/

இந்தியாவுடன் நீண்டகால ராணுவ ஒத்துழைப்பு: பென்டகன்

இந்தியாவுடன் நீண்ட கால ராணுவ ஒத்துழைப்பு கொள்வதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 6:45 pm

இந்தியாவுடன் நீண்ட கால ராணுவ ஒத்துழைப்பு கொள்வதில் தீவிர கவனம் செலுத்தப்படும் என அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் தெரிவித்துள்ளது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தனது நிலைப்பாட்டை அதிபர் ஓபாமா அரசு மறு ஆய்வு செய்து வரும் நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பென்டகன் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் பலமான நீண்ட கால ராணுவ கூட்டை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். பிராந்திய அளவிலும், இந்திய பெருங்கடல் பகுதியிலும் இந்தியாவின் திறன்களை மேம்படுத்த அமெரிக்கா ஆதரவு தரும்.

இதுதொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2013-14-ம் ஆண்டுக்கு பாதுகாப்பு பட்ஜெட் திட்டங்கள் குறித்த அறிக்கையை பென்டகன் சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ராணுவ ஒத்துழைப்பு எங்கு தேவையோ அங்கெல்லாம் அமைத்துக் கொள்ளப்படும். உலகை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு இருப்பதால் உலக அளவில் பென்டகன் ஒத்துழைத்துச் செயல்படும். குறிப்பாக ஆசிய-பசிபிக், மத்திய கிழக்கு பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தப்படும்.

ஐரோப்பா, இஸ்ரேல் போன்ற பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா கவனம் செலுத்தும். அதே போல் ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, நியுசிலாந்து, வியத்நாம், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும்.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு சீனா, அமெரிக்காவுக்கு உள்ளது. எனினும் சீனா தனது ராணுவ நவீனமயமாக்கத்தை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும் என பென்டகன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.