பக்தர்களுக்காக பச்சை பட்டினி விரதம்
பார்வதிதேவியின் ரூபங்களில் ஒன்றான மாரியம்மன் கோயில் இல்லாத ஊர்களே இல்லை என்றாலும், சமயபுர மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.


பார்வதிதேவியின் ரூபங்களில் ஒன்றான மாரியம்மன் கோயில் இல்லாத ஊர்களே இல்லை என்றாலும், சமயபுர மாரியம்மன் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். சுயம்பு வடிவ அம்மன் தன்னுடைய எட்டு கரங்களில் கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியிருக்கிறாள். அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கவுமாரி, காரண சௌந்தரி, சீதளாதேவி, கண்ணபுரத்தாள், மகமாயி போன்ற பல பெயர்களும் உண்டு.
தைப் பூசத்தன்று அம்பிகை கொள்ளிடக்கரையின் தென் பகுதியில் தீர்த்தவாரிக்கு வரும்போது, ஸ்ரீரங்கப் பெருமாள் தன்னுடைய கோயிலில் இருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் போன்றவற்றை தங்கை சீராக எடுத்து வந்து மாரியம்மனுக்கு வழங்கும் நிகழ்வு இன்றளவும் நடைபெறுகிறது.
தட்சன் யாகத்துக்குச் சென்ற தாட்சாயணி வேள்விக் குண்டத்தில் தன்னுயிரை மாய்த்தபோது, அந்த உடலைத் தூக்கி சிவன் ருத்ரதாண்டவம் ஆடியதில் அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் திருத்தலத்துக்கு "கண்ணனூர்' என்ற பெயர் புராணகாலம் தொட்டே இருந்து வருகிறது.
"அம்மனின் திருமேனியில் நவ கிரகங்களும் சர்ப்பங்களாக உள்ளடங்கி இருப்பதால், தரிசனம் செய்தால் நவகிரக தோஷங்கள் நீங்கும். மனதாலும் உடலாலும் பிரச்னைகளைச் சந்தித்தவர்கள் சரணடைந்தால், மலைபோல வந்த துன்பம் கூட பனிபோல உருகி ஓடி விடும்' என்பது ஐதீகம்.
மும்மூர்த்திகளின் வேண்டுகோளை ஏற்று, மாயாசூரனையும், அவனுடைய சகோதரர்களையும் வதம் செய்து தலைகளைத் தன் உடலில் ஒட்டியாணமாக அணிந்து மக்களைக் காப்பாற்றிய அம்பிகையின் சிறப்புமிக்க கோயில் இது. வதை செய்த பாவத்தைப் போக்கவும், உலக நன்மைக்காகவும் அம்பிகை தவம் செய்து வருகிறாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆண்டுதோறும் மாசி கடைசி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, பங்குனி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மனே பக்தர்களுக்காக 28 நாள்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது கோயிலின் தனிச் சிறப்பாகும். இந்த நாள்களில் அம்மனுக்கு துள்ளுமாவு, கரும்புச் சாறு, திராட்சை, இளநீர், பானகம், ஆரஞ்சுப் பழம் போன்றவையே படைக்கப்படும். இத்துடன், வண்ண மலர்கள், வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படும் "பூச்சொரிதல் திருவிழா' இந்த ஆண்டு மார்ச் 10, 17, 24 , 31 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது. சென்னை சிம்சனில் பணிபுரிந்த சிதம்பரம் ஐயரால் தொடங்கப் பெற்ற, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் பூச்சொரிதல் விழாக் குழுவினர் 48}ஆம் ஆண்டாக முதல்நாள் வைபவத்தை நடத்துகின்றனர். தொடர்புக்கு: 98407 32978, 97898 56037.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...