

ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் வெளிநாடு சென்றிருந்த பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை நாடு திரும்பினார்.
வெள்ளிக்கிழமை நடைபெறும் விசாரணையின்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று அவரது வழக்குரைஞர்கள் தெரிவித்தனர். ஊழல் புகார்களைத் தொடர்ந்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டபடி, நவாஸ் ஷெரீஃப் மீது மூன்று வழக்குகள் தொடரப்பட்டன. இஸ்லாமாபாதில் உள்ள நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு ஆணையம் தாக்கல் செய்த வழக்குகளில் குற்றச்சாட்டுப் பதிவு நடந்துள்ளது.
இதனிடையே, தொண்டை புற்று நோய்க்கு பிரிட்டனில் சிகிச்சை பெற்று வந்த தனது மனைவி குல்ஸுமை காண லண்டன் சென்றார் நவாஸ் ஷெரீஃப்.
கடந்த அக். 26-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் அவர் கலந்து கொள்ளாததைத் தொடர்ந்து அவருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நவ. 3-ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படுவார் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், லண்டனிலிருந்து வியாழக்கிழமை அவர் நாடு திரும்பினார். தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் வரவேற்றனர். விமான நிலையத்தில் தனி அறையில் அவர்களுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திய பின்னர், தலைநகரில் உள்ள பஞ்சாப் இல்லத்துக்குச் சென்றார். விமான நிலையத்திலிருந்து பஞ்சாப் இல்லம் செல்லும் வழியெங்கும் அவரது ஆதரவாளர்கள் திரளாக நின்று அவரை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். பஞ்சாப் இல்லத்திலும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் அவரை வரவேற்கக் காத்திருந்தனர்.
முன்னதாக, லண்டன் விமான நிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்களிடம் பேசுகையில், "உடல் நலம் குன்றிய எனது மனைவியின் அருகிலிருந்து ஆறுதல் அளிக்க வேண்டிய நேரத்தில் நீதிமன்ற அழைப்பாணையை ஏற்று நீதிமன்றத்தில் ஆஜராகச் செல்கிறேன்" என்றார். வெள்ளிக்கிழமை (நவ.3) நடைபெறும் விசாரணையின்போது அவர் கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று அவரது தரப்பு வழக்குரைஞர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
பனாமா ஆவண கசிவைத் தொடர்ந்து நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுப்பப்பட்டது.
அது குறித்த வழக்கில் அவரைத் தகுதி நீக்கம் செய்து கடந்த ஜூலை மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் தனது பிரதமர் பதவியையும் எம்.பி. பதவியையும் ராஜிநாமா செய்தார்.
அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் 3 வழக்குகளை தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு பதிவு செய்துள்ளது. லண்டனில் குடும்பத்தினர் பெயரில் குடியிருப்புகள், மகன்களின் வெளிநாட்டு நிறுவனங்களில் சட்ட விரோதமாக ஊதியம் பெற்றுப் பணியாற்றியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நவாஸ் மீது சுமத்தப்பட்டுள்ளன.
தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கத்தோடு சுமத்தப்பட்டவை என்றும், தான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும் அவர் கூறி வருகிறார்.
இந்த நிலையில் அவர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பெற்று உடல் நிலை தேறி வந்த மனைவி குல்ஸுமைக் காண கடந்த ஆக. 31-ஆம் தேதி புறப்பட்டுச் சென்றார்.
அவர் லண்டனில் இருந்தபோது, ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகவில்லை என்பதால் அவரது சொத்துகளையும் வங்கிக் கணக்குகளையும் முடக்கி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அவர் நாடு திரும்பி செப்.26-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரானார்.
உடல் நிலை தேறி வரும் தனது மனைவியைக் காண மீண்டும் லண்டன் செல்லவிருப்பதால் விசாரணையில் தொடர்ந்து ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் நீதிபதியிடம் தெரிவித்தார்.
நவாஸ் ஷெரீஃப் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, அவர் வென்ற லாகூர் நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த செப். 17-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் அவரது மனைவி குல்ஸும் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.