அமெரிக்காவை வட கொரியா மிரட்டுவது தொடர்ந்தால், உலகம் இதுவரை காணாத அளவு சக்தி கொண்ட தங்களது 'கோப நெருப்பை' வட கொரியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அணு ஆயுதத் தாக்குதலைக் குறிப்பிட்டே டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார் என்று கருதப்படும் நிலையில், அவரது இந்தப் பேச்சு குறித்து சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியும் அதிருப்தி தெரிவித்துள்ளன.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் சோதித்து வரும் வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
எனினும், தென் கொரியாவுடன் இணைந்து தங்கள் நாட்டின் மீது படையெடுக்க அமெரிக்கா முயன்று வருவதாகக் குற்றம் சாட்டி வரும் வட கொரியா, அணு ஆயுதம் தாங்கி அமெரிக்காவைத் தாக்கும் திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணையை அண்மையில் வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
மேலும், ஏவுகணைகளின் முனைகளில் பொருத்தும் அளவுக்கு வட கொரியாவின் ஏவுகணைகளை அந்த நாட்டு விஞ்ஞானிகள் சிறிதாக வடிமைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தச் சூழலில், வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் மேலும் கடுமையாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்கு பசிபிக் கடலிலுள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான குவாம் தீவு அருகே தனது ஹுவாஸாங்-1 ஏவுகணைகளை ஏவி சோதிக்கப் போவதாக வட கொரியா கூறியது.
இதற்குப் பதிலடிகொடுக்கும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூ ஜெர்ஸி நகரிலுள்ள தனது சுற்றுலா மாளிகையில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அமெரிக்காவை மிரட்டுவதை வட கொரியா இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.