முழுமுதற் கடவுளான சிவபெருமானின் அடிமுடியைக் கண்டவர் உண்டா? கார்வண்ணனும், நான்முகனும் காணஇயலாத சீர்வணச் சேவடி உடையவன், சிவபெருமான்.
"செந்தாமரை மலரில் இருக்கும் நான்முகனும், இந்திரனும், அழகான நாமகளும், திருமாலும், நான்மறைகளும், உருத்திரனும், தேவர்களும் காண இயலாத சிவபெருமானின் திருவடிகளில் சென்று ஊதுவாயாக வண்டே' என்று பாடுகிறார், மாணிக்க வாசகர்.
அரியும் அயனும் காணமுடியாத திருமுடியையும் திருவடிகளையும் சந்திரன் கண்டான் என்று திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழில் பகழிக் கூத்தர் குறிப்பிடுகிறார். சந்திரன் எவ்வாறு சிவபெருமானின் அடியும் முடியும் கண்டான் என்பதை விரிவாகக் காண்போம்,
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் பாடல் எண் 71-இல், "முழுமுதற்
கடவுளடியும் முடியும் நீ கண்டனை அதனால் வடிவேலனுடன் அம்புலி ஆடவா' என்று சந்திரனை அழைக்கிறார், பகழிக் கூத்தர்.
கடியவளி எறியும் தழைச்சிறைக் கூர் உகிர்க்
கருட வாகனனும் இகல் கூர்
கட்டை முள் அரைநாள் நெட்டிதழ் உடுத்த பொற்
கமலயோனி எழுந்து
கொடிய வெங்கொலை புரி வராகம் என ஒருவன் எழு
குவலயம் இடந்து தேட
குறித்து ஒருவன் எகினமாய் அண்ட பகிரண்டமும்
கொழுதிக் குடைந்து தேட
முடிய இதுகாறும் அவர் அறிவுறா வகை நின்ற
முழுமுதற் கடவுள் அடியும்
முடியும் நீ கண்டனை எனக் கருதி இன்று திருமுகம்
மலர்ந்து உனை அழைத்தால்
அடியவரை வாழ்வித்த செந்தில் வடிவேலனுடன்
அப்புலீ ஆட வாவே
அருவரைகள் கிடுகிடு என மயில் கடவும் முருகனுடன்
அம்புலீ ஆட வாவே
- 71 திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்
காற்றை வீசி எறியும் தழைத்த சிறகுகளையும், கூரான நகங்களையும் கொண்ட கருடனை வாகனமாக உடைய திருமாலும், தாமரை மலரில் தோன்றிய பிரம்மனும், சிவபெருமானின் அடிமுடியைத் தேடி திருமால் வராகமாகவும், பிரம்மன் அன்னமாகவும், அண்ட பகிரண்டமும் குடைந்து குடைந்து தேடியும் சிவனின் அடியையும் முடியையும் காண இயலவில்லை.
எவராலும் காண முடியாத திருவடிகளையும் திருமுடியையும் சந்திரன் எவ்வாறு கண்டான்?
"சிவனின் திருமுடியில் திங்களைச் சூடி இருப்பதால் முடியை முழுமையாகக் கண்டான்' என்கிறார் பகழிக்கூத்தர். முடியைக் கண்ட சந்திரன் எவ்வாறு திருவடிகளைக் கண்டான் என்பதை பகழிக்கூத்தரே திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் பாடல் எண் 66} இல் குறிப்பிடுகிறார்.
தக்கன் தொடங்கிய யாகத்தை அறிந்து கோபித்த சிவபெருமான், யாகத்தில் பங்கேற்க வந்திருந்த சூரியனின் கவுளில் அடித்துப் பற்களை உதிர்த்தார். சுக்கிரனின் விழிகளில் ஒன்றைக் கெடுத்தார். பிரம்மனின் சென்னியைத் திருகி எடுத்தார். வாணியின் நாசியைத் துண்டம் செய்து, அக்னி தேவனின் கைகளை அறுத்து, தக்கனின் தலையைத் திருகி ஆட்டின் சிரம் வைத்தார். இந்திரன் குயிலாக மாறியும், தேவர்கள் ஒருவர் போன இடம் ஒருவர் அறியாமல் ஓடி ஒளிந்தனர்.
சந்திரனைப் புழுதித் தரையில் போட்டுக் கால்களால் மிதித்து தேய்த்து அவமானப்படுத்தினார். அச்சமயம் அழற்கடவுளாகிய சிவபெருமானின் அழகிய திருவடிகளை கண்ணாரக் கண்டான், சந்திரன். எவருமே காண முடியாத திருவடிகளைக் கண்டவன் சந்திரன். திருமுடியிலே இருப்பவனும் சந்திரன்.
அதனாலே பகழிக் கூத்தர், "கடவுளின் அடியும் முடியும் கண்டனை' என்றார். எனவே முருகப்பெருமானிடம் "அம்புலீ ஆடவா' என்று அழைக்கிறார்.
தக்கன் யாகத்தில் சந்திரன் மிதியுண்ட புராணச் செய்தியையும், சிவன் தலையில் சூடியிருக்கும் பிறைச் சந்திரனையும் கோர்த்து, அடிமுடி
கண்டனை என்று பாடி இருப்பது வியந்து படித்துப் படித்து இன்புறத்தக்கது.
- ராஜேஸ்வரி ராமச்சந்திரன், தூத்துக்குடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுபோதையில் தந்தையை கொன்ற மகன் கைது
வெளியானது ‘ஜனநாயகன்’: வெறிச்சோடியது தலைமைச் செயலகம்

இளைஞர்களின் நியாயமான கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்

தொடர் மின் வெட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்
விடியோக்கள்

பிடிவாதம் செய்யும் கர்நாடகம்! தமிழக எம்.பிக்கள் சொல்வது என்ன? | Karnataka | TN | Parliament



