முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!அதானியை விடுவிக்கும் பேரத்தை முடித்த பிரதமர்! ராகுல் குற்றச்சாட்டு ஜூன் 21-ல் நீட் மறுதேர்வு! என்டிஏ அறிவிப்பு! அடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு! மத்திய கல்வி அமைச்சர்
/

தாலி பாக்கியம் தரும் தலம்!

தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த் தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று,

News image
Updated On :47 நிமிடங்கள் முன்பு

தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர்

பண்டமாற்று முறையில் வாணிபம் நடந்த காலம். கிராமங்களில் விளைந்த பொருள்களை பாண்டிய நாட்டின் தலைநகரமாகிய மதுரையம்பதி சென்று பண்டமாற்று முறையில் வாணிபம் செய்து, தேவையானவற்றைப் பெற்று ஊர் திரும்பும் வணிகர்களில் ஒருவர் முத்து செட்டியார்.

மதுரை அன்னை மீனாட்சியிடம் அளவற்ற பக்தி கொண்ட அவர், ஒவ்வொரு முறையும் வாணிபத்துக்காக மதுரை சென்று திரும்பும் போது, மீனாட்சியையும் சொக்கநாதரையும் வழிபட்டபிறகே ஊர் திரும்புவார். மற்ற பேறு இருந்தாலும் அவருக்கு குழந்தைப்பேறு மட்டும் அமையவில்லை.

ஒருசமயம், மதுரை சென்று ஊர் திரும்பும்போது, வழியில் சின்னக் கண்ணனூர் காட்டில் பெண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருக்கக் கண்டார். தனித்திருந்த குழந்தையை மகப்பேறு இல்லாத தனக்கு இறைவன் தந்த பாக்கியம் என எண்ணி, குழந்தையைத் தோளில் அமர்த்திக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

சிறிது தூரத்தில் ஊருணி ஒன்று தென்பட, அதில் நீராட விரும்பி குழந்தையை இறக்கி வைத்துவிட்டுச் சென்றார். நீராடிக் கரையேறியபோது குழந்தையைக் காணவில்லை. கனத்த இதயத்தோடு இல்லம் திரும்பினார். நடந்தவற்றை மனைவியிடம் கூறினார்.

அன்றிரவு அவர் கனவில் அதே குழந்தை தோன்றி, ஊருக்கு அருகே உள்ள குத்தாளங்காட்டில் தான் தங்கியிருப்பதாகவும், அங்கு வந்து தன்னைப்போல் ஓர் உருவம் ஒன்று செய்து தினமும் வழிபட்டு வருமாறும், தன் உருவை தோளில் சுமந்த நற்பேறு பெற்ற காரணத்தால் அன்னாரின் பெயரோடு, பிள்ளையுருமாரி இறையுரு கொண்டதால் முத்துமாரி எனப் பெயரிட்டு அழைக்குமாறு கூற, கண்விழித்து அன்னையின் அற்புதத்தை வியந்து செயல்பட விரைந்தார்.

காலையில் ஊர்ப்பெரியவர்கள் சிலரை அழைத்துக் கொண்டு கனவில் குழந்தை சொன்ன இடத்தை அடையாளம் கண்டு, அங்கிருந்து பிடிமண் எடுத்து, உருவம் அமைத்து, கூரை வேய்ந்த குடில் எழுப்பி வழிபாடு செய்து வந்தனர்.

பின்னர் பக்தர்களின் பங்களிப்பால் கூரைக் கொட்டகை மாற்றப்பட்டு கோயில் மண்டபம் கட்டப்பட்டு வழிபாட்டுக்கு வசதி செய்யப்பட்டது. 1914} ஆம் ஆண்டில் கல்லில் திருவுருவச் சிலையும், கல் கர்ப்பக்கிரகமும், விமானமும் கட்டப்பட்டது. 1935}இல் ராஜகோபுரம் கட்டப்பட்டது. கோயிலில் ஓங்கி உயர்ந்த கொடி மரமும், தலமரமாக வேம்பும் உள்ளது .

அம்பாள் முத்துமாரி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில், நான்கு கரங்களோடு காட்சி தருகிறாள். அம்மன் கன்னித் தெய்வமாக இருந்தாலும் சுற்றுப்

பகுதி கிராம மக்களுக்கு தாயாகவும், தாலி பாக்கியம் அருள்

பவராகவும் விளங்குகிறார். இதனால் இந்த ஊர் "தாய்மங்கலம்' என்று அழைக்கப்பட்டு, பின்னர் "தாயமங்கலம்' என்று மருவியது.

இங்குள்ள உற்சவ அம்மனின் இடது காதில் தோடு உண்டு. வலதுபுறம் இல்லை. அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தை நினைவுபடுத்துமாறு கீழ்க் கை அபய ஹஸ்தமாக அமைந்து அடைக்கலம் தருவதைக் குறிக்கிறது. சின்னக்கருப்பர், பெரிய கருப்பர், காளியம்மன் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன.

இக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி 15}ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு மிக விமரிசையாக திருவிழா நடைபெறும். அதில் பிடிமண் வழிபாடும் , தேரோட்டமும் மிகவும் சிறப்பான வைபவமாகும்.

தரிசனத்துக்காக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும் இந்தக் கோயில், சிவகங்கையிலிருந்து இளையான்குடிக்குச் செல்லும் சாலையில் 26 கி.மீ. தொலைவில் தாயமங்கலத்தில் வைகை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது.

- சோழவந்தான் ஜெனகராஜ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.