பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் யாரும் அழைக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விழாவை மிக எளிமையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் வியாழக்கிழமை கூறியதாவது:
அதிபர் மாளிகையில் இந்த மாதம் 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான் கானுக்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள்.
அந்த நிகழ்ச்சியை மிகவும் எளிமையாக நடத்த விரும்புவதால், வெளிநாட்டுத் தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்பட மாட்டாது என்று தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி தெரிவித்துள்ளது என்றார் அவர்.
இதற்கிடையே, தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி வெளியிட்டுள்ள சுட்டுரை (டுவிட்டர்) பதிவிலும், இம்ரானின் பதவியேற்பு விழாவுக்கு வெளிநாட்டுத் தலைவர்கள் யாரும் அழைக்கப்பட மாட்டார்கள் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, தனது பதவியேற்பு விழாவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க இம்ரான் கான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
எனினும், தற்போது அந்த நிலைப்பாட்டை அவர் திடீரென மாற்றியுள்ளது இந்த அறிவிப்பிலிருந்து தெரிய வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி(பிடிபி) 116 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதையடுத்து, சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்கும் முயற்சியில் இம்ரான் கட்சி இறங்கியுள்ளது. மேலும், நாட்டின் புதிய பிரதமராக இம்ரான் கான் வரும் 11-ஆம் தேதி பதவியேற்பார் என்றும் அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
அந்தப் பதவியேற்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சார்க் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று இம்ரான் கட்சி விரும்புவதாகவும், அதுகுறித்து பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்திடம் அந்தக் கட்சி ஆலோசனை கேட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
எனினும், நிகழ்ச்சிக்கான அழைப்பை பிரதமர் மோடி நிராகரித்துவிட்டால், அது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடும் என்று அமைச்சகம் கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










