விதிகளை மீறி இஸ்ரேல் தலைவர்களை சந்தித்ததால் சர்ச்சை: பிரிட்டனின் இந்திய வம்சாவளி அமைச்சர் பிரீதி படேல் ராஜிநாமா

விதிகளுக்குப் புறம்பாக இஸ்ரேல் தலைவர்களையும், அதிகாரிகளையும் சந்தித்ததால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் அமைச்சர் பிரீதி படேல்
விதிகளை மீறி இஸ்ரேல் தலைவர்களை சந்தித்ததால் சர்ச்சை: பிரிட்டனின் இந்திய வம்சாவளி அமைச்சர் பிரீதி படேல் ராஜிநாமா
Updated on
1 min read

விதிகளுக்குப் புறம்பாக இஸ்ரேல் தலைவர்களையும், அதிகாரிகளையும் சந்தித்ததால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் அமைச்சர் பிரீதி படேல் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்தார்.
பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சர்வதேச மேம்பாட்டுப் பிரிவு அமைச்சரான பிரீதி படேல், கடந்த ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலில் சுற்றுலா சென்றிருந்தார்.
அப்போது, வெளியுறவுத் துறை அமைச்சர் போரிஸ் ஜான்ஸனிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல், அந்த நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்பட பல்வேறு தலைவர்களையும், அதிகாரிகளையும் பிரீதி படேல் சந்தித்துப் பேசியதாக கடந்த வாரம் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், அந்த சந்திப்புகள் குறித்து உரிய முறையில் தகவல் வெளியிடப்படாததால், அமைச்சர்களுக்கான விதிமுறைகளை ப்ரீதி மீறியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, அவர் தனது தவறுக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி போர்க் கொடி உயர்த்தியது.
இதையடுத்து, தனது செயலுக்காக பிரீதி படேல் மன்னிப்பு கேட்டதாகவும், அதனை பிரதமர் தெரசா மே ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தச் சூழலில், இஸ்ரேல் உள்துறை அமைச்சர் கிலாத் எர்டனை பிரீதி படேல் பிரிட்டனில் கடந்த செப்டம்பர் மாதம் சந்தித்துப் பேசிய புதிய தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இது தொடர்பான சர்ச்சை மேலும் சூடுபிடித்தது.
இதன் விளைவாக, உகாண்டா மற்றும் எத்தியோப்பிய நாடுகளுக்கு அரசுமுறை சுற்றுப் பயணமாக புதன்கிழமை புறப்பட்ட பிரீதி படேலை, பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு திரும்ப வருமாறு பிரதமர் தெரஸா மே உத்தரவிட்டார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை லண்டன் திரும்பிய பிரீதி படேல், தனது செயல்களுக்கு மீண்டும் மன்னிப்பு கோரியதுடன், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். அதீத ஆர்வத்தின் காரணமாகவே இஸ்ரேல் தலைவர்களைச் சந்தித்தாக தனது மன்னிப்புக் கடிதத்தில் பிரீதி படேல் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தைப் பூர்வீமாகக் கொண்ட பிரீதி படேல், கன்சர்வேடிவ் கட்சியின் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நட்சத்திரமாகக் கருத்தப்பட்டார். கட்சியின் தலைவராவும், அடுத்த பிரதமர் பதவி வேட்பாளாராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், சர்ச்சை காரணமாக அவர் ராஜிநாமா செய்துள்ளது அவர் அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய முடக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com