கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

ஏழூர்த் திருவிழா..

தஞ்சை பெரிய கோயில் கட்டப்படுவதற்கு முன்பே இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழனால் திருப்பணி செய்யப்பட்டது,

News image
Updated On :29 மே 2026, 4:22 pm IST

தஞ்சை பெரிய கோயில் கட்டப்படுவதற்கு முன்பே இராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழனால் திருப்பணி செய்யப்பட்டது, கரந்தை கருணாசாமி என்கிற வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்.

இங்குள்ள இறைவனை வசிஷ்டரும் அருந்ததியும் இணைந்து வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது. திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற வைப்புத் தலம்.

சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால் சோழ மன்னனுக்கு கடுமையான தோல் நோய் இருந்துள்ளது. இந்த நிலையில் அவரது கனவில் தோன்றிய கடவுள் கருணாசாமி, "இந்தக் கோயில் குளத்தில் ஒரு மண்டலம் புனித நீராடி வழிபட்டால் உன் நோய் தீர்ந்து விடும்' என்று கூற, மன்னரும் அப்படியே செய்ய, அவரது தோல் நோய் நீங்கியது.

அன்று முதல் இந்தப் பகுதி "கருந்தட்டான்குடி' என்று அழைக்கப்பட்டு, தற்போது "கரந்தை' என்று அழைக்கப் படுகிறது.

கிழக்கு நோக்கிய கோயில் வாயிலின் அருகே சூரிய புஷ்கரணி என்ற கோயில்தீர்த்தக் குளம் உள்ளது. கிழக்கில் கொடி மரமும், பலிபீடமும், அதைத் தொடர்ந்து உள்ள மண்டபத்தில் வலதுபுறம் நர்த்தன கணபதி, முருகன், விநாயகரும், இடதுபுறம் சனீஸ்வரர், சூரியன், பைரவர் சந்நிதிகளும் உள்ளன.

மூலவர் கருணாசாமி கிழக்கு நோக்கி காணப்படுகிறார். இவர் வசிஷ்டரால் பூஜை செய்யப்பட்டவர் என்பதால் வசிஷ்டேஸ்வரர் என்ற திருநாமமும் கொண்டுள்ளார். சுவாமிக்கு இடப்புறம் பெரியநாயகி அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் தனி சந்நிதியில் தரிசனம் தருகிறாள். இங்கு ஆடிப்பூர வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

வசிஷ்டர் } அருந்ததி தம்பதியர் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டதால், ஆண்டுதோறும் வைகாசி ரோகிணி நட்சத்திரத்தன்று வசிஷ்டர் } அருந்ததி திருமணம் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

கோயிலில் நடைபெற்று வரும் இவ்வருட வைகாசி விசாக பிரமோற்சவத்தில் 10}ஆம் நாளான மே 30}ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவும், மறுநாள் காலை பிட்சாண்டவர் புறப்பாடும் நடக்கிறது. 12}ஆம் நாளான வைகாசி கேட்டை நட்சத்திரத்தன்று (ஜூன் 1) காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் கரந்தை சப்தஸ்தான விழாவை முன்னிட்டு ஏழூர் கண்ணாடிப் பல்லக்குப் புறப்பாடு நடக்கிறது.

கண்ணாடிப் பல்லக்கில் சுவாமியும், வெட்டிவேர் பல்லக்கில் அருந்ததி சமேதராக வசிஷ்டரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஏழு ஊருக்கும் சென்று மறுநாள் திரும்பி வருவது வழக்கம்.

இதில் சோமாஸ்கந்தர், பெரியநாயகி அம்மன், கந்தர், தனி அம்மன் வெட்டிவேர் பல்லக்கிலும், வசிஷ்டர், அருந்ததி ஆகியோர் சிறிய பல்லக்கிலும் உடன் செல்வார்கள்.

கரந்தை கருணாசாமி கோயில், தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோயில், தென்குடித்திட்டை, கூடலூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், கடப்பை இராஜராஜேஸ்வர சுவாமி திருக்கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள கைலாசநாதர் கோயில், தஞ்சாவூர் பூமாலை வைத்தியநாதேஸ்வர சுவாமி கோயில் ஆகிய ஏழு கோயில்களுக்கு கண்ணாடிப் பல்லக்கு, வெட்டிவேர் பல்லக்குச் சென்று, அந்தந்தக் கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கு பெற்று, அந்தக் கோயில் மரியாதையை ஏற்றுக் கொண்டு மறுநாள் ஜூன் 2-ஆம் தேதி மாலை 7 மணிக்கு கரந்தை கருணாசாமி கோயில் முன்பு வந்து சேரும். அப்போது இறைவனுக்கு பொம்மைப்பூ போடும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும்.

இந்த விழாவைத் தொடர்ந்து, தஞ்சாவூரில் முக்கியமான பல கோயில்களில் இருந்து ஜூன் 2}ஆம் தேதி திருஞானசம்பந்தர் குருபூஜையை முன்னிட்டு இரவு நான்கு ராஜ வீதிகளில் முத்துப் பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. மறுநாள் ஜூன் 3}ஆம் தேதி காலை 7 மணி வரை தஞ்சாவூர் நான்கு ராஜ வீதிகளிலும் முத்துப் பல்லக்குகளை பக்தர்கள் தரிசனம் செய்வர்.

தரிசனத்துக்காக காலை 7 முதல் 12 வரையும், மாலை 5 முதல் இரவு 8.30 வரையும் திறந்திருக்கும் கருணாசாமி கோயில், தஞ்சாவூர், கரந்தை பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது.

- தஞ்சாவூர் இரா.சுரேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.