பாகிஸ்தான் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளில் நிகழ்ந்த தாக்குதல் சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்தனர்.
1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பாகிஸ்தானில், முதல்முறையாக ஜனநாயக ரீதியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தக் கூடிய வகையில் சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. எனவே இந்தப் பொதுத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பாகிஸ்தானில் 272 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்பட நான்கு மாகாணங்களுக்கும் சேர்த்து மொத்தம் 342 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நாடாளுமன்றத்துக்கு 4,670 பேரும் மாகாணத் தேர்தலில் 11 ஆயிரம் பேரும் போட்டியிட்டனர். சுமார் 8.6 கோடி மக்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக், அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் மகன் பிலாவல் புட்டோ தலைவராக உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாப் ஆகிய முக்கிய கட்சிகளுடன் அவாமி தேசிய கட்சி, முத்தாகிதா குவாமி இயக்கம் போன்ற கட்சிகளும் தேர்தல் களத்தில் உள்ளன.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு, தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்தத் தேர்தலை அவரது கட்சி புறக்கணித்தது.
தலிபான்கள் மிரட்டல்: மத நம்பிக்கையில்லாதவர்கள் ஜனநாயகம் என்ற பெயரில் நடத்தும் தேர்தலை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் நாளில் தற்கொலைப்படை தாக்குதல் உள்பட பல்வேறு வழிகளில் மிகப் பெரிய தாக்குதலை நடத்துவோம் என தலிபான் பயங்கரவாத அமைப்புகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்து வந்தன. தேர்தல் பிரசாரத்தின்போதும் தலிபான்கள் பல குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தினர். அவற்றில் வேட்பாளர்கள் உள்பட 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
பலத்த பாதுகாப்பு: தலிபான்களின் மிரட்டலை அடுத்து வாக்குப் பதிவின்போது பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பதற்றம் நிறைந்த பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் 3 லட்சம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். நாட்டின் மிகப் பெரிய நகரமான கராச்சியில் தேர்தல் பாதுகாப்புக்காக 1,24,000 பேர் குவிக்கப்பட்டிருந்தனர்.
வாக்குப்பதிவு: பயங்கரவாத அமைப்புகளின் மிரட்டல் இருந்தபோதும் வாக்குகளைப் பதிவு செய்ய காலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் வாக்குச் சாவடிகளில் கூடத் தொடங்கினர். சனிக்கிழமை காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் ராணுவ தலைமை தளபதி பர்வேஸ் கயானி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஜி.இப்ராஹிம் ஆகியோர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தபால் மூலம் தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். பல வாக்குச் சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அதிக எண்ணிக்கையிலானோர் வாக்களிக்க வந்ததால் பல வாக்குச் சாவடிகளில் மாலை 5 மணிக்கு நிறைவடைய வேண்டிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டது.
தொடர் குண்டுவெடிப்பு; பலி 17: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும் கராச்சி, குவெட்டா, பெஷாவர் ஆகிய இடங்களில் சனிக்கிழமை காலை தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. அவாமி தேசிய கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் அந்தக் கட்சியின் வேட்பாளர் அமானுல்லா மெக்சூத்தைக் குறிவைத்து முதல் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் அவர் உயிர் தப்பினாலும் தொண்டர்கள் சிலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
அதையடுத்து கட்சிகளின் தேர்தல் அலுவலகங்கள், வாக்குச் சாவடிகளைக் குறிவைத்து அடுத்தடுத்த குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹகிமுல்லா விடுத்த மிரட்டலின்படி கைபர்-பக்துன்கவா மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. பெரும்பாலும் வாக்குச் சாவடிகளுக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகள் வெடித்தன.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குண்டுவெடிப்பின்போது கூச்சல், குழப்பம் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியில் சிக்கி பலர் காயமடைந்தனர்.
ஊடகங்கள் கண்டனம்: இஸ்லாமாபாதில் இயங்கி வரும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் செய்தித்துறை தலைவர் டெக்லான் வால்ஷ் என்பவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு அரசு அறிவித்ததைத் தொடர்ந்து ஊடகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தேர்தல் சமயத்தில் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டதாக டெக்லான் வால்ஷ் மீது குற்றம் சாட்டிய அரசு அதிகாரிகள் அவரிடம் ""உங்களது விசா ரத்துசெய்யப்படுகிறது; அடுத்த 72 மணி நேரத்துக்குள் பாகிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும்'' என்ற கடிதத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவு தந்து அதில் அவரது கையொப்பத்தை வலுக்கட்டாயமாகப் பெற்றுள்ளனர்.
இது குறித்து அந்த நாளிதழின் நிர்வாக ஆசிரியர் ஜில் அப்ராம்சன் கூறியுள்ளதாவது:
டெக்லான் வால்ஷ் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பாகிஸ்தானில் தங்கி பணியாற்றி வருகிறார். இதுவரை அவர் நேர்மையாகவும் பாரபட்சமின்றியுமே செய்திகளைத் தந்துள்ளார். பாகிஸ்தானில் முதல்முறையாக ஜனநாயக ரீதியில் ஆட்சி மாற்றம் ஏற்பட நடைபெற்று வரும் இது போன்ற முக்கியமான தேர்தலின்போது ஒரு மூத்த பத்திரிகையாளரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடுவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே இந்த உத்தரவை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மாலிக் முகமது ஹபீப் கான் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். டெக்லானை தொடர்ந்து பாகிஸ்தானில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என அப்ராம்சன் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களின் சுதந்திரமான செயல்பாடுகளில் தலையிடும் பாகிஸ்தானின் இந்தச் செயல் ஏற்கத்தக்கதல்ல; பத்திரிகையாளர்களை மறைமுகமாக மிரட்டும் அரசின் போக்கு ஜனநாயகத்துக்கு எதிரானது. டெக்லானுக்கு எதிரான நடவடிக்கையை பாகிஸ்தான் வாபஸ் பெற வேண்டும் என அமெரிக்க, பிரிட்டன் பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
தேர்தல் புறக்கணிப்பு: பாகிஸ்தானின் நாடாளுமன்றம் மற்றும் மாகாணத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்த வலது சாரி ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி, தேர்தலைப் புறக்கணிப்பதாக சனிக்கிழமை காலை அறிவித்தது.
இது குறித்து அந்த கட்சி தலைமை தெரிவித்துள்ளதாவது: நாட்டின் பல வாக்குச் சாவடிகளில் மூன்று மணி நேரம் தாமதமாகவே வாக்குப் பதிவு தொடங்கப்பட்டது. ஏராளமான வாக்குச் சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதிகாரிகளின் உதவியோடு வாக்குச் சீட்டுகளில் மோசடி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பலருடைய பெயர்கள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளன.
மேலும் பல வாக்குச் சாவடிகளில் முத்தாகிதா குவாமி இயக்கத்தினர் வன்முறையில் ஈடுபட்டு வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்துள்ளனர். அதனால் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம். வாக்குப் பதிவின்போது நடைபெற்ற மோசடியைக் கண்டித்து மே 13-ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யவுள்ளோம் என தெரிவித்துள்ளது.
""வாக்குப் பதிவின்போது பெரும் மோசடி நடைபெற்றுள்ளது. கராச்சியில் மட்டும் 119 வாக்குச் சாவடிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. நாங்கள் ஏற்கெனவே பல முறை எச்சரித்தும் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என முத்தாகிதா குவாமி இயக்கமும் குற்றம்சாட்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டாசு வெடித்து விபத்து! 12 பேர் பலி! 40 பேர் படுகாயம்! | Kerala

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


