இந்தியாவுக்கு அடுத்த வாரம் வருகிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், இந்தியாவில் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.


அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், இந்தியாவில் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். இந்த பயணத்தின்போது, இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து இந்தியத் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹிதர் நௌரட், வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சவூதி அரேபியா, கத்தார், ஸ்விட்சர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 5 நாடுகளில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் டில்லர்சன் ஒரு வாரம் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த பயணத்தின் முதல்கட்டமாக, சவூதி அரேபியா நாட்டுக்கு டில்லர்சன் சனிக்கிழமை (அக்.21) செல்கிறார். அப்போது அவர், சவூதி அரேபியா, இராக் ஆகிய நாடுகளிடையேயான ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதையடுத்து, யேமன் உள்நாட்டுச் சண்டை, ஈரான் விவகாரம் உள்ளிட்ட பிராந்திய விவகாரங்கள் குறித்து சவூதி அரேபியா நாட்டுத் தலைவர்களுடன் டில்லர்சன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதன்பின்னர், கத்தார் நாட்டுக்குச் செல்லும் டில்லர்சன், அந்நாட்டுத் தலைவர்கள், அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஈரான், இராக் விவகாரம், வளைகுடா பிராந்தியத்தில் நடைபெறும் மோதல்கள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
பின்னர், பாகிஸ்தானுக்குச் செல்லும் டில்லர்சன், இஸ்லாமாபாதில் அந்நாட்டு மூத்த தலைவர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். அப்போது பாகிஸ்தான்-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், ஆப்கானிஸ்தான் தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய கொள்கையின் வெற்றிக்கு பாகிஸ்தான் ஆற்ற வேண்டிய முக்கிய பங்களிப்பு குறித்தும், இரு நாடுகளுக்கு இடையே பொருளாதார ரீதியிலான உறவுகளை விரிவுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்தியாவுக்கு வரும் டில்லர்சன், இந்திய அரசு மூத்த தலைவர்களுடன், ராஜீய உறவுகளை வலுப்படுத்துவது, இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவது ஆகியவை குறித்து பேச்சு நடத்தவுள்ளார். டில்லர்சனின் இந்திய பயணமானது, அமெரிக்காவில் கடந்த ஜூன் மாதம் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்தபோது வகுக்கப்பட்ட திட்டத்தை முன்கூட்டி செயல்படுத்த உதவும்.
இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, ஸ்விட்சர்லாந்துக்கு செல்லும் டில்லர்சன், ஜெனீவாவில் ஐ.நா. சபையின் அகதிகளுக்கான தூதரக ஆணையரை சந்தித்து பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசவுள்ளார் என்றார் ஹிதர் நௌரட்.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தெற்காசிய பிராந்தியத்தில் டில்லர்சன் சுற்றுப்பயணம் செய்ய இருப்பது இதுவே முதல்முறையாகும். எனினும், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் டில்லர்சன் சுற்றுப்பயணம் செய்ய இருக்கும் தேதி வெளியிடப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...