குடகுமலைச் சாரலில், நிர்மலன் என்ற அரசன் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் ஒருமுறை வனப் பகுதிக்குச் சென்றபோது, நாரதரைச் சந்தித்து தன் குறைகளைச் சொன்னார்.
"இளம் வயதில் வனத்தில் பதுங்கி வழிப்போக்கர்களை வழிமறித்து, கொலை செய்து கொள்ளையடித்து வாழ்ந்ததன் விளைவே தனக்கு இந்த வியாதி' என்று நிர்மலன் சொன்னபோது, மனம் இறங்கிய நாரதர் ஒரு மந்திரத்தை உபதேசித்தார். மந்திரத்தை தினமும் மனமுருகி வேண்டினார் நிர்மலன்.
ஒருநாள் அசரீரி ஒலித்து, ""காவிரிக்கரையில் உள்ள குளங்களில் நீராடு. உன் நோய் எங்கு குணமாகிறதோ அங்கே நீ பாவ விமோசனம் அடைவாய்''என்றது.
மனம் மகிழ்ந்த நிர்மலன் குளங்களில் நீராடியபோது, மூவலூர் திருத்தலம் வந்து மாணிக்க சகாயேஸ்வரரை வணங்கினார். அப்போது, ""பக்தா! உனது துயர் நீங்கும் காலம் வந்துவிட்டது. வடக்கே சற்று தொலைவில் ஒரு திருக்குளம் தென்படும். அதில் நீராடு. உன் நோய் நீங்கும். அங்கேயே தங்கிவிடு''என்று அசரீரி ஒலித்தது. இதன்படி, "கோடி ஹத்தி' என்ற இடத்தில் நிர்மலனின் குஷ்ட நோய் குணமானது.
தனக்கு வாழ்வு அளித்த கடவுளைத் தரிசித்து கடும் தவம் செய்த நிர்மலனுக்கு அங்கிருந்த பெரிய அத்தி மரத்தில் பெருமாள் காட்சி அளித்தார்.
""நீ இனி "பிப்பிலர்' என அழைக்கப்படுவாய். நீ நீராடிய தீர்த்தம் இனி "பிப்பில மகரிஷி தீர்த்தம்' என அழைக்கப்படும். இங்கு நீராடுபவர்களின் பிறவிப் பிணி, மெய்ப் பிணி அனைத்தும் நீங்கும்'' என பெருமாள் அருளி மறைந்தார்.
நிர்மலன் தவம் செய்த இடத்தில் தற்போதும் ஒரு மண்டபம் இருக்கிறது. ஏராளமானோரின் பாவ, தோஷங்களையும் இந்தத் தலம் நிவாரணம் செய்ததால் "கோடி ஹத்தி' எனவும் "பாப விமோசனபுரம்' எனவும் அழைக்கப்பட்டது. பேச்சு வழக்கில் மருவி, "கோழிகுத்தி' என்று அழைக்கப்படுகிறது.
சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த நிகழ்வுகள் நடைபெற்றதாகத் தல வரலாறு கூறுகிறது. ஏழு மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் கிரந்த மொழியில் எழுதப்பட்ட மூன்று கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. மூன்றாம் குலோத்துங்க சோழன் கோயிலுக்கு மானியங்கள், திருப்பணிகள் செய்ததாக அறியப்படுகிறது.
தஞ்சை சரபோஜி மன்னரும் இங்கு தரிசித்து பெருமாள் அருள் பெற்று, யுத்த தோஷம் நீங்கப் பெற்றார். பின்னர், அவர் அத்தி மரத்தில் 14 அடி உயரத்தில் சிலையாக பெருமாளை வடித்து, மூலவராய் கொண்டு கோயிலை எழுப்பினார். மர வேரே இறைவன் திருவடிகளைத் தாங்கி நிற்கும் அதிசயம் இங்குள்ளது.
மூலவருக்கு ஸ்ரீ வானமுட்டி பெருமாள், ஸ்ரீநிவாச பெருமாள், ஸ்ரீ பக்தப்ரியன், ஸ்ரீ வரதராஜன் என்ற பெயர்கள் உண்டு. தாயார் ஸ்ரீ லட்சுமி எனவும் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் எனவும் வணங்கப்படுகிறார்.
ஐந்து அடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கியிருக்கும் கோயில் முன்புறம் விஸ்வ புஷ்கரணி எனப்படும் குளம் உள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், முக மண்டபத்துடன் உள்ளது. மூலவர் நான்கு கைகளுடன் 14 அடிக்கு மேல் உயரம் கொண்டவர். மேல் கைகளில் சங்கு சக்கரம் கீழ் இடது கரம் அபய கரமாகவும் உள்ளது. மார்பில் ஸ்ரீ தயா லட்சுமியும், இடதுபுறம் பூதேவியும் உள்ளனர்.
முக மண்டபத்தில் கீழ் ராஜகோபுரத்துக்கு அடுத்து கருடன், கொடிமரம், பலிபீடங்கள் உள்ளன. அர்த்தமண்டபத்தில் சக்கரத்தாழ்வார், நர்த்தன கிருஷ்ணர், யோக நரசிம்மர் ஆகியோர் உள்ளனர். பிரகாரம், மண்டபத்தில் சப்த ஸ்வர விஸ்வரூப ஆஞ்சநேயர், விஸ்வக்சேனர், ராமானுஜர், பிப்பல மகரிஷி. கருவறை சுவரில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் இருக்கிறார். அனுமன் சப்தஸ்வர அனுமன் எனப் போற்றப்படுகிறார்.
இங்கு வழிபட்டால் காஞ்சிபுரம் அத்தி வரதர், திருப்பதி ஏழுமலையான், நரசிம்மர் ஆகிய மூவரையும் ஒரு சேர வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மயிலாடுதுறையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கவனம் ஈர்க்கும் சேலம் எடப்பாடி தொகுதி!

திருநீறு அணிந்து காட்சிதரும் பெருமாள்!

செல்வ வளம் தரும் சென்றாயப் பெருமாள்

ஸ்ரீ கபிலேஸ்வரா் கோயிலில் பிப். 15-இல் மகா சிவராத்திரி உற்சவம்
வீடியோக்கள்

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

