விசாகப்பட்டினத்தில் பிறந்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நீதிபதியாக இருந்தவர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர். இவர் காஞ்சி மடத்தில் சந்நியாச தீட்சை பெற்று, ஸ்ரீ தத்தாத்ரேயர் குரு பரம்பரையில் ஒருவர் என்ற பெயர் பெற்றாலும், "ஜட்ஜ் சுவாமிகள்' என்றே அழைக்கப்பட்டார். 1907}இல் பாத யாத்திரையாகவே புதுக்கோட்டை நார்த்தாமலைக்கு வந்த ஜட்ஜ் சுவாமிகள், கீழ ஏழாம் வீதியில் ஓரிடத்தில் சமாதி அடைந்தார். அப்போதே எளிய அதிஷ்டானம் அமைக்கப்பட்டிருக்கிறது.
"சேந்தமங்கலம் பெரியவர்' என்று அழைக்கப்படும் ஸ்ரீ ஸ்வயம் ப்ரகாச பிரேம்மேந்திர சரஸ்வதி சுவாமிகள், 1871-இல் விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்தவர். இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. 1931-இல் நாமக்கல் சேந்தமங்கலத்தில் ஸ்ரீ தத்தாத்ரேயர் சந்நிதியை எழுப்பினார். பின்னர், அவர் தனது குருவான ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானம் குப்பை மேடாக இருப்பதை கனவில் அறிந்து, இங்கு வந்து திருப்பணி செய்து 1936 மே 31-இல் கும்பாபிஷேகத்தை நடத்தியிருக்கிறார்.
மதுரை அழகாபுரியில் பிறந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற சுப்ரமணியம், ஸ்ரீ ஸ்வயம் பிரகாசரின் தீட்சை பெற்று ஸ்ரீ சாந்தாநந்த பிரம்மேந்திர சரஸ்வதி என்ற பெயர் பெற்றார். ஸ்வயம் பிரகாசரின் அறிவுரையின்படி, ஜட்ஜ் சுவாமிகளின் அதிஷ்டானத்தின் பொறுப்பேற்று, இப்போதுள்ள ஸ்ரீ புவனேஸ்வரி கோயிலையும், 1962}இல் உருவாக்கியவர் ஸ்ரீ சாந்தாநந்தர். "ஹ்ரீம்' என்ற சக்தி வாய்ந்த மந்திரத்தை ஐந்து கோடி முறை உச்சரித்து, புவனேஸ்வரி திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்தார் சாந்தாநந்தர்.
1956}இல் கோவை பேரூரில் பிறந்து, திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனத்தில் சுவாமி சித்பவானந்தரிடம் தீட்சை பெற்றவர் ஸ்ரீ ஓம்காராநந்தா சுவாமிகள். இவரது இயற்பெயர் மனோகரன். 2005-இல் புவனேஸ்வரி பீடத்தின் பொறுப்பேற்ற இவர், ஆறு ஆண்டுகள் பீடத்தை நிர்வகித்தார். 2021-இல் சமாதியடைந்தார். முன்னதாக, 2017}இல், அவர் தொடங்கி வைத்த கல்ஹாரப் பணிதான் தற்போது நிறைவடைந்து மகா கும்பாபிஷேகம் காண்கிறது.
திருச்சி லால்குடி ஆங்கரையில் 1970 டிசம்பர் 1ஆம் தேதி பிறந்தவர், பூஜ்யஸ்ரீ ப்ரணவாநந்த பிரம்மேந்திர சரஸ்வதி. ஸ்ரீ ஓம்காராநந்தரின் சமாதிக்குப் பிறகு, ஸ்ரீ ஸ்வயம் ப்ரகாச அவதூத சதாசிவ அறக்கட்டளையின் அறங்காவலர்கள், பக்தர்கள் தேர்வு செய்து பீடத்தின் பொறுப்பேற்றுள்ளார்.
திருவையாறு ஸ்ரீ தர்மசம்வர்த்தினி கோயிலை அடிப்படையாகக் கொண்டு, 14 ஆயிரம் சதுர
அடியில் கல்ஹாரக் கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 93 தூண்களில், 25 தூண்கள் முன்மண்டபத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணிலும், நாற்புறங்களிலும் 8 விக்ரஹங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 4 நின்ற நிலையிலும், 4 அமர்ந்த நிலையிலும் உள்ளன.
பிரகார மண்டபத்தில் உள்ள 56 தூண்களில் ஒவ்வொரு தூணிலும், 7 விக்ரஹங்களும், ஒரு தீபமங்கையும் செதுக்கப்பட்டுள்ளன. உயர்மட்ட மண்டபத்தில் 12 தூண்கள் உள்ளன. ஜகன்மாதா புவனேஸ்வரியின் அவதாரங்கள், குருப் பரம்பரையின் விக்ரஹங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 93 தூண்களில் 744 சிற்பங்கள் அமைந்துள்ளன.
பெüர்ணமிகளில் நடைபெறும் சண்டி ஹோமம் பிரசித்தி பெற்றது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், விசேஷ நாள்களில் சிறப்புப் பூஜை உண்டு.
"கோயில் வளாகத்தில் அமைதியாக தியானம் செய்து, தங்களின் குறைகளை அம்மனிடம் ஒப்படைத்து, மனநிறைவோடு செல்லும் பக்தர்கள் ஏராளம். சகல தோஷங்களையும் போக்கும் ஜகன்மாதா ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் பூஜ்யஸ்ரீ ப்ரணவாநந்த மகா சுவாமிகளின் நிர்வாகத்திலுள்ள ஸ்ரீ ஸ்வயம் ப்ரகாச அவதூத சதாசிவ அறக்கட்டளை சார்பில் திருப்பணி செய்யப்பட்டு, முழுமையான கல்ஹாரக் கோயிலாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஜட்ஜ் சுவாமிகளின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி ஹஸ்த நட்சத்திரத்தில், இந்தக் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 5}இல் (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.