தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!பலத்த மழை: முதல்வர் விஜய்யின் கேரள பயணம் ரத்துதிருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!அரசாணைகளை ஒளித்து வைப்பது ஏன்? முதல்வருக்கு உதயநிதி கேள்வி!நாங்கள் அஞ்சவில்லை! ஸ்டார்லிங்க் போட்டிக்கு தயார்! ரிலையன்ஸ் அறிக்கை

ஆயுள் பலம் தருவார் அமிர்தகடேசுவரர்!

ஆயுள் பலம் அருளும் அமிர்தகடேசுவரர் கோயிலின் தொன்மை..

Updated On :

புராண காலத்தில் தேவர்களும் அசுரர்களும் சமுத்திரத்தைக் கடைந்து அமிர்தம் பெற்ற புராண வரலாறு அனைவரும் அறிந்த ஒன்று. அச்சமயத்தில் முழுமுதற்கடவுளான விநாயகரை வணங்கிடாமல் அமுதுண்ண அமர்ந்தனர் தேவர்கள். அவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட எண்ணிய விநாயகர், அமிர்தகடத்தை எடுத்து மறைத்து வைக்க முயன்றபோது, கலசத்தில் இருந்த அமிர்தத்தின் ஒரு துளி கீழே சிந்தியது.

கடம்ப மரங்கள் நிறைந்த காடு ஒன்றினுள் வீழ்ந்த அத்துளியானது, ஒரு சிவலிங்கமாக நிலைபெற்றது. அந்த லிங்கத்திருமேனியர்தான் கடம்பூர் அமிர்தகடேசுவரர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலுக்கு அருகில் உள்ள கடம்பூர், புராணச்சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் ஒருங்கே அமையப் பெற்றுள்ள கிராமம். மையத்தில் பாயும் வாய்க்கால் ஒன்றினால் மேலக்கடம்பூர் மற்றும் கீழக்கடம்பூர் என இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துள்ளது இவ்வூர்.

மேலக்கடம்பூரில் அமிர்தகடேசுவரர் கோயிலும், கீழக்கடம்பூரில் இந்திரன் பிரதிஷ்டை செய்து, வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற ருத்ர கோடீசுவரர் கோயிலும் உள்ளன.

ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில். முன் இடப்புறத்தில் கடம்ப மரத்தின் கீழ் காட்சியளிக்கும் ஆதி லிங்கம் மற்றும் வலது புறத்தில் மாரியம்மன் } இவர்களைத் தரிசித்த பிறகு கோயிலுக்குள் பிரவேசிக்கலாம்.

தேர் வடிவ மையக் கோயிலில் கருவறையில் அமிர்தகடேசுவரர் எனப்படும் அமுதகலசநாதர் காட்சி தருகிறார். வித்தியாசமான அமைப்புடைய கூரான பாணத்துடன் கூடிய திருமேனி. தொன்மை வாய்ந்தவர். ஆயுள் பலத்தை அருளும் பெரும் வரப்பிரசாதி.

அவருக்கு இடது பாகத்தில் தனித்த சந்நிதியில் காட்சி தருகிறார் அன்னை வித்யுத்ஜோதி எனப்படும் சோதிமின்னம்மை. பெயருக்கேற்றவாறு அழகு நிறைந்த திருவடிவினள். அடுத்து தேரில் இடம்பெற்றுள்ள கோஷ்டத்துத் திருமேனிகளை தரிசிக்கலாம்.

தேர்க்கோயிலின் தெற்கே ஆலமர்க் கடவுள், மேற்கே அனுமன் மற்றும் கருடனுடன் அமர்ந்த கோலத்துத் திருமால், வடக்கே சித்திரகுப்தன் மற்றும் எமனுடன் உள்ள பிரம்மா என முப்பெரும் கடவுளரும் நிலைத்துள்ளனர்.

தவிர இத்தலத்து இறைவனை வழிபட்ட சூரிய, சந்திரர்கள், அகத்தியர் முதலான முனிவர்கள், நாகராஜன், இந்திரன், ஏராளமான சித்தர்கள், விண்ணுலகத்தினர், ராமர் மற்றும் கிருஷ்ண லீலைக் காட்சிகள், குறுஞ் சிற்பங்கள், யாளிகள் என எண்ணிலடங்கா கலைப் படைப்புகள் தேரில் இடம்பெற்றுள்ளன. கல் சக்கரங்கள் கொண்ட இந்த மொத்த ரத அமைப்பினையும் யானைகளும் குதிரைகளும் இழுத்துச் செல்வது போன்ற காட்சி அற்புதமானது.

பின் பகுதியில் திருமாளிகைப் பத்தியில் ஆரவார விநாயகரை தரிசிக்கலாம். தேவர்களின் கர்வத்தினை அடக்கிய விநாயகர் இவர்.

இவரையடுத்து வள்ளி }தெய்வானை சமேதரராக மயில் மீதமர்ந்த முருகன். இவர் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்பெற்றவர். அடுத்து இந்திரனின் தாய் அதிதிக்கு பாபவிமோசனம் அளித்த பாபஹரேசுவரர் உடனருளும் மீனாட்சியம்மையை தரிசிக்கலாம். மேலும் சரஸ்வதி, மகாலட்சுமி, ஜேஷ்டாதேவி, வனதுர்கா என இந்த வரிசை நீண்டு அமைந்துள்ளது.

மூலட்டானத்துக்கு எதிரே காலபைரவர், தல பைரவர், ரிஷபாரூடனர், கழுகு வாகன சனைச்சரர், கடம்பவனக்காளி ஆகியோர் மேற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளனர்.

இக்கோயிலின் மற்றொரு சிறப்பு தசபுஜரிஷப தாண்டவ மூர்த்தி. செவ்வகப் பீடத்தின் மையத்தில் உள்ள தாமரைப் பீடத்தின் மேல் பத்துக் கரங்களுடன் ரிஷபத்தின் மீது நின்றாடும் ஈசனின் அரிய திருவடிவம். திருவடிகளின் கீழ் திருமால், அம்பிகை, கணபதி, முருகன், பைரவர், பிருங்கி, காரைக்கால் அம்மை, நாட்டியப் பெண்கள், மேலே பூச்சொரியும் கந்தருவர்கள் என சிவ பரிவாரங்கள் அனைவரையும் ஒன்று சேர்த்திட்ட அற்புதமான கலைப்படைப்பு.

சதய நட்சத்திர அன்பர்கள் இத்தலத்தில் வழிபடுதல் சிறப்பு. பங்குனி 3, 4, 5}ஆம் தேதிகளில் நிகழ்கிற சூரிய பூஜை சிறப்பானது. செவ்வாய் சாபநிவர்த்தி பெற்ற தலம். முருகக் கடவுள் வில் பெற்றதும் இங்கேதான்.

அந்நியர் படையெடுப்புக்குப் பின்னர் சேதமுற்றுக் கிடந்த இந்தக் கோயிலை நகரத்தார்கள் திருப்பணி செய்துள்ளனர். ஏராளமான வரலாற்றுத் தகவல்களை தன்னிடம் கொண்டுள்ள பொக்கிஷம் இந்தக் கலைக்கோயில்.

தரிசனத்துக்காக காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையும்; மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையும் திறந்திருக்கும் மேலக்கடம்பூர் அமிர்தகடேசுவரர் கோயில், கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை அடுத்த காட்டுமன்னார் கோவிலுக்கு அருகே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

- சுஜாதா மாலி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.