
ராஜராஜ சோழன் புகழ்ந்த காஞ்சிக் கோயில்!
காஞ்சிபுரம் வேகவதி கரையில் கற்றளி வடிவில் எழுந்த கைலாசநாதர் கோயில் பற்றி..
காஞ்சிக் கோயில்
தமிழ்நாட்டின் மிகப் பழைமையான, புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று, காஞ்சிபுரம். இது "கோயில்களின் நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோயில் எழுப்பிய ராஜசிம்ம வர்மன், தலைநகர் காஞ்சியில் ஒரு கோயில் கட்ட முடிவெடுத்தான். அங்கு மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் பயன்படுத்தாமல் "கற்றளி கோயில்' அமைக்க வேண்டும் என்கிற ராஜ சிம்ம வர்மனின் சிந்தனையின் வெளிப்பாடே கைலாச நாதர் கோயில்.
கல்வெட்டுகளில் "ராஜசிம்மேச்சரம்' என்றும், புராணத்தில் "தென்திசை கைலாயம்' என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.
வேகவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் கி.பி. 7}ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டத் தொடங்கி, 8 }ஆம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
முதலாம் மகேந்திர வர்ம பல்லவ மன்னனின் மகன் முதலாம் நரசிம்ம பல்லவ மன்னன் (மாமல்லன்). இவனுடைய கொள்ளுப் பேரன் இரண்டாம் நரசிம்ம பல்லவ மன்னன் (ராஜசிம்மன்) ஆட்சிக் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ராஜசிம்ம வர்மன் தான் மட்டுமல்லாது இக்கோயில் திருப்
பணியில் தனது மனைவி, மகனையும் ஈடுபடுத்தியுள்ளான்.
பிற்காலத்தில் விஜயநகரப் பேரரசு ஆட்சியின்போது சிலபகுதிகளை இணைத்து மிகவும் திருத்தமாக இக்கோயிலின் கட்டுமானங்களை நடத்தி இருப்பதாகவும் தெரிய வருகிறது.
ஒருசமயம், சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன், பழைய பகையைத் தீர்த்துக் கொள்வதற்காக காஞ்சியை அழிக்கும் நோக்கில் அந்நகரின் மீது படையெடுத்து வந்தான்.
அப்போது இக்கோயிலின் பேரழகு அவனை வெகுவாகக் கவர்ந்தது. அதனால் மனம் மாறிய மன்னன், தனது படையெடுப்பைக் கைவிட்டதோடு, கோயிலுக்குப் பலவகை தானங்களும் வழங்கித் திரும்பிச் சென்றதாகக் கல்வெட்டுத் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கோயிலை "கோயில்களுக்கெல்லாம் கோயில்' என்று அழைக்கின்றனர். அத்துடன் ஆகம விதிகள் ஏற்படுவதற்கு முன்பே கட்டப்பட்ட கோயில் என்பதால் கொடிமரம், பலிபீடம் கிடையாது.
கோயில் வளாகத்துக்குள் நுழைந்தவுடன் பார்க்கும் திசையெல்லாம் பச்சைப்பசேல் புல்வெளிகளுடன் மனதைக் கொள்ளை கொள்கிறது. சிலநூறடி தூரத்தில் கல்மண்டபத்தின் நடுவே நந்தி, சுற்றியும் நான்கு சிம்மங்கள் அமைந்துள்ளன.
கைலாசநாதரின் லிங்கத்திருமேனி கருவறையில் கிழக்கு நோக்கி அமையப் பெற்றிருக்கிறது. எட்டடி உயரத்தில் ஒரே கல்லினால் உருவாக்கப்பட்டிருக்கிற லிங்கத்தில் பதினாறு பட்டைகள் உள்ளதால் "ஷோடசலிங்கம்' எனக்கூறப்படுகிறது. அத்துடன் கருவறையின் பின்புறச் சுவரில் சிவபெருமான், ஏலவார்குழலி, முருகனுடன் சோமாஸ்கந்தர் வடிவில் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகின்றனர்.
கருவறையைச் சுற்றி ஒரு நபர் தரையில் படுத்து ஊர்ந்து செல்லக்கூடிய அளவில் சதுர வடிவிலான பாதை உள்ளது. கருவறையை வலம் வர விரும்பும் பக்தர்கள் இவ்வழியாகச் சென்று மீண்டும் தரையில் படுத்து ஊர்ந்து கொண்டே வெளியே வர வேண்டும். இதற்கு "சாந்தார நாழிகை' என்று பெயர். இதனுள்ளே சென்று வந்தால் மறுபிறவி கிடையாது எனச் சொல்லப்படுகிறது. கருவறை கைலாயம் போன்ற அமைப்புடன் உள்ளதால் "பூலோக கைலாயம்' என்றும் அழைக்கப்படுகிறது.
ராஜகோபுரத்தைவிட கருவறை விமானம் பெரியதாக அமைக்கப்பட்டிருக்கிறது. மூலவர் சந்நிதியைச் சுற்றி வரும்போது ஓரிடத்தில் பூதகணங்களின் சிலைகள் புன்னகை, கோபம், சேட்டை எனப் பல்வேறு முகபாவங்களை வெளிப்படுத்துகின்றன. கல்லில் பூத்த காவியம் போல உள்பிரகாரப் பகுதிகள் மற்றும் வெளிச் சுற்றுச்சுவர்களில் ஏராளமான சிற்பங்கள் பல்வேறு வடிவங்களில் செதுக்கப்பட்டுள்ளன.
சிவன், பார்வதி மற்றும் மகாவிஷ்ணுவின் பல்வேறு திருக்கோலங்கள் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. மிருதங்கம் வாசிக்கும் தட்சிணாமூர்த்தியை நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். மகிஷனை அழித்த வெற்றிக் களிப்புடன் விளங்கும் மகிஷாசுரமர்த்தினி சிம்மத்தின் மேல் ஒரு காலைத் தூக்கி வைத்து, கரங்களில் ஆயுதங்களை ஏந்தியிருந்தாலும், அவளின் திருமுகத்தின் அழகும், கம்பீரமும் மின்னுகிறது.
இரண்யனை வதம் செய்யும் காட்சியில் நரசிம்ம மூர்த்தியை தரிசனம் செய்யும்பொழுது, "எங்கே அவர் பாறையைப் பிளந்து கொண்டு வெளியே வந்து விடுவாரோ?' என்று நினைக்கத் தோன்றுகிறது. அவ்வளவு தத்ரூபமாக வடிக்கப்பட்டிருக்கிறது.
பல்லவர் காலம், சோழர் காலம் மற்றும் நாயக்கர் கால ஓவியங்கள், வரிவடிவம், வண்ணச்
சிலைகள், நாகரி கல்வெட்டு, கிரந்த கல்வெட்டு மற்றும் அலங்கார ஓவியக் கல்வெட்டு, அலங்கார லிபி, தமிழில் ஓவிய எழுத்துகளும் இங்கு காணமுடிகிறது.
ஓர் ஆள் உயரம் கொண்ட நந்தி ஒரு கணம் நம்மை பிரம்மிக்கச் செய்கிறது. பழங்கால மூலிகை ஓவியங்கள் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள இக்கோயிலில், மகாசிவராத்திரி வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவதுடன் பிரதோஷ நாள்களில் சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டு முந்நூறு வருடங்களுக்குப் பிறகு ராஜராஜ சோழன் இக்கோயிலைப் பார்த்து, "கச்சிப்பேட்டு பெரிய திருக்கற்றளி' எனப் புகழ்ந்து கூறியிருக்கின்றான்.
தரிசனத்துக்காக காலை 9 மணிமுதல் 12.30 மணியிலும், மாலை 4 மணிமுதல் 6.30 மணிவரையிலும் திறந்திருக்கும் கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
- மதுரை ஆர்.கணேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





