ஹெச் 4 விசா அனுமதி ரத்து: டிரம்ப் நிர்வாகம் பரிசீலிக்க அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா அடிப்படையில் தங்கிப் பணியாற்றும் வெளிநாட்டினரின் மனைவி அல்லது கணவர் பணியாற்றுவதற்கு தடை விதிக்கும் முடிவை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை
ஹெச் 4 விசா அனுமதி ரத்து: டிரம்ப் நிர்வாகம் பரிசீலிக்க அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்
Updated on
1 min read

அமெரிக்காவில் ஹெச்-1பி விசா அடிப்படையில் தங்கிப் பணியாற்றும் வெளிநாட்டினரின் மனைவி அல்லது கணவர் பணியாற்றுவதற்கு தடை விதிக்கும் முடிவை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் ஹெச்-1பி விசா அடிப்படையில் வெளிநாட்டினர் ஏராளமானோர் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களது மனைவி அல்லது கணவரை ஹெச்-4 விசா அடிப்படையில் அமெரிக்காவுக்கு அழைத்து வரலாம். அவர்களும் அமெரிக்காவில் பணியாற்றலாம். இந்தத் திட்டத்தை முந்தைய ஒபாமா அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், ஹெச்-4 விசா திட்டத்தை ரத்து செய்வதற்கு டிரம்ப் நிர்வாகம் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு தொழில் துறையினரும், நாடாளுமன்ற எம்.பி.க்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 15 எம்.பி.க்கள், உள்துறைச் செயலர் கிறிஸ்ட்ஜென் எம்.நீல்சனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது: 
அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவில் பணியாற்றும் வெளிநாட்டினரின் கணவர் மற்றும் மனைவி உடன் தங்கிப் பணியாற்றுவதற்கு கடந்த 2015-ஆம் ஆண்டு வரை அனுமதி அளிக்கப்படவில்லை. தங்களது வாழ்க்கைத் துணைவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்காததால், குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட முடியாமல் பல திறமை மிக்க ஹெச்-1பி விசாதாரர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறினர்.
குடும்பத்தில் ஒருவருடைய வருமானத்தை மட்டும் வைத்து சிலிகான்வேலி போன்ற செலவு மிகுந்த நகரங்களில் வசிக்க முடியாத நிலைமை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு 3 ஆண்டுகளுக்கு முன் ஹெச் 4 விசா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன் பிறகு, ஹெச்-1பி விசாவில் பணியாற்றும் வெளிநாட்டினரின் வாழ்க்கைத் துணைவர்களை பணியாற்ற அனுமதித்ததால், அவர்களின் நிதிச் சுமை குறைந்து, குடும்ப வருமானம் இரட்டிப்பாகியது. அவர்களில் பலர், அமெரிக்காவில் முதலீடு செய்து, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் பங்காற்றி வருகின்றனர். அவர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றினால், அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, தங்களது திறமைகளை அமெரிக்க தொழில்துறைக்கு எதிராகப் பயன்படுத்துவர். ஹெச் 4 விசா அனுமதி விவகாரத்தில் நாட்டின் பொருளாதாரமும், வீட்டின் ஒற்றுமையும் அடங்கியுள்ளது. எனவே, அரசு திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, அமெரிக்காவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வாஷிங்டனில் உள்ள இந்தியத் தூதரகம், இந்த விவகாரத்தை டிரம்ப் நிர்வாகத்திடமும், நாடாளுமன்ற எம்.பி.க்களிடமும் கொண்டு சென்றுள்ளதாகத் தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com