சவூதி அரேபியாவின் மெக்கா நகர் அருகே கடந்த வியாழக்கிழமை நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான இந்திய ஹஜ் யாத்ரீகர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் சனிக்கிழமை கூறியதாவது:
மெக்கா நகரில் இருக்கும் நமது நாட்டு அதிகாரிகள் உண்மை நிலவரத்தை ஆராயும் பணியிலும், காணாமல் போன யாத்ரீகர்கள் குறித்து அவர்களது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவிக்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து நமக்கு கிடைத்த புதிய தகவல்கள், கூட்ட நெரிசலில் சிக்கி 18 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கின்றன.
கூட்ட நெரிசலில் இறந்த இந்தியர்களை அடையாளம் காணும் பணியையும், உயிரிழந்தோரின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பும் பணியிலும் சவூதி அரேபிய அதிகாரிகளுடன் சேர்ந்து நமது நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் விகாஸ் ஸ்வரூப்.
ஹஜ் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த 18 இந்தியர்கள், குஜராத் (11), தமிழகம் (3), தெலங்கானா, கேரளம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் (தலா ஒருவர்) ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இதில், 4 பேர், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரசூல் அலி, உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மொய்னுதீன், குஜராத்தைச் சேர்ந்த ஹபீஜாபஹென் சதார்ஷா திவான், சையது அப்துல் ஹுசேன் என்று அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் மெக்கா அருகே மினாவில் "சாத்தான் மீது கல்லெறிதல்' நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் கடந்த வியாழக்கிழமை திரண்டிருந்தனர். அப்போது அங்கு நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 719 யாத்ரீகர்கள் பலியாகினர். மேலும், 13 இந்தியர்கள் உள்பட 863 பேர் காயமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

