தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

செல்வ வளம் தரும் சென்றாயப் பெருமாள்

சென்றாயப் பெருமாளின் அருளால் செல்வ வளம் பெறும் பக்தர்கள்..

News image
சென்றாயப் பெருமாள்
Updated On :6 மார்ச் 2026, 10:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

காக்கும் கடவுளான மகாவிஷ்ணு, சென்றாயப் பெருமாள் என்கின்ற திருநாமத்தில் மலைமீது வீற்றிருந்து அருள்பாலிக்கும் தலம், கோட்டைப்பட்டி.

சுமார் நானூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இப்பெருமாள் கோயில் குறித்து ஒரு வரலாறு உண்டு.

முற்காலத்தில், இந்தப் பகுதி அடர்ந்த வனமாகத் திகழ்ந்துள்ளது. சென்னம நாயக்கர் என்பவர், தினமும் இங்கு ஆடு-மாடுகள் மேய்க்க வருவது வழக்கம்.

ஒரு நாள், அவரது பசுக்களில் ஒன்று காணாமல் போனது. வனம் முழுவதும் தேடியலைந்த சென்னம நாயக்கர், இறுதியாக அருகில் இருந்த மலையில் ஏறி, உச்சியை அடைந்துள்ளார்.

அங்கே ஓரிடத்தில், இதுவரை கன்றே ஈனாத இவரது பசு பால் சொரிய, பாலக ரூபமாக பெருமாளே அந்தப் பாலை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்ட சென்னம நாயக்கர் ஆச்சரியமடைந்து பெருமாளை வணங்கி நின்றார்.

அப்போது, "இனி, இந்த மலையில்தான் நான் வாசம் செய்யப்போகிறேன். என்னை வழிபடும் உன்னை மட்டுமன்றி, உன் சந்ததியினரையும், என்னை நாடி வரும் மக்களையும் நான் வாழ வைப்பேன்!'' என்று ஆசரீரி வாக்காகக் கூறி, அருள்புரிந்தார் பெருமாள்.

இதைக் கேட்ட சென்னம நாயக்கர், ""எனக்கு வாரிசு எவரும் இல்லையே... என்ன செய்வது?'' என்று பகவானிடம் முறையிட்டு அழுதார்.

""வருந்தாதே! விரைவில் உனக்கு வாரிசு உண்டாகும்; இனி, உனது வாக்குகள் யாவும் பலிக்கும்!'' என்றார் பெருமாள்.

நாள்கள் நகர்ந்தன. பெருமாள் அருளியபடியே சென்னம நாயக்கர் தம்பதிக்கு குழந்தை பிறந்தது.

பிற்காலத்தில் சென்னம நாயக்கரின் மூத்த மகன் கோவிந்தப்ப நாயக்கரே இந்த இடத்தில் பெருமாள் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து, திருக்கோயிலும் எழுப்பினாராம். சென்னம நாயக்கருக்கு காட்சி தந்தவர் என்பதால் இவருக்கு "சென்றாயப் பெருமாள்' என்ற திருநாமம் அமைந்ததாம்!

இங்கு பெருமாள் பாலகன் என்பதால் இறைவனுடன் "தாயார்' வீற்றிருக்கவில்லை. இருந்தபோதிலும், மக்களாக விருப்பப்பட்டு திருவுருவக் கவசத்தின் மார்புப் பகுதியில் லட்சுமி முகம் பதித்து வணங்குகின்றனர். செல்வ வளம் அருள்வதில் பெரும் வரப்பிரசாதியாகத் திகழ்கிறார் சென்றாயப் பெருமாள்.

இங்கு பெருமாள் சிறுவனானாலும் முறுக்கு மீசை, தாடியுடன் காட்சியளிப்பதும், இரு கைகளைக் கூப்பி நிற்பதும் சிறப்பாகும். ஒவ்வொரு சனிக்கிழமையும் பஜனைப் பாடல்கள், கிருஷ்ண லீலைகள் போன்றவற்றைப் பாடிக்கொண்டாடுகின்றனர். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பங்குனித் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது, மூலவரே உற்சவராக வீதி உலா வருகிறார்.

கிட்டத்தட்ட 500 படிகள் கொண்ட மலை உச்சியில் வீற்றிருக்கும் சென்றாயப் பெருமாளுக்கு ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் படிபூஜையும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், சென்றாயப் பெருமாள் குழந்தைத் திருவுருவம் ஏற்றிருப்பதால், கிருஷ்ண ஜெயந்தி இங்கு மிகவும் விசேஷம். வைகுண்ட ஏகாதசி நாள்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஓணம் பண்டிகையன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அணிந்த மாலை சென்றாயப் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.

சென்னம நாயக்கருக்கு பங்குனி மாதத்தில் நான்காம் வெள்ளிக்கிழமையன்றுதான் பெருமாள் திருக்காட்சி தந்தருளினாராம். இதையொட்டி, இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மூன்று நாள்கள் இங்கு நடைபெறும் விழா பிரசித்தி பெற்றது. இந்த வருடம் ஏப்ரல் 10, 11, 12 ஆகிய தேதிகளில் இவ்விழா கொண்டாடப்பட இருக்கிறது.

விழா நாளில் மலையில் இருந்து சென்றாயப் பெருமாள் வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார். இரண்டாவது நாள் தேவராட்டம், கும்மியாட்டம் மற்றும் தாரை, தப்பட்டை, கொம்பு உள்பட அனைத்து வாத்தியங்கள் முழங்க பெருமாள் வீதி உலா அழைத்துச் செல்லப்படுகிறார். மூன்றாவது நாள் ராஜகம்பள சேவை நடைபெறும்.

இவ்வாறான நிகழ்வுகளில் திருமண வரனுக்காகக் காத்திருப்போர், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அனைவரும் வேண்டுவர். ஏற்கெனவே வேண்டிக் கொண்டு நலம் பெற்றவர்கள் அக்னிச் சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களைச் செலுத்தி மகிழ்வர்.

காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் சென்றாயப்பெருமாள் கோயில், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில், கோட்டைப்பட்டி கிராமத்தில் உள்ள மலையின் மீது அமைந்துள்ளது.

- சோழவந்தான் ஜனகராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.