மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

தமிழகத்தின் பெரிய சயனத் திருமேனி

தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள பழைமையான திருத்தலம் பற்றி..

ஆதி திருவரங்கம்

Published On :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள பழைமையான திருத்தலம், ஆதி திருவரங்கம்.

முதல் யுகமான கிருத யுகத்திலேயே தோன்றியதால் "ஆதி திருவரங்கம்' என்றும், தமிழகத்தின் ஆகப் பெரிய சயனத் திருமேனி என்பதால் "பெரிய பெருமாள் தலம்' என்றும் இத்திருத்தலம் போற்றப்படுகிறது.

ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் குடைபிடிக்க, 23 அடி நீள பிரம்மாண்ட திருமேனியுடன் போகசயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார் ஆதி திருவரங்கத்துப் பெருமாள்.

கருவறையில், மூலவர்அரங்கநாதரின் திருமுடியை ஸ்ரீதேவி தாயார் தன் மடியில் தாங்கியிருக்க, ஒரு திருவடியை பூதேவி தாயார் பற்றியுள்ளார்; மற்றொரு திருவடி ஆதிசேஷனின் வால் மீது மலர்ந்துள்ளது.

பெருமானின் தோள்பட்டையை கருட பகவான் தன் கரங்களால் ஏந்தியிருக்க, அவரின் வயிற்றுக்கு மேலாக பிரம்மதேவன் தோன்றி அருள்காட்சி தருகிறார். மூலவரின் இடக்கர விரல்கள் 4 வேதங்களை உணர்த்துகின்றன.

மூலவர் திருமேனி நவபாஷாணத்தால் உருவானது என்பதால், இவருக்குத் திருமஞ்சனம் செய்யப்படாமல் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் விசேஷ தைலக்காப்பு மட்டுமே நடைபெறுகிறது. தாயார்அரங்கநாயகி, தனிச் சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் பேரருள் புரிகிறார்.

தலபுராணத்தின்படி, அசுரர்களால் வேதங்கள் அபகரிக்கப்பட்டு படைப்புத் தொழில் தடைபட்டபோது, தேவர்களின் முறையீட்டை ஏற்று பரந்தாமன் வேதங்களை மீட்டு, இத்தலத்தில் பிரம்மனுக்கு மீண்டும் உபதேசித்தார் என்பது ஐதீகம். இங்கு வழிபடக் கல்வி ஞானம், நினைவாற்றல் மற்றும் உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சந்திரன் சாப விமோசனம் பெற்ற தலம் என்பதாலும், சுருதகீர்த்தி மன்னன் நாரதரின் வழிகாட்டுதலால் வழிபட்டு நன்மக்களைப் பெற்றான் என்பதாலும், இது சிறந்த திருமண, புத்திர தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

பஞ்ச கிருஷ்ணாரண்ய úக்ஷத்திரங்களில் ஒன்றான இத்தலத்தில் நுழையும்போதே சீதா, லட்சுமணர் சமேத கோதண்டராமர் மற்றும் பவ்ய ஆஞ்சனேயர் காட்சி தருகின்றனர். இங்குள்ள ராமர் திருவுருவச் சிலையைத் தட்டினால் வெண்கலத்தைவிட இனிய சப்த சுரங்களை எழுப்பும். கொடிமரத்தை ஒட்டியுள்ள கோயில் சுவரின் மேல்புறச் சிறிய மண்டபத்தில் கிருஷ்ண பகவான், ஒரு கையில் வெண்கலக் கிண்ணத்தில் வெண்ணெய்யும், மறுகையில் உறியும் ஏந்தியவாறு கோயிலுக்கு வரும் பக்தர்களை மேலிருந்து பார்த்த வண்ணம் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

மூலவரை வலம் வரும் உள்சுற்றில் தும்பிக்கை ஆழ்வார், மகிஷாசுரமர்த்தினி ஆகியோரும், தெற்கு நோக்கி சங்கர்ஷணர், மேற்கு நோக்கி பிரத்யும்னர், வடக்கு நோக்கி அனிருத்தர் மற்றும் விஷ்ணு துர்கையும் அருள்பாலிக்கின்றனர்.

கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஆண்டாள், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், சேனை முதலியார் (விஷ்வக்சேனர்), வேதாந்த தேசிகர், வரதராஜப் பெருமாள் மற்றும் வீர ஆஞ்சனேயர் சந்நிதிகள் அமைந்துள்ளன.

ஏகாதசி மண்டபம் அருகே பெருமாளின் புனித "பாதக் குரடு' (பாதுகை) உள்ளது. கோயிலுக்கு நேர் எதிரே சஞ்சீவிராய ஆஞ்சனேயர் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். கோயிலின் தலவிருட்சமாக முற்காலத்தில் புன்னாவல் மரம் இருந்தது; தற்போது மகிழ மரம் போற்றப்படுகிறது. வெளிப்பிரகாரத்தில் உள்ள வைகுண்ட வாசல், வைகுண்ட ஏகாதசி முதல் மாட்டுப் பொங்கல் வரை பக்தர்கள் தரிசனத்துக்காகத் திறந்திருக்கும்.

வரலாற்றுச் சான்றுகளின்படி சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களின் திருப்பணிகளைக் கொண்ட இவ்வாலயத்தின் முகப்பு ராஜகோபுரம், சமதள மொட்டைக் கோபுரமாக அமைந்துள்ளது.

மூலவரின் நவபாஷாணக் கதிர்வீச்சு வீரியம் சிதறாமல் காக்கவும், போர்க்காலப் பாதுகாப்பு வியூகத்துக்காகவும் இவ்வாறு திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மாசி மகத்தன்று உற்சவர் மையனூர் மலைக்கு எழுந்தருளி, கருடாழ்வார் உருவாக்கிய கெடில நதி புண்ணிய சுனையின் கருட தீர்த்தத்தில் நீராடும் வரலாற்று மரபு இன்றும் விமரிசையாகத் தொடர்கிறது.

தென்பெண்ணை நதிக்கரையில் வரலாற்றுத் தொன்மையும், வேதங்களின் சாரமும், இசைச் சிற்ப நுட்பமும் ஒருங்கே இணைந்த ஆதி திருவரங்கத்து அரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாதரின் தரிசனம், பக்தர்களின் வாழ்வுக்கு அமைதியையும் ஆன்மிக நிறைவையும் முழுமையாக வாரி வழங்குகிறது.

தரிசனத்துக்காக காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும் இக்கோயில், திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில், மணலூர்பேட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், சங்கராபுரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.