பிதுர் யக்ஞம், தேவ யக்ஞம், பூத யக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளித்தல்), மனித யக்ஞம் (பிறருக்கு உணவு அளித்தல்), இலக்கியம் - வியாகரணம் - வேத சாஸ்திரங்களைப் பயில்தல் ஆகிய ஐந்தும் மனிதர்கள் ஆற்ற வேண்டிய
கடமைகளாகும்.
"பிதுர் யக்ஞம் புனிதமானது' எனக் கருதி முன்னோர்கள் வழிபட்டு வந்தனர். "தென்புலத்தார் வழிபாடு' என திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.
"போருக்குச் செல்லும் ஆண்களில் தென்புலம் வாழுநருக்கு அருங்கடன் இருக்கும் பொன்போல் புதல்வரை பெறாதவர்களை' போரிலிருந்து விலக்கி வைக்கும் அறப்போர் முறை பின்பற்றப்பட்டது' என புறநானூறு கூறுகிறது. "தென்புலத்தார் கடன் இருத்தல்' என்று சங்க இலக்கியங்களில் காணப்படுகிறது.
கடமை தவறினாலும் முன்னோர்களுக்கு நாம் உருப்பெற பட்ட கடனை அடைக்க வேண்டும்' என்பதே பிதுர்க்கடன். புத்திரன் (மகன்) என்ற சொல்லுக்கு "பிதுர்க்கடன் ஆற்றுபவன்' என்று பொருள்.
முன்னோர் வழிபாட்டுக்கு அமாவாசை திதி ஏற்றது. இருந்தாலும், தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை ஆகிய மூன்றும் மிகவும் சிறப்பானவையாகும். "ஆடி அமாவாசையில் முன்னோர்கள் நம்மை காண்பதற்காக பித்ருலோகத்திலிருந்து புறப்பட்டு வந்து, மகாளய அமாவாசையில் நம்முடன் தங்கி இருந்து தர்ப்பணங்களை ஏற்று ஆசி வழங்கி, தை அமாவாசையில் பித்ருலோகத்துக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்' எனக் கூறப்படுகிறது.
ஆவணி பெüர்ணமி தொடங்கி புரட்டாசி மாத அமாவாசை வரை வரக்கூடிய 15 நாள்கள், "மகாளய பட்சம்' எனப்படும் பித்ருக்களுக்குரிய காலமாகும். புரட்டாசி அமாவாசையே "மகாளய அமாவாசை' எனப்படுகிறது. "மகாளயம்' என்றால் "பெரும்திரள்' என்றும் "பட்சம்' என்றால் "பகுதியான
பதினைந்து நாள்கள்' என்றும் பொருள்.
உடலைக் கொடுத்தவர்கள் பெற்றோர். நம்மை ஆளாக்க, அவர்கள் அனுபவித்த துன்பங்களைப் பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் ஆண்டின் 365 நாள்களிலும் செய்ய வேண்டிய கிரியைகளில் ஏற்பட்ட குறைகளை ஈடு செய்யவும், பிராயச் சித்தமாகவும் மகாளயபட்ச திதிகள் கொண்டாடப்படுகின்றன. இந்த 15 நாள்களிலும் முன்னோர்கள் பிதுர்லோகத்திலிருந்து வந்து தற்போது உயிருடன் வாழும் சந்ததியினருடன் தங்கி சுக, துக்கங்களில் பங்கு பெற்று குறைகளை நிவர்த்தி செய்து செல்கின்றனர்.
"பித்ருக்கள் பெருந்திரளாக, மகாளய பட்சத்தில் எமனின் அனுமதியோடு சூரிய ஒளிக்கதிர்கள் வழியாக வருகின்றனர். அப்போது நாம் அவர்களுக்குப் பிடித்த உணவு வகைகளையோ, பழ வகைகளையோ எள்ளும் நீரும் தானம் செய்தால் அவர்களின் தாகமும், பசியும் தீர்ந்து மகிழ்வுடன் வாழ்த்தி, நோயற்ற வாழ்வை நமக்கு அளித்துத் திரும்பிச் செல்வார்கள்' என்று கருடபுராணம் கூறுகிறது.
தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மகாளய திதியில் செய்யலாம். அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைத் தகுந்தோர்க்குத் தானமாகக் கொடுத்து பித்ருக்களை திருப்தி செய்யலாம்.
வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மகாளய திதி செய்து பெரும்பேறு பெற்றனர் என்பது வரலாறு. மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும், வேதாளம் பற்றிக் கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதத்தில், கிருஷ்ண பட்சத்தில் மகாளயம் செய்ய வழிகூறினார்.
சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால் மகாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய் வழி, தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் உள்ளிட்ட ஏனைய அனைவருக்கும் திதி கொடுப்பதே தனிப்பெரும் சிறப்பாகத் திகழ்கிறது.
மாதம்தோறும் அமாவாசை விரதம் இருந்து, முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாதவர்கள், மகாளய அமாவாசையில் விரதம் இருந்தால் 12 மாதங்களும் விரதம் இருந்ததற்கு சமம்.
இத்தகைய சிறப்புமிக்க மகாளயபட்சம் இந்த ஆண்டு செப். 30}இல் தொடங்கியது. அக். 14}இல் அமாவாசை வருகிறது. இந்த 15 நாள்களும் பித்ருக்களுக்கு உரிய காலம் என்பதால், சுபகாரியங்கள் ஏதும் நடத்தப்படுவதில்லை.
நீர்நிலைகளில் முன்னோரை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் தீரும்; அவர்கள் மனம் குளிர அன்னதானம், வஸ்திர தானம், பழ வகைகள் தானம் போன்றவற்றைச் செய்தல் நன்மை பயக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.