குளத்தின் பெயரால் ஊர்கள் அமைவது அக்கால வழக்கம். அவ்வகையில் அமைந்த தலம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முடுக்கன் குளம். புராணத்துடன் தொடர்புடைய தலம்.
அசுரனின் மகள் அழகிய நங்கையான மண்டோதரி. அவள் பக்தியில் சிறந்த சிவனடியார் ஒருவரை மணம்புரியும் வரம் வேண்டி, அசுரர்களின் குலகுருவான சுக்ராச்சாரியாரை பணிந்து நின்றாள்.
அவர், "தென்பாண்டி நாட்டில் வில்வவனம் செழித்து வளர்ந்திருக்கும் தலத்தில் அமைந்துள்ள சிவகாம புஷ்கரணியில் நீராடி, குளக்கரையில் ஒரு சிவலிங்கத்தை நிறுவி, தினமும் பக்தியோடு வழிபட்டு வர நினைத்தது நிறைவேறும்'' எனச் சொல்லி, ஆசிர்வதித்து அனுப்பினார்.
முனிவர் கூறியபடி மண்டோதரி பாண்டிய நாட்டில் நெல்வயல்களுக்கு மத்தியில் தாமரை மலர்கள் பூத்து மணம் பரப்பி நிற்கும் குளத்தைக் கண்டாள். பெருமகிழ்ச்சி அடைந்தாள். அருகே ஒரு சிவலிங்கம் நிறுவி வழிபட்டு வந்தாள்.
ஒருகட்டத்தில் அவளது பக்தியை மெச்சிய இறைவன் அவளது தோஷம் நீக்கி, இலங்காபுரி வேந்தனான ராவணனை உத்திரகோசமங்கையில் மணம் புரிய வரமளித்தார். அது வண்ணம் மண்டோதரியும் ராவணனைக் கரம் பிடித்து இலங்கை சென்றாள்.
முடுக்கன் என்பது அன்றலர்ந்த அழகிய தாமரை மலரைக் குறிக்கும். குளக்கரையில் வில்வ மரத்தடியில் நிறுவப்பட்ட லிங்கத்திருமேனிக்கு 1220}இல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில், பாண்டியர் கலைப் பாணியில் கற்றளியாக அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை அம்பலவாணர் கோயில் எழுப்பப்பட்டது.
பிரதான சாலக்கோபுர வாசலுக்கு நேராக அம்பாள் சந்நிதியும், அதன் வடபுறம் சுவாமி சந்நிதியும் உள்ளது. சுவாமி சந்நிதிக்குக் கீழ்ப்புறம் வாசலுக்குப் பதிலாக திருமதிலில் கலைநயமிக்க கல் சாளரம் ஒன்றுள்ளது. ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காலை சூரிய ஒளி அதன் வழியாகப் பரவி, கருவறை மூலவரை தொழுது படர்கிற காட்சி கயிலாய மலை செஞ்சுடரை நினைவுபடுத்தும் விதமாக அமையும்.
மண்டோதரிக்கு மங்கல வாழ்க்கை வரம் கிடைத்த திருத்தலமாக இது திகழ்வதால், சுபமுகூர்த்தக் காலங்களில் சுற்று வட்டாரக் கிராமத்தினர் தங்கள் வீட்டு சுபகாரியங்களை அம்பலவாணர் திருச்சந்நிதியில் வைத்து நடத்தி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முக மண்டபம் என்கிற கட்டமைப்பில் சுவாமி சந்நிதி அமைந்துள்ளது. கிழக்குச்சுற்றில் பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளது. மகா மண்டப வடபுறம் தில்லைக் கூத்தர் சந்நிதியும், அர்த்த மண்டப வாசலில் அனுக்ஞை விநாயகர், பாலசுப்பிரமணியர் விக்ரகங்களும் உள்ளன.
கருவறை மூலவராக அம்பலவாணர் அருள்பாலிக்கிறார். தினம்தோறும் இத்தலத்தில் கிரக தோஷ பரிகாரத்துக்காக தங்கள் ஜாதகங்களை எடுத்து வந்து, சுவாமி திருவடிகளில் வைத்து அபிஷேகம் செய்கின்றனர். விரைவில் அவர்களது வேண்டுதல் நிறைவேறுகிறதாம். பெüர்ணமி தோறும் திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது.
சிவகாம சுந்தரி அம்பாள் வலக்கையில் நீலோத்பவ மலரை ஏந்தியும், இடக்கையைத் தொங்கவிட்டபடியும் காட்சியளிக்கிறார். சுற்று வட்டார மக்கள் இந்த அம்பாளை தங்கள் குல தெய்வமாக எண்ணி வழிபடுகின்றனர். எனவே தங்கள் குழந்தைகளுக்கு "சிவகாமி' எனப் பெயர் சூட்டுவது வழக்கமாக உள்ளது.
உள்சுற்றில் கன்னிமூல கணபதி, வள்ளி } தெய்வானை சமேத சுப்பிரமணியர், காலபைரவர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள சுப்பிரமணியர் வேலுக்குப் பதிலாக ஏடுகளைத் தாங்கிய வண்ணம் ஆறடி உயரத்தில் வள்ளி, தெய்வானை சமேதராகக் காட்சியளிப்பது அற்புதமானது.
வடக்குச் சுற்றில் தீர்த்தக்கிணறும், கோயிலின் பிரதான வாசலில் வடக்குப் பார்த்த வண்ணம் அருள்மிகு கல்யாண விநாயகர் சந்நிதியும் உள்ளது. தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.
தரிசனத்துக்காக காலை 6.30 - பகல் 11 மணி; மாலை 4.30 } இரவு 8 மணிவரை திறந்திருக்கும் அம்பலவாணர் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி } நரிக்குடி நெடுஞ்சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
- வெ. கணேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









