
இரவீஸ்வரர்

இரவீஸ்வரர்
மகாபாரதத்தை இயற்றியவராகவும், பதினெண் புராணங்களை தொகுத்தவராகவும் அறியப்படுகிறார் வேத வியாசர். ஈசனை அவர் வழிபட்ட தலம் அவர் பெயரால் "வியாசர்பாடி' என அழைக்கப்படுகிறது. புராணத்துடன் தொடர்புடைய தலம்.
ஒரு சமயம் சூரிய பகவானின் உக்கிரம் தாங்காமல் அவரது மனைவி சமுக்ஞா தேவி தனது நிழல் வடிவைப் பெண்ணாக்கி, கணவரிடம் விட்டுச் சென்றார். அவர் "சாயா தேவி' எனப்படுகிறார். சாயா என்றால் நிழல் என்று பொருள்.
சாயா தேவியோ சமுக்ஞாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்துகொண்டார். இதனால் ஆவேசமடைந்த ஆதவன், தன் மனைவியான சாயாதேவியைத் தேடிச் சென்றார். வழியில் ஓரிடத்தில் யாகம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார் பிரம்மா. அவசரமாகச் சென்றதால் சூரிய பகவான் பிரம்ம தேவனைக் கவனிக்கவில்லை. அதனால் சூரியனை மானிடராய்ப் பிறக்குமாறு சபித்து விட்டார் பிரம்மா.
வருந்திய சூரியன் இது குறித்து நாரதரிடம் ஆலோசனை கேட்டார். அவரது அறிவுறுத்தல்படி பூலோகம் வந்த சூரியன், இத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். அவரே "இரவீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார்.
முற்காலத்தில் வீச்சாவரன் என்னும் மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அவனுக்கு நீண்ட நாள்களாக குழந்தை பாக்கியம் இல்லை. அரசவை ஜோதிடர்களின் ஆலோசனைப்படி மன்னர் இத்தல ஈசனை வழிபட்டார்.
சிவன் அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி வேண்ட, அரண்மனை நந்தவனத்தில் உள்ள மகிழ மரத்தின் அடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தார். அவரைக் கண்ட மன்னன் ஆனந்தித்து மரகதாம்பிகை எனப் பெயர் சூட்டி வளர்த்தார். உரிய திருமண வயதானதும் அவரை சிவபெருமான் மணம் புரிந்து தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
மூன்று நிலை ராஜகோபுரம் கொண்ட கிழக்கு நோக்கிய கோயில். உள்ளே நுழைந்து இடதுபுறம் சென்று திரும்பி தெற்கு நோக்கிய வாயில் வழியாகத்தான் மூலவரை தரிசிக்க முடியும். சிவனுக்கு எதிரே உள்ள சுவரில் சிவலிங்க அமைப்பில் துளை இருக்க, அதற்கு நேரே நந்தி காணப்படுகிறார். கோயில் அமைப்பை வைத்து பிற்கால சோழர்கள் காலத்தில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
முன் மண்டபத்தில் சூரியன் இருக்கிறார். சூரிய தோஷம் உள்ளவர்கள் இவரையும் மூலவரான இரவீஸ்வரரையும் வழிபட்டு தோஷம் நீங்கப் பெறுகிறார்கள். பிரகாரத்தில் ஆஞ்சநேயர், 63 நாயன்மார்கள், சுந்தர விநாயகர், சுவாமி }அம்பாள் அலங்கார மண்டபம், ராமலிங்க அடிகளார், வியாச முனிவர், முனைக்காத்த பெருமாள், நாகர், தலவிருட்சமான வன்னி மரம், முருகர், சண்டிகேஸ்வரர், ஐயப்பன், பைரவர் மற்றும் நவகிரகங்களை தரிசிக்கலாம். சிவன் அம்பிகை திருமணம் செய்த வைபவம் ஆனி பிரம்மோற்சவத்தின் போது சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி உற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதில் பத்தாம் நாளில் மகிஷாசுரவத நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மரகதாம்பிகை, திருமண வரமருளும் பெரும் வரப்பிரசாதி. நாகதோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள வன்னி மரத்துக்குக் கீழே உள்ள நாகருக்கு மஞ்சள் பொடி மற்றும் பாலபிஷேகம் செய்தும், தீர்க்க சுமங்கலியாக இருக்க தாலி கட்டியும் வழிபடுகின்றனர். மேலும் நாகருக்கு அபிஷேக ஆராதனை செய்து அவரையும் சுவாமி, அம்பாள் மற்றும் குளக்கரை அரசமர விநாயகரையும் வழிபட்டால், இழந்த அரசியல் பதவி, அரசுப்பதவிகளைப் பெறலாம். தடைப்பட்ட உயர்பதவிகள், பொறுப்புகள் விரைவில் வந்தடையும் என்பது நம்பிக்கை.
வியாசருக்கு பெüர்ணமி அன்று விசேஷ பூஜை நடைபெறுகிறது. குழந்தைகளை முதல் முதலில் பள்ளியில் சேர்க்கும் போது பெற்றோர்கள் இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். அதனால் குழந்தைகள் கல்வியில் சிறந்து உயர்ந்த நிலையை அடைவார்கள் என்பது நம்பிக்கை. ரதசப்தமியன்று வியாசர் இங்கு சிவனை பூஜிப்பதாக ஐதீகம்.
கோயிலுக்கு முன்புறம் பிரம்மாண்டமான சூரிய தீர்த்தம் உள்ளது. அதையொட்டி குளக்கரை அரசமர விநாயகர் அருள்பாலிக்கிறார். தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு முன்னோர் வழிபாட்டை நிறைவேற்றுகிறார்கள்.
ஆதியிலிருந்து சூரியக்கதிர்கள் மூலவர் மீது படரும் நிகழ்வு நடைபெற்று வந்த இக்கோயிலில், பல ஆண்டுகளாக அது தடைபட்டிருந்தது. அதற்கும், மழைக்காலங்களில் கோயிலுக்குள் தண்ணீர் புகுவதற்கும், தரைத்தளத்தில் இருந்து சுமார் ஐந்தடி பள்ளத்தில் கோயில் இருப்பதுதான் காரணம் என்பது தெரிய வந்ததால், கோயிலை கீழ்மட்டத்திலிருந்து உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, "ஜாக்கி லிப்ஃடிங்' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பூமியிலிருந்து சம
தளம்வரை 4.2 அடி, சமதளத்திலிருந்து 7.2 அடி என மொத்தம் 11.4 அடி கோயில் உயர்த்தப்பட்டு, பல்வேறு திருப்பணிகளும் செய்யப்பட்டு அண்மையில் கோயிலுக்கு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதன்பின்னர், காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்க வடிவத் துளையின் வழியே கருவறை முன் வரை விழுகிறதாம். சில நேரங்களில் சுவாமியின் மீதே விழுகிறது. தினமும் சூரியனே இங்கு சிவபெருமானுக்கு முதலில் பூஜை செய்வதாக ஐதீகம்.
காலை 6 முதல் 11 மணிவரையும், மாலை 5.30 முதல் இரவு 9 மணி வரையும் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும் இக்கோயிலில் ஏப்ரல் 10}ஆம் தேதி மண்டலாபிஷேக பூர்த்தி விழா நடைபெறவுள்ளது. சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரிக்கு அருகேயுள்ள ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, சுலபமாக இரவீஸ்வரர் கோயிலை அடையலாம்.
மு.வெங்கடேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...