ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

காத்தருளும் கற்கோடியம்மன்

News image
Updated On :7 ஜூன் 2024, 11:02 am

இரா. இரகுநாதன்

சென்னை மாநகரம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சின்னஞ்சிறு கிராமங்களாகவே அமைந்திருந்தன. சேத்துப்பட்டு கூவம் ஆற்றுக்கும், அண்ணா சாலையில் ஜெமினி மேம்பாலத்துக்கும் இடைப்பட்ட பகுதியான நுங்கம்பாக்கம், அப்போது கிராமமாக இருந்தது. இந்தக் கிராம மக்களின் நோய்களை நீக்கி நல்லாதரவு நல்கும் கிராமத் தேவதையாக ஏரிக்கரையின் கோடியில் முதலில் புற்று உருவாகவும், பின்னர் சிலாரூபமாய் இருந்து ஒரு தெய்வம் அருளியது.

கிராம எல்லையின் கோடியில் இருந்ததால், "கோடியம்மன்' என வணங்கப்பட்டது. பக்தர்களின் எதிரியின் கல் மனதையும் கரைத்து இருவரையும் ஒன்றாக்கி வைத்ததால், "கல் நெஞ்சு கரைத்து பலன் தரும் அம்மன்',

"கல் நெஞ்சை வளைக்கும் (கோடும்) அம்மன்' என்றெல்லாம் அழைத்து, நாளடைவில் "கல்கோடி அம்மன்' என்று அழைக்கலாயினர்.

150 ஆண்டுகளுக்கு முன்பாக, சென்னையின் பல பகுதிகளில் தொற்றுநோய்கள் அதிகரித்தன. இந்த நேரத்தில், நாகத்துடன் அம்மன் இருந்து பக்தர்களுக்கு அருளியதால், "கார்கோடக அம்மன்' என்று பெயர் பெற்று "கற்கோடி அம்மன்' என அழைக்கப்பட்டாள்.

விஷ ஜந்துக்களின் விஷத்தை இறக்குவதாகவும், மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் நோய் தீர்க்கும் காவல் தெய்வமாகவும் கோடியம்மன் விளங்கினாள். தங்களுக்கு அருள் செய்த அம்மனுக்கு சிறிய கருவறை சென்ற நூற்றாண்டிலேயே அமைத்ததாகவும் அது விரிவு செய்யப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வந்தது.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் வழியில் ராமா தெருவில் அமர்ந்து நோய்நொடி நீங்கும் காவல் தெய்வமாக கோடியம்மன் அருள் வழங்கிக் கொண்டிருக்கிறாள்.

கோயிலில் ஒரு மண்டபமும் அடுத்தது மூலவர் கர்ப்பக் கிரகம், மகா மண்டபம் உள்ளன. மூலவர் சந்நிதிக்கு பின்புறம் தீப்பாஞ்சம்மன் சந்நிதியும், மண்டபத்தின் இடது புறம் தல விருட்சம் வேம்பும் இருந்தது. இதைத் தவிர, ஸ்ரீ விநாயகர், சுப்பிரமணியர் , சப்த கன்னிகள், சிவன், அரசமர புற்றுமாரியம்மன் ஆகியன இருந்தன.

"கண்ணேறு' எனப்படும் திருஷ்டி தோஷம், சிறு நோய்கள் தீர்த்தல், திருமணப் பாக்கியம், குழந்தை பாக்கியம், பிரிந்த தம்பதியர் சேர்தல் போன்றவை அம்மனை வழிபட கிடைக்கும் என்பது ஐதீகம்.

நகர் வளர்ச்சியில் சாலை உயர்த்தியதால், கோயில் பாதிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையின் அறிவுரைப்படி, 2023}ஆம் ஆண்டு ஜனவரி 27}இல் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கியது. உயர்ந்த அடித்தளத்துடன் 16 தூண்களுடன் உயர்ந்த மகாமண்டபம், உயரமான கருவறை, அர்த்தமண்டபம், மூலவருக்கு திரிதள விமானம் ஆகியன ஆகம விதிப்படி கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. தீப்பாஞ்சம்மன் சந்நிதி இருந்தபடியே நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மூன்றடி உயர்த்தப்பட்டது.

கோஷ்ட தேவதைகள், சிவன், சப்த கன்னிகள் சந்நிதிகள் கற்கோயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் வசதிக்காக மூன்று நுழைவு வாயில்களிலும் நீர்க் குழாய் அமைப்பு, மழைநீர், அபிஷேக நீர் உறை கிணற்றுக்குள் சென்று வர வசதி, முதியோர்} உடல்நலம் பாதிக்கப்பட்டோர் தரிசனத்துக்கு வர ஏதுவாக வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 12}ஆம் தேதி காலை நடைபெறுகிறது.

விவரங்களுக்கு 9884011521

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.