திருமணத் தடையை நீக்கும் சோமநாதர்!

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி ஆறு எந்த அளவுக்கு சிறப்புமிக்கதோ,  அதுபோலவே அதன் துணை நதிகளும் சிறப்பு பெற்றவை.
திருமணத் தடையை நீக்கும் சோமநாதர்!
Published on
Updated on
2 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரவருணி ஆறு எந்த அளவுக்கு சிறப்புமிக்கதோ,  அதுபோலவே அதன் துணை நதிகளும் சிறப்பு பெற்றவை. சித்தாறும், கடனாநதியும், பச்சையாறும் பெருமை பல பெற்றவை. இவற்றுள் பச்சையாற்றை "சியமளா நதி' என்று போற்றி புகழ்கின்றனர்.  கங்கையே சியமளா நதியாக ஓடிக்  கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

திருநெல்வேலியிலிருந்து பிரான்சேரி வழியாக,  களக்காடு செல்லும் சாலையில் உள்ளது தேவநல்லூர்.  இவ்வூரில் பக்தர்களின் திருமணத் தடையை நீக்கி அருள்பாலிக்கும் பழைமையான ஸ்ரீ கோமதி அம்பாள் சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி கோயில் பச்சையாற்றங்கரையில் அமைந்துள்ளது. 

தல வரலாறு: சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியை ஆண்ட மன்னர், வீரமார்த்தாண்டன் வேட்டைக்காக   வனப் பகுதிக்குச் சென்றார்.   அவர் சற்று இளைப்பாறிய போது தொலைவில் ஓர் அற்புதமான காட்சியை கண்டார். ஒரு வேட்டை நாய் முயலை துரத்தியது. முன்னால் ஒடிய முயல் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள இலந்தை மரத்தின் அருகே வந்ததும் திடீரென திரும்பி நாயை எதிர்த்து நிற்க,  நாயானது பயந்து ஓடியது.

மறுநாளும் இதேபோல் வேட்டை நாய்  ஒரு முயலை விரட்ட,  அதே இலந்தை மரத்தின் அருகே வந்ததும் முயல் எதிர்க்கத் தொடங்கியது.  இதைப் பார்த்த மன்னர்,  மரத்தின் அருகே குழி தோண்ட அங்கு சிவலிங்கம் கிடைத்தது. இறைவனின் பெருமையை எண்ணி பச்சைஆற்றின் கரையில் ஸ்ரீ சோமநாதருக்கு கோயிலைக் கட்டினார் மன்னர். இத்தலத்து இறைவியின் திருவுருவம் மிகவும் கலைநுணுக்கத்தோடும்,  மந்தகாசப் புன்னகையுடனும் பேசும் பொற்சித்திரமாகவும், இறைவனின் உள்ளத்திலேயே எழுதி வைத்திருக்கும் உயிர்  ஓவியமாகவும் அருள்பாலிக்கிறாள். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதில் அம்பிகைக்குத் தனிச் சிறப்பு உண்டு.

தேவநல்லூர் ஸ்ரீ சோமநாதர் கோயில், களக்காடு ஸ்ரீசத்யவாகீஸ்வரர் கோயில், சிங்கிகுளம் ஸ்ரீ கைலாசநாதர் கோயில்,  பத்தை ஸ்ரீ குலசேகரநாதர் கோயில்,  பத்மனேரி ஸ்ரீ நெல்லையப்பர் கோயில் ஆகிய ஐந்து தலங்களும் ஸ்ரீ ராமர்  வழிபட்டு பேறு பெற்ற பஞ்சலிங்கத் திருத்தலங்களாகப் போற்றப்படுகின்றன.

பலன்கள்:  களத்திரதோஷம் நீங்க பக்தர்கள் இங்கு வந்து கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் ஸ்ரீ சோமநாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும்  ஸ்ரீ கோமதிஅம்பாளையும் ஓர் இடத்தில் நின்றவாறே ஒரே நேரத்தில் சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்து, தங்கள் பெயர், நட்சத்திரத்துக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் விரைவில் திருமணம் கை கூடி வரும்.

இந்தக் கோயிலில் ஸ்ரீ கஜானன் மஹராஜ் கைங்கர்ய சபாதிருப்புடைமருதூர் சார்பில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி, ஜூலை 15-இல் நடைபெற உள்ள மஹா பிரதோஷ பூஜை சிறப்புஅபிஷேகங்கள், ஆராதனைகளுடன் நடத்தப்படவுள்ளன.  கோயில் முழுவதும் 1,008 தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இந்தப் பூஜையில் களத்திர தோஷம்  (திருமணத்தடை) உள்ளவர்களும்  ஜாதக ரீதியாக கிரக நிலை சரியில்லாதவர்களும் பங்கேற்று பயன் பெறலாம்.

அலங்காரத்தின் சிறப்பம்சமாக ஆயிரக்கணக்கான செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலர்களால் மட்டும் அம்மையப்பன் அலங்கரிக்கப்படுவர்.  மாலை 5.30 மணிக்கு கோயில் முழுவதும் பக்தர்கள் 1008 தீபங்களை ஒரே நேரத்தில் ஏற்றுவர். ஜாதக ரீதியாக கெடுபலன் உள்ளவர்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்றால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். விதிவசத்தால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.

சேரன்மகாதேவி வழியாக, திருநெல்வேலி-பாபநாசம் சாலையில்  15 கி.மீ.  தொலைவில் பிரான்சேரி உள்ளது. இங்கிருந்து களக்காடுக்கு பிரியும் சாலையில்  தேவநல்லூர் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com