

திருக்கோவிலூர் வைபவம்: பேயாழ்வார் அவதாரத்தலமான மயிலாப்பூரில் அமைந்த இரு திருமால் தலங்களிலும் திருக்கோவிலூர் வைபவம் என்னும் திருநாமத்துடன் பேயாழ்வார் திரு அவதார உத்ஸவத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில், ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் பேயாழ்வார் அவதார உத்ஸவம் ஐப்பசி மாதத்தில் இரு கோயில்களிலும் நடக்கும். இவ்வாண்டில்  அவதார உத்ஸவம் அக்.  25}ஆம் தேதி  துவங்கி,  நவ. 3}ஆம் தேதி வரை  இதில் மாதவப்பெருமாள் கோயிலில் நவ. 1}இல் திருக்கோவிலூர் வைபவம் நடைபெறுகிறது.

தொடர்புக்கு: 04424985112,  9444487975 .

இரா.இரகுநாதன்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com